ரஜினி இந்த பெயரை கேட்டால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த பெயருக்கு தனி மவுஸ் உண்டு. ரசிக பட்டாளங்கள் வாண்டு முதல் வயதானவர்கள் வரை விசில் அடிக்காத நபர்கள் இல்லை. அப்படிப்பட்ட பெயரை கொண்டு ரஜினி கேங் வெளி வந்திருக்கிறது. படம் என்ன சொல்ல வருகிறது ? பார்ப்போம்.
கிராமத்தில் ரஜினி சவுண்ட் சர்வீஸ் என்கிற பெயரில் மைக் செட் போசும் வேலையை செய்து வருகிறார் ரஜினி கிஷன். அதே கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவரின் மகளான திவிவிகாவை காதலிக்கிறார். இருவரும் ஒருநாள் நள்ளிரவில் ஊரை விட்டு ஓடுகின்றனர். அப்போது மந்திரி ஒருவரின் காரை திருடிக்கொண்டு அந்த வழியாக வருகிறார் முனிஸ்காந்த்.. அவரிடம் லிப்ட் கேட்டு இருவரும் ஏறிக் கொள்கின்றனர். அதே காரில் திருடன் ஒருவரும் ஏறிக் கொள்கிறார்.
ஏற்காட்டை நோக்கி இவர்கள் செல்ல திவிவிகாவின் முறை மாப்பிள்ளையான கூல் சுரேஷ் தனது ஆட்களுடன் அவர்களை கண்டுபிடிக்க பின் தொடர்கிறார். ஒரு கட்டத்தில் உடன் வந்தவர்கள் உதவியுடன் ரஜினி கிஷன், திவிவிகா இருவரின் திருமணம் நடைபெறுகிறது. அன்றிரவு அங்கே உள்ள ரிசார்ட்டில் தங்குகிறார்கள். ஆனால் அந்த தாலி அவரது கழுத்தில் ஏறிய அந்த சமயத்தில் இருந்து அவருக்குள் ஒரு பேய் புகுந்து விடுகிறது. அதன்பிறகு தனக்கு இந்த தாலியை கட்டியது யார் என்று கேட்டு அனைவரையும் அடித்து துவைக்கிறது..
இந்த பேயை அடக்கி சாந்தப்படுத்தி அதை விரட்டுவதற்காக வருகிறார் பேய் ஓட்டுநர் மொட்ட ராஜேந்திரன். அவர் பேயின் பின்னணி குறித்து விசாரிக்கையில் திடுக்கிடும் பிளாஷ்பேக் தெரிய வருகிறது. அதன்பிறகு அந்த பேய் விதிக்கும் நிபந்தனை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது அந்த நிபந்தனையை இவர்கள் ஏற்றார்களா ? திவிவிகாவின் உடலில் இருந்து அந்த பேயை விரட்டினார்களா ? இறுதியில் என்ன நடந்தது என்பது மீதிக் கதை.
அப்பாவி என்று சொல்வதா இல்லை வெளி உலகம் தெரியாதவர் என்று சொல்வதா என்று நினைக்கத் தோன்றும் வகையில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நாயகன் ரவி கிஷந நடித்திருக்கிறார். நாயகினும் திவிவிகாவும் ஜாடிக்கேத்த மூடியாக கச்சிதமான ஜோடியாக பொருந்தியுள்ளார்.. இவர்களுக்கு இடையேயான பாடல் காட்சியில் நெருக்கம் காட்டி ரசிகர்களை சூடேற்றுகிறார்கள். பேய் தன் உடம்புக்குள் புகுந்த பின் நாயகி திவிவிகாவின் நடிப்பு கூடுதல் பரிணாமம் பெறுகிறது.
முக்கியமான வேடத்தில் கதை முழுவதும் பயணிக்கும் விதமாக முனிஸ்காந்த்.. சில நேரங்களில் அவரது காமெடி ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகிறது. சில நேரங்களில் இதெல்லாம் தேவையா என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்த தவறவில்லை.
இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுக்கும் மொட்ட ராஜேந்திரன் இசை மூலமாக பேயை சாந்தப்படுத்தும் யுக்தியும் காட்டுக்குள் அதற்காக அமைத்திருக்கும் மறுவாழ்வு மையமும் காமெடிக்கு சரியான ஏரியா அமைத்துக் கொடுத்துள்ளது.
இதற்கு முன்பு ஒரு சில காட்சிகள் மட்டும் வந்து போகும் கூல் சுரேஷ் இதில் படம் முழுவதும் வந்து தன்னால் முழு நீள காமெடி படத்திலும் நடிக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார். அருமையான ஆன்லைன் பஞ்ச்களுடன் அவரை இனிவரும் படங்களில் இயக்குனர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்களை தவிர இவர்களுடன் காரில் திருடனாக பயணிக்கும் கல்கியும் கலகலப்பூட்ட முயற்சித்து இருக்கிறார்.
ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் ரிலாக்ஸுக்கு உத்தரவாதம் தருகின்றன. ஒளிப்பதிவாளர் சதீஷ்குமாரும் தனது பணியை செவ்வனே செய்துள்ளார்.
கதை எழுதி இயக்கியுள்ள ரமேஷ் பாரதி நகைச்சுவை முதன்மையாகக் கொண்டு திரைக்கதை வடிவமைத்திருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் கொண்டிருக்கிறார். திரைக்கதையில் நகைச்சுவை திருப்பங்களும் நகைச்சுவை வசனங்களும் மிகவும் அவசியம். அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் நிறைவேற்றி இருப்பதனால் நகைச்சுவை விரும்பிகள் தாராளமாக படம் பார்க்க செல்லலாம்.
ரஜினி கேங் – கலாட்டா கூட்டணி
ரேட்டிங் ; 3. / 5