நடிகர்கள்: அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி, ஏஞ்சலின், அஞ்சு குரியன், சுதாகர், யஷஸ்ரீ, ஜோனிடா மற்றும் பலர்
இயக்கம்: ஆகாஷ் பாஸ்கரன்
இசை: தமன் எஸ்
படம் என்ன சொல்ல வருகிறது?
மறைந்த நடிகர் முரளி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘இதயம்’ படத்தின் கரு – “சொல்ல முடியாத காதல்”. அந்த ஒற்றை வரியை மையமாக வைத்து, இந்தக்காலத்துக்கு ஏற்றாற்போல ஜனரஞ்சகமாகவும், பிரமாண்டமாகவும், பொழுதுபோக்காகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் படம்தான் ‘இதயம் முரளி’.
கதை
தாய்-தந்தையை இழந்து, மாமா நட்டியின் பாதுகாப்பில் வளரும் முரளி – அதர்வா. பள்ளியின் இறுதி ஆண்டில் படிக்கும் போது ப்ரீத்தி முகுந்தன் மீது காதல் வருகிறது. ஆனால் சொல்ல முடியாமல் தவிக்கிறான். அந்த நேரத்தில் எதிர்பாராத திருப்பம்.
அடுத்து மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது இரண்டாவது காதல். அங்கும் சொல்லத் தவறுகிறான். மூன்றாவதாக திருமணம் நிச்சயமாகிறது. அப்போதுதான் அமெரிக்காவில் இருக்கும் முதல் காதலி ப்ரீத்திக்கு திருமணப் பத்திரிகை கொடுக்க நண்பர்களுடன் அமெரிக்கா செல்கிறான். அங்கே போய் தன் காதலை சொன்னானா? இல்லையா? என்பதே மீதிக் கதை.
நடிப்பு மற்றும் உழைப்பு
அதர்வா – “தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் பதினாறடி பாய்வான்” என்பதை உண்மையாக்கியிருக்கிறார். மனதிற்குள் காதலை பூட்டி வைத்துக்கொண்டு தவிக்கும் இளைஞனின் முகபாவங்கள், உடல்மொழி அபாரம். ஒவ்வொரு காதலிலும் வரும் தடைகளை, ஏக்கங்களை தன் தோளில் சுமந்து சிறப்பாக செய்திருக்கிறார்.
நட்டி – மாமாவாக வரும் நட்டி வழக்கமான காமெடி பாணியிலிருந்து மாறி, அக்கறையான, பொறுப்பான கார்டியனாக முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகிகள் மூவரும் – ரம்பை, மேனகை, ஊர்வசி போல தேவலோக அழகிகளாக வந்து கவர்கிறார்கள். ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், ஏஞ்சலின் மூவருமே ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போட்டு நடித்து நம் ரசனைக்கு தீனி போடுகிறார்கள்.
மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குநரின் வெற்றி
இந்தக் காலத்தில் காதல் கதை எடுப்பதே பெரிய ரிஸ்க். அதை எந்தத் தொய்வும் இல்லாமல், காட்சிக்கு காட்சி சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.
வாலிபத்தின் ஏக்கங்கள், ஆழ்மன உணர்வுகளை மிக இயல்பாகவும் எளிமையாகவும் சொல்லியிருக்கிறார். உதாரணம்: பள்ளிப் பருவத்தில் “முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும்” என நான்காம் வகுப்பு மாணவர்கள் பேசும் காட்சி. நாயகனின் முதல் காதலை சொல்ல வரும் நேரத்தில் இயக்குநர் வைக்கும் ‘ட்விஸ்ட்’ மிகச் சிறப்பு.
ரயில் நிலைய காட்சியில் சின்னி ஜெயந்த் வந்து ‘இதயம்’ பட நினைவுகளை கிளறுவது ரசிகர்களுக்கான ட்ரிப்யூட். லாஜிக் பார்காமல் ரசித்துவிட வேண்டிய இடம் அது.
தொழில்நுட்பம்
தமன் எஸ் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளுக்கு பலம் சேர்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் படத்தின் பிரமாண்டத்திற்கு உதவியிருக்கின்றன.
மொத்தத்தில்
‘இதயம் முரளி’ என்பது வெறும் காதல் படம் இல்லை. “சொல்லாமல் விட்ட காதல் எவ்வளவு பெரிய வலி” என்பதை நினைவுபடுத்தும் படம்.
கடந்த கால நினைவுகளை மதித்துக்கொண்டே, இன்றைய இளைஞர்களின் காதலையும் பேசியிருக்கிறது. குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம்.
இதயம் முரளி – சொல்லாத காதலின் சுகமான வலி.