மஹேஷ் பாபுவின் ஜிஎம்பி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், வெங்கடேஷ் மஹா இயக்கத்தில் வெளியான படம் ‘ராவ் பகதூர்’. சத்யதேவ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படம் தெலுங்கு சினிமாவில் அரிதாக வரும் ஒரு சோதனை முயற்சி.
படம் என்ன சொல்ல வருகிறது
காலம் 1968 முதல் 1991 வரை. புவனம் ராமப்பா ராவ் பகதூர் – சத்யதேவ். சுதந்திரத்துக்கு பிறகு மதிப்பிழந்து போன ஒரு சமஸ்தானத்தின் வாரிசு. இளமையில் உலகம் சுற்றி வந்தவர், பின் குடும்ப வாழ்கையில் நுழைகிறார். நர்ஸ் ரேணுகா – தீபா தாமஸை காதலித்து திருமணம் செய்கிறார்.
ஆனால் வாழ்க்கை அவரை சோதிக்கிறது. கல்லீரல் புற்றுநோய், மனநல பிரச்சனை, மதுவுக்கு அடிமை. டாக்டர்கள் 4 மாதம்தான் என்கிறார்கள். ஆனால் அவர் 1 வருடத்துக்கும் மேல் வாழ்கிறார். அவரை வாட்டும் ஒரே கேள்வி: “என் இரண்டாவது மகன் உண்மையில் எனக்கு பிறந்தவன்தானா?” இந்த சந்தேகம் என்கிற பேய் அவரை எப்படி ஆட்டிப்படைக்கிறது, அதன் முடிவு என்ன என்பதுதான் படம்.
“ராவ் பகதூர் என்றால் தைரியமான இளவரசன்” என்று சொல்வார்கள். ஆனால் இந்த படம் அரச குடும்ப கதை இல்லை. ஒரு மனிதனின் மனதுக்குள் இருக்கும் சந்தேகம், ஜாதி, வம்சம், நிறம், அந்தஸ்து மீதான சமூகத்தின் மோகத்தை கேலி செய்யும்
சத்யதேவ்
ராமப்பாவாக சத்யதேவ் முழுமையாக கரைந்திருக்கிறார். வயதான தோற்றம், பெருமை, பாதுகாப்பற்ற உணர்வு, பைத்தியக்காரத்தனம் என பல ஷேட்களை காட்டுகிறார். மேக்கப், உடல்மொழி, வசன உச்சரிப்பு என எல்லாவற்றிலும் அசத்துகிறார். இது அவரது கேரியரின் மைல்கல் நடிப்பு.
‘சி/ஓ கஞ்சரபாலம்’ மூலம் யதார்தவாதி என பெயர் வாங்கிய இயக்குநர், இந்த முறை முற்றிலும் மாறுபட்ட உலகத்தை உருவாக்கியிருக்கிறார். சைக்காலஜிக்கல் டிராமா, மேஜிக்கல் ரியலிசம், டார்க் காமெடி, சமூக விமர்சனம் என எல்லாவற்றையும் கலந்திருக்கிறார். படம் முழுக்க அடையாளங்கள், சின்னங்கள், புராண குறிப்புகள் நிறைந்திருக்கின்றன. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்தை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்க வைக்கிறது.
கார்த்திக் பர்மாரின் ஒளிப்பதிவு புவனாலயம் என்கிற மாளிகையை ஒரு கதாபாத்திரமாக மாற்றுகிறது. ரோஹன் சிங்கின் கலை இயக்கம் காலத்தின் வாசத்தை கொண்டு வருகிறது. ஸ்மரண் சாயின் பின்னணி இசை பியானோ முதல் ஆபரா வரை பயணித்து படத்தின் மனநிலையை உயர்த்துகிறது. ‘ஓ சுந்தரி’, ‘காகி பில்லா’ பாடல்கள் காட்சிகளுடன் ஒன்றிப்போகின்றன.
தீபா தாமஸ் ரேணுகாவாக நிதானமான நடிப்பு. விகாஸ் முப்பாலா நண்பர் ஆச்சாரியாக பலம். பாலா பராசர் ஆச்சம்மாவாக காமெடியிலும் கருத்திலும் ஸ்கோர் செய்கிறார்.
: 2 மணி 49 நிமிட படம். முதல் அரை மணி நேரம் உலகத்திற்குள் நுழைய நேரமாகிறது. சில காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீள்கின்றன.
‘ராவ் பகதூர்’ ஒரு “மென்டல் சினிமா”. பார்முலாக்களை உடைத்து, புதிய கதை சொல்லும் தைரியம் கொண்ட படம். ராம் கோபால் வர்மா “லோக்கலி இன்டர்நேஷனல்” என்றும், அடிவி சேஷ் “நான் பார்ததிலேயே மிகவும் ஒரிஜினலான தெலுங்கு படம்” என்றும் பாராட்டியிருக்கிறார்கள்.
சினிமாவை நேசிப்பவர்கள் தவறவிடக்கூடாத அனுபவம். சந்தேகம் என்கிற அரக்கன் ஒரு மனிதனை எப்படி அழிக்கிறான் என்பதை அழகாகவும், வலியுடனும் சொல்லியிருக்கிறார்கள்.
பழைய கதையில் ஒரு புதிய முயற்சி