காதல் ரீசெட் ரிப்பீட்’ – விமர்சனம்

 

ஒருதலைக் காதலின் மென்மையான உணர்வுகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் காதல் திரைப்படம் தான் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’.. நாயகன் மதும்கேஷ், நாயகி ஜியா சங்கரை தூரத்தில் இருந்து ஒருதலையாக நேசித்து வருகிறார்.. ஆனால் ஜியா சங்கர் தனது நண்பரான அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இதற்கிடையில் நினைவிழப்பு நோயால் பாதிக்கப்படும் ஜியா, தினமும் தூங்கி எழுந்தவுடன் முந்தைய நாள் நடந்தவற்றை மறந்து விடுகிறார். இந்த சூழலில், ஜியாவிடம் தன்னை காதலனாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடன் நெருக்கமாக பழகத் தொடங்குகிறார் மதும்கேஷ். இந்த பொய்யான அறிமுகம் அவர்களின் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதே கதையின் மையம்.

ஒருதலைக் காதலின் ஏக்கத்துடன் வாழும் இளைஞராக மதும்கேஷ் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். அவரது அமைதியான நடிப்பு கதாபாத்திரத்தின் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்துகிறது. அறிமுக நடிகையான ஜியா சங்கர், அழகும் இயல்பான நடிப்பும் மூலம் பார்வையாளர்களை எளிதில் கவர்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக இருப்பதால் அவருக்கு அதிகமான நடிப்பு வாய்ப்பு கிடைத்திருக்கிறது; அதை அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அர்ஜுன் அசோகனும் தனது கதாபாத்திரத்தில் சரியான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ். பாஸ்கர் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களின் நடிப்பு படத்திற்கு கூடுதல் வலிமை அளிக்கிறது. ஸ்காட்லாந்தின் அழகிய இயற்கை காட்சிகளை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா கண்கவர் வகையில் பதிவு செய்துள்ளார்.

ஹாரிஷ் ஜெயராஜின் இசை காதல் உணர்வுகளை மேலும் இனிமையாக்குகிறது.. பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுடன் நன்றாக பொருந்தி கதையின் உணர்ச்சிகளை உயர்த்துகின்றன.

முக்கோண காதலை மென்மையான உணர்வுகளுடன் சொல்ல முயன்ற இயக்குநர் விஜய், சில அழகான காதல் தருணங்களையும் உணர்ச்சிகரமான காட்சிகளையும் உருவாக்கியுள்ளார். மொத்தத்தில், அமைதியாக நகரும் இந்த காதல் திரைப்படம், காதல் உணர்வுகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு இனிமையான அனுபவத்தை தருகிறது

 

kadhal reset repeateகாதல் ரீசெட் ரிப்பீட்’ – விமர்சனம்