மஞ்சுவிரட்டு (ஜல்லிக்கட்டு) போட்டியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கமர்ஷியல் திரைப்படம் தான் வடம். மாடுகளை உயிராக நேசிக்கும் வெற்றிவேல் என்ற இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.. இந்த கதாபாத்திரத்தில் விமல் நடித்துள்ளார்.
சிறு வயதில் அடிமாட்டுக்கு செல்ல இருந்த ஒரு கன்றை காப்பாற்றி, அதை அன்புடன் வளர்த்து மஞ்சுவிரட்டு காளையாக உருவாக்குகிறார். அந்த காளையும் வெற்றிவேலின் வாழ்க்கையும் ஒன்றாகிப் போகும் நிலையில், அதைச் சுற்றி உருவாகும் பகை, போட்டி, காதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களே கதையின் மையமாக அமைந்துள்ளன.
நாயகனாக வரும் விமல் தனது வழக்கமான எளிமையான மற்றும் இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்தை நம்பகமாக காட்டுகிறார். கிராமத்து இளைஞனின் உணர்வுகளையும், மாடுகளின் மீது உள்ள பாசத்தையும் இயல்பாக வெளிப்படுத்துகிறார். நாயகியாக வரும் சனக்ஷா ஸ்ரீ திரையில் அழகாக தோன்றினாலும், அவருக்கான காட்சிகள் மற்றும் கதையின் பங்கு குறைவாக இருப்பது சிறிய குறையாக உணரப்படுகிறது..
படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நட்ராஜ் மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர் தங்கள் அனுபவமான நடிப்பால் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறார்கள்.. குறிப்பாக சில உணர்ச்சி மற்றும் மோதல் காட்சிகளில் இவர்களின் நடிப்பு படத்திற்கு வலுவாக அமைகிறது..
படத்தின் பெரிய பலமாக இருப்பது மஞ்சுவிரட்டு காட்சிகளே… காளைகள் ஓடும் களம், போட்டியின் பரபரப்பு, கிராமத்து மக்களின் உற்சாகம் போன்றவற்றை ஒளிப்பதிவு அழகாக பதிவு செய்துள்ளது.. இந்த காட்சிகள் திரையில் உணர்ச்சியும் உற்சாகமும் ஏற்படுத்துகின்றன.. பின்னணி இசையும் சில இடங்களில் காட்சிகளின் தீவிரத்தை உயர்த்துகிறது..
ஆனால் கதை மற்றும் திரைக்கதை புதிய தன்மையை அதிகமாக வழங்கவில்லை.. சில காட்சிகள் பழைய கிராமத்து கமர்ஷியல் தமிழ் படங்களை நினைவுபடுத்தும் விதமாக இருக்கிறது.. அதனால் கதையின் அடுத்த கட்டம் என்ன என்பது சில இடங்களில் எளிதாக கணிக்கக்கூடியதாக மாறுகிறது.. இருந்தாலும், கிராமத்து வாழ்க்கை, மாடுகளின் மீதான பாசம் மற்றும் தென் மாவட்டத்தின் கலாச்சாரத்தை காட்டும் முயற்சி படத்தில் காணப்படுகிறது..
மொத்தத்தில், மஞ்சுவிரட்டு போட்டி, கிராமத்து உணர்வு, காதல் மற்றும் கமர்ஷியல் அம்சங்களை இணைத்து ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக வடம் அமைந்துள்ளது.. புதிய கதையை எதிர்பார்க்காமல், கிராமத்து பின்னணியில் வரும் கமர்ஷியல் படங்களை ரசிப்பவர்களுக்கு இது ஒரு சராசரி பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும்.