லட்சுமி காந்தன் கொலை வழக்கு – திரை விமர்சனம்

தீர்ப்புகள் திருத்தப்பட வேண்டுமா?

தூக்கு தண்டனை சரியா, தவறா என்பதை பட்டிமன்றம் போல விவாதிக்காமல், ஒரு கதையாக சொல்லி மக்களின் தீர்ப்புக்கு விட்டுவிட்டார் இயக்குநர். அதுதான் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’.

கதைக்களம்
காலம் 1969. கிராமத்தில் வறுமையில் வாழும் வெற்றியின் குடும்பம் கடனில் மூழ்கியிருக்கிறது. கடனை அடைக்க வழியில்லாமல், நண்பன் மாறன் மூலம் திருட்டை தொழிலாக மாற்றுகிறான் வெற்றி. அப்படி ஒரு வீட்டில் திருடச் செல்லும் போது, எதிர்பாராத விதமாக அந்த வீட்டின் உரிமையாளரை கொலை செய்துவிடுகிறான்.

பயத்தில் ஓடாமல், தானே காவல் நிலையம் சென்று குற்றத்தை ஒப்புக்கொள்கிறான். நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. தூக்கு தண்டனை நிறைவேறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், சிறையில் போலீஸ் அதிகாரி ரங்கராஜ் பாண்டேவுக்கும் வெற்றிக்கும் இடையே நடக்கும் நீண்ட உரையாடல்களே படத்தின் மையம். இந்தத் தண்டனை நியாயமா? மனித உயிரின் மதிப்பு என்ன? என்கிற கேள்வியை இயக்குநர் முன்வைக்கிறார்.

இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்?
இது ஒரு தீர்ப்பு சொல்லும் படம் இல்லை. “இதுதான் சரி” என இயக்குநர் தன் கருத்தை திணிக்கவில்லை. மாறாக, தூக்கு தண்டனையின் இரு பக்கங்களையும் வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டே உரையாடல் வழியாக வைத்து, முடிவை நம்மிடமே விட்டுவிடுகிறார்.

பல படங்களில் குறைவாக பேசி நடிப்பால் கவர்ந்த வெற்றி, இந்தப் படத்தில் நிறைய பேசுகிறார். தன் வாழ்க்கை, வறுமை, தவறு, மனசாட்சி என எல்லாவற்றையும் உடைத்து பேசுகிறார். அதே நேரம் செய்தித்துறையில் வார்தைகளால் அசத்தும் ரங்கராஜ் பாண்டே, இங்கே கேள்வி கேட்கும் அதிகாரியாக குறைவாகவே பேசி, எடையை கூட்டுகிறார். இந்த மாற்றம் சுவாரஸ்யமானது.

தூக்கு தண்டனை போன்ற கனமான விஷயத்தை, பிரச்சாரம் இல்லாமல் உரையாடல் மூலம் பேசியது பாராட்டத்தக்கது.
வெற்றியின் உடல்மொழியும் குரலும் சிறைச்சாலையின் இறுக்கத்தை உணர வைக்கிறது. ரங்கராஜ் பாண்டேவின் அமைதியான நடிப்பு கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறது.
: கதை 1969-ல் நடப்பதாக சொல்லப்பட்டாலும், அந்தக் காலத்தின் உடை, பேச்சு, சூழல் எதுவும் திரையில் பிரதிபலிக்கவில்லை. கிராமம், அரசியல், சமூகம் எதுவும் நமக்கு தெரியவில்லை. வெறும் சிறை அறைக்குள் 60% கதை நடப்பதால், அது ஒரு நாடகம் போல தெரிகிறது.
தூக்கு தண்டனை நிறைவேற 30 நிமிடங்கள் இருக்கும் போது, தாயார் ‘ஸ்பெஷல் பர்மிஷன்’ கடிதத்துடன் மகனை பார்க்க வருவது நடைமுறைக்கு ஒத்துவராது. சித்தப்பு சரவணன் கதாபாத்திரத்தின் நோக்கமும் தெளிவில்லை. “அன்று நீங்கள் மன்னித்திருந்தால் நான் திருட்டை விட்டிருப்பேன்” என வெற்றி சொல்லும் வசனம் ஏற்க முடியாததாக இருக்கிறது. குற்றத்திற்கு மற்றவரை பொறுப்பாக்குவது போல அமைந்துவிடுகிறது. இதற்கு புரட்சித்தலைவர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது: “திருடனாய் பார்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”.
‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ என்பது தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வழக்கு. அந்த பிரபலமான தலைப்பை வைத்து மக்களை தியேட்டருக்கு வரவழைக்கும் முயற்சியாக இது தெரிகிறது. ஆனால் படத்திற்கும் அந்த உண்மை சம்பவத்திற்கும் பெரிய தொடர்பில்லை. இது திரைக்கதையில் செய்யப்பட்ட மிகப்பெரிய ஏமாற்றம்.
குறைந்த பட்ஜெட் படம் என்பதால், வீடியோ கவரேஜ் போல படம் எடுக்கப்பட்டிருக்கிறது. காட்சிகளில் ஒரு செயற்கைத்தனம், நாடகத்தனம் அதிகமாக தெரிகிறது.

‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ ஒரு முக்கியமான விவாதத்தை தொடங்கி வைக்கிறது. ஆனால் அந்த விவாதத்தை தாங்கும் அளவுக்கு திரைக்கதையில் காலகட்ட நேர்த்தியிலோ வலிமை இல்லை.

இது ஒரு சிறை அறை நாடகம். பேசுபொருளுக்காக ஒருமுறை பார்க்கலாம். ஆனால் பெரிய எதிர்பார்புடன் போனால் ஏமாற்றமே மிஞ்சும்.

தலைப்பு பெரிது. தீர்ப்பு நம்மிடம்.

Comments (0)
Add Comment