காதல்.. மனித வாழ்க்கையில் முதன்முதலாக தோன்றிய உணர்வு.. இந்த உணர்வை உணராத ஒருவர் இருப்பார் என்றால் அது கடவுளாக தான் இருக்க வேண்டும். பிறப்பு இறப்பு எப்படி நிச்சயமோ அப்படித்தான் மனித வாழ்க்கையில் காதல் நிச்சயம். அந்த காதலை அறியாத, புரியாத மனிதர்கள் சிலர் இருந்தாலும் காதலை ரசிக்காமல் இருக்க முடியாது. அவர்களால் அப்படிப்பட்ட காதலை காவியமாகவும் கல்லறையாகவும் நாம் படித்தும் தெரிந்து இருப்போம். நாம் காதலிக்கும்போது ஏற்படும் உணர்வை திரையில் நாம் பார்க்கும்போது நம்மை மீறிய பல சலனங்கள் நம்முள் எழும். அம்பிகாபதி, அமராவதி முதல் பல காதல் கதைகளை திரையில் கண்டு ரசித்திருப்போம்,
கடந்த சில வருடங்களாக தமிழ் திரையில் கதையில் காதல் இருந்தாலும் காதல் கதை வருவது குறைவாக இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் வெளி வந்திருக்கும் படமே வித் லவ். படம் என்ன சொல்ல வருகிறது ? வாருங்கள் பார்ப்போம்.
அபிஷன் ஜீவந்தும் அனஸ்வரா ராஜனும் வீட்டார் ஏற்பாட்டில் மணமுடிக்க பெண்பார்க்கும் படலமாக ஹோட்டலில் தனியாக இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். பேச்சுவாக்கில் தெரிகிறது, அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்பது. நாயகன் சீனியர். நாயகி ஜூனியர். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போது நாயகன் பள்ளி காதலை சொல்ல முடியாமல் போன காதலை சொல்ல, நாயகியும் சொல்ல முடியாமல் போன காதலை சொல்ல இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப் போகின்றன.
நாயகி நீ யாரிடம் காதலை சொல்ல நினைத்தாயோ அவர்களைத் தேடிப் பார்த்துச் சொல்லிவிடு, நானும் என் காதலனை பார்த்து காதலை சொல்லிவிட்டு நம் திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து செல்ல பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.
நாயகன் அபிஷன் ஜீவிந்த் பள்ளிக்காலத்தில் ஒரு கெட்டப் தற்கால காலத்தில் ஒரு கெட்டப் என இரு வேறு வித்தியாசங்களை தன் உடல் மொழியிலும் வசனம் மொழியிலும் நம்மை ரசிக்க வைக்கிறார். வாலிப இளைஞர்கள் இத்திரைப்படத்தை பார்க்கும் போது தன்னை அபிஷன் ஜீவிந்தாக கற்பனை செய்து கொள்வார்கள் என்பது நம் அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்த அளவுக்கு வாலிப குறும்பும் சேஷ்டைகளும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். வாழ்த்துக்கள். தமிழ் திரை உலகில் இவரின் எதிர்கால படிக்கட்டுகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை.
அனஸ்வரா ராஜன் நாயகி.. குறுகுறு பார்வை. முத்து சிரிப்பழகி என பார்க்கும் ரசிகனை கிறங்க வைக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் தமிழ்த் திரையில் பார்த்த கதாநாயகிகளை அனைவரையும் ஒன்றாக பார்த்தது போல் இருக்கிறது முகம். ஒவ்வொரு சாயலிலும் ஒவ்வொருவராக நமக்குத் தெரிகிறார். ஒருவர் கோபத்தை, ஆத்திரத்தை, அழுகையை, அதிசயத்தை என பல முக பாவங்களை காட்டுவது எளிது.
ஆனால் உள்ளிருக்கும் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் தவிப்பு மிகவும் கஷ்டமான நடிப்பு.. அதை அழகாக செய்து இருக்கிறார் நம் நாயகி.. முன்னணி நாயகிகளுக்கு போட்டியாக தமிழ் திரையில் மிகப்பெரிய வலம் வருவார் என்பது நமது கணிப்பு.
சித்தப்பு சரவணன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக தங்கள் நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். டூரிஸ்ட் பேமிலி வெற்றியினால் சிறப்பு தோற்றத்தில் நம் சசிகுமார் அவர்கள் ஒரு காட்சியில் வந்து போகிறார்.
எழுத்து இயக்கம் மதன்.. இவருடைய முந்தைய படமான டூரிஸ்ட் ஃபேமிலியில் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும் அவர்களை விரும்பும் மற்றவர்களையும் சிறப்பாக காட்டி இருந்தார்.
இந்த வித் லவ் திரைப்படத்தில் காதலை காதலாக மட்டும் காட்டாமல் அதற்குள் ஒரு உணர்வை உள்ளுக்குள் வைத்து கடந்த கால காதலையும் நிகழ்கால காதலையும் ஒரே நேர் கோட்டில் வைத்து இரு வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார் அதற்கு உதாரணம்.
நாயகி, தான் பள்ளியில் பயிலும் காலத்தில் காதலை சொல்ல நினைக்கும் காதலனிடம் தற்போது சொல்லும்போது அந்தக் காதலன் இன்னும் அவரை காதலிப்பது தெரிந்து உருகுவது தவறு. அப்போது காதலித்தேன் இப்போது காதலிக்கவில்லை என்று சொல்லும் இடம் காலமாற்றத்தின் உணர்வுகளையும் ஒரு யதார்த்த மனிதனின் உண்மைகளைம் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
இயக்குனருக்கு பக்கபலமாக இருப்பது இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பின்னணி செய்யும் பாடல்களும் மிகவும் சிறப்பு. ஒளிப்பதிவு (DOP) – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா காட்சிக்கு காட்சி கண்ணுக்கு குளிர்ச்சியாக படமாக்கி இருப்பது மிகச் சிறப்பு.
வித் லவ் – காதல் கொண்டாட்டம்
நடிகர்கள்
அபிஷன் ஜீவிந்த் – சத்யசீலன் ( சத்யா )
அனஸ்வரா ராஜன் – மோனிஷா
தேனி முருகன் – சத்யாவின் அப்பா
“கலைமாமணி” சரவணன் – சாமிநாதன் சார்
ஹரிஷ் குமார் – தினேஷ்
காவ்யா அனில் – அனிஷா வித் லவ்
சச்சின் நாச்சியப்பன் – பாலாஜி
சாச்சனா – சந்தியா
R.J. ஆனந்தி – சத்யாவின் அக்கா
டிம்பிள் கண்ணா – விநோதினி
சித்தார்த் – ஜாஃபர்
தொழில்நுட்ப குழு
எழுத்து , இயக்கம் – மதன்
தயாரிப்பு – சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான்
இசை – ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு (DOP) – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
எடிட்டிங் – சுரேஷ் குமார்
கலை இயக்கம் – ராஜ் கமல்
இணை தயாரிப்பாளர் – விஜய் எம்.பி
நிர்வாக தயாரிப்பாளர் – A. பாலமுருகன்
பாடல் வரிகள் – மோகன் ராஜன், உமா தேவி, மதன்
நடன அமைப்பு – சந்தோஷ்
சண்டை பயிற்சி – PC ஸ்டண்ட்ஸ் (கார்த்திக்)
உடை வடிவமைப்பு – பிரியா ரவி
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – சரத் J. சாமுவேல்
ஸ்டில்ஸ் – மணியன்
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் – ஜோஸ் கிறிஸ்டோ
மக்கள் தொடர்பு – யுவராஜ்