செய் செய்யாதே – விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் காதல், அண்ணன்-தங்கை பாசம், தாய்ப்பாசம், கிரைம், ஹாரர், மிராக்கிள் என எத்தனையோ படங்களை பார்த்திருப்போம். அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஒரு புதிய முயற்சியாக வந்திருக்கும் படம் தான் ‘செய் செய்யாதே’.

படம் என்ன சொல்கிறது?

மதுரை அரசு மருத்துவமனையில் டீனாக இருப்பவர் தான் இந்த படத்தின் கதை நாயகன். ஏழை மக்கள் மருத்துவத்திற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, அரசின் மருத்துவத்தை அவர்களுக்கு அளித்து உயிர்களை காப்பாற்றுகிறார்.

இது ஒருபுறம் இருக்க, அவரது மனைவியோ தனியார் மருத்துவமனை கட்டி, அதற்காக வாங்கிய கடனை அடைக்க நோயாளிகளிடம் பணம் பறிக்கிறார்.

இன்னொரு புறம், தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் பணம் வாங்கி அவர்களை டாக்டராக்கும் அரசியல்வாதி. மறுபுறம் மருந்து மாத்திரைகளின் மாஃபியா.

இப்படி மருத்துவ உலகின் இருட்டு பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பலம்:

பெரிய நோய்களுக்கு தனியார் மருத்துவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கச் சொல்லும் அதே மருந்து, வேறு பெயரில் அரசு மருத்துவமனையில் குறைந்த விலையில் அல்லது இலவசமாக கிடைக்கிறது என்ற உண்மையை தைரியமாக சொல்லியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, நாம் உடம்புக்கு நல்லது என்று குடிக்கும் கிரீன் டீ, அதன் பை கவர் மற்றும் நாம் பயன்படுத்தும் கப்பில் உள்ள மெழுகு சூட்டில் உருகி வயிற்றுக்குள் சென்றால் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படும் என்பதை ஆதாரத்துடன் விளக்கியிருப்பது அருமை.

அரசு மருத்துவமனை என்றாலே சாதாரணம், இலவசம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் தனியாரில் லட்சக்கணக்கில் செலவாகும் பல சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசம் என்ற விழிப்புணர்வை மிக அழகாக கொடுத்திருக்கிறார்.

கொரோனா எப்படி வந்தது, அதற்கான காரணம் என்ன என்பது போன்ற நாம் அறியாத பல மருத்துவ விஷயங்களையும் மக்களுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறார்.

சினிமாவுக்காக ஒரு சிறு காதல், பாடல், நகைச்சுவை காட்சிகளையும் சேர்த்து திரைக்கதையை ரசிக்கும்படி அமைத்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில்:

பொழுதுபோக்கிற்காக பல படங்களை பார்த்திருப்போம். ஆனால் இந்த படம் நம் வாழ்க்கைக்கு பயன்படும், மருத்துவத்தின் மகிமையை உணர்த்தும் படம். ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

பாருங்கள், பயன் பெறுங்கள்!

Comments (0)
Add Comment