தன்னுடைய மக்கள் தன் பேச்சை தட்டாத பெண் என்று கர்வப்படும் தந்தையின் பேராசையில் இடியாய் வந்து விழுகிறது பெண் பார்க்கும் படலம்.. நாயகி தேவிகாவை பெண் பார்க்க வரும் மாப்பிளை வீட்டார், தேவிகாவை பார்த்ததும் இவருக்கு தான் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதே, இவரையும் இவர் கணவரையும் தேனிலவில்நான் சந்தித்தேன் என்று சொல்ல, அதிர்ச்சி அடைகிறார் தேவிகா.
எப்படி நமக்கே தெரியாமல் திருமணம் நடந்தது என்று குழப்பத்தில் இருக்க தன் தந்தையிடம், “நான் உங்கள் மகள்.. உங்கள் பேச்சை மீறாத மகள்.. இது பொய் என்று நிரூபிக்கிறேன்” என்று சவால் விட படத்தின் வேகம் அதிகரிக்கிறது.
தனக்கு யார் கூட திருமணம் நடந்தது என்று அறிந்து அவரை காணப் போகும் தேவிகா, நான் உங்கள் மனைவி என்று சொல்ல அவரும் அதிர்ச்சி அடைகிறார். நீங்கள் விவாகரத்து கொடுத்தால் தான் என் திருமண நடைபெறும் என்று சொல்ல விவாகரத்துக்கு ஒத்துக் கொள்கிறார் நாயகன். அவருக்கும் புரியவில்லை. எப்போது திருமணம் நடந்தது என்று. பார்க்கும் மக்களுக்கும் நமக்கும் ஒரு குழப்பம்.. இடைவேளைக்குப் பிறகு தீர்வு காண்கிறது படம்.
ஒரு நகைக்கடை முதலாளியின் மகன் கடையில் வேலை செய்யும் பெண்ணை காதலிக்க அதை அறிந்த முதலாளி இவர்கள் இருவரையும் கொலை செய்து விடுகிறார். அவர்கள் ஆன்மா இவர்கள் உடம்பில் புகுந்து தங்கள் பூலோக வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறது. இதுதான் முன்கதை. விவாகரத்து பெற்ற நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் மலர, பிறகு என்ன.. பிரச்சனைகளுக்கு பிறகு திருமணம்.
நாயகன் தேவ் தன் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் இவர் யூட்யூபராக வருகிறார். அந்த யூட்யூபின் பெயர்தான் யோலோ. பிராங்க் வீடியோ என தன் யூட்யூப் சேனலை பிரபலமாக்க இவர் எடுக்கும் முயற்சிகள் அருமை. அதன் மூலம் கோமாவுக்கு செல்லும் நகைக்கடை முதலாளியின் மனைவி, அதனால் ஏற்படும் பிரச்சனைகள், பிறகு நகைக்கடை முதலாளியை கொலை செய்த குற்றம், இப்படி பல சிக்கல்களை உருவாக்கிய இயக்குநர் அந்த குழப்பத்தை தெள்ளத் தெளிவாக தீர்க்கிறார்.
நாயகி தேவிகா அழகுச்சிலை. முதல் காட்சியில் படிக்கட்டில் இறங்கி வரும்போது ஒரு உலக அழகி வருவது போல் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இவரின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. படவா கோபி இவர்தான் நாயகியின் தந்தை. எப்போதும் போல இவர் தன் நடிப்பை வழங்கி இருக்கிறார். நித்தியானந்தா சாமி, அதை ஞாபகப்படுத்தும் சாமியாராக ஒருவர் கொஞ்சம் ஓவர் தான் அவர் நடிப்பு.
தனக்கே தெரியாமல் தனக்கு திருமணம் நடந்தது எப்படி என்ற கதைக்களத்திற்கு பேயை வரவழைத்து பதில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். கதைக்களம் புதியது என்றாலும் திரைக்கதையில் தொய்வு ஏற்படுவதால் படத்தின் வேகம் கொஞ்சம் குறைகிறது.
யோலோ – பேய்க்கும் பேய்க்கும் காதல்