கிணற்றில் விழுந்த தன் மகனின் உயிரைக் காப்பாற்ற சொல்லி ஒண்டிமுனி தெய்வத்துக்கு ஆட்டுக்குட்டியை பலி கொடுக்க வேண்டுதல் செய்யும் நல்ல பாடனுக்கு ஒண்டிமுனி மகனைக் காப்பாற்றித் தருகிறார். மகனும் வளர்ந்து வாலிப வயதை எட்டுகிறார் ஆட்டுக்குட்டியும் வளர்ந்து கடா ஆகிறது.
ஆனால் ஒண்டிமுனி கோயிலை ஊரின் இரண்டு பண்ணையார்கள் சண்டையால் பூட்டி வைக்க ஆட்டை பலி கொடுக்க முடியாமல் நல்ல பாடன் தவிக்கிறார். இறுதியில் பண்ணையார் ஊரை ஏமாற்றி நிலத்தை குளம் வெட்ட அரசாங்கத்துக்கு தாரை வார்க இவர்களிடம் கோயிலை திறப்பதாக சொல்லி பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கோயில் பூஜையை ஆரம்பிக்க அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன ? பாருங்கள் ஒண்டிமுடியும் நல்லபாடனும்.
படத்தில் நடித்த அனைவரும் மிகச்சிறப்பாக தங்கள் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். அதிலும் நல்லபாடன் கதாபாத்திரம் மிகச்சிறப்பு. அதை ஏற்று நடித்திருக்கும் பரோட்டா முருகேசன் அந்த கிராமத்து நல்ல பாடனாக மாறிவிட்டார். நல்லபாடன் என்றால் சிறந்த உழைப்பாளி என்பது தென் தமிழகத்தின் வட்டார சொல்.
படம் முழுக்க இவரை மையப்படுத்தி தான் செல்கிறது. பெரிய மனிதரிடம் உதவி கேட்டு இவர் போகும்போது இவருக்கே தெரியாமல் இவரிடம் வேலை வாங்கி ஏமாற்றுவது இந்த கதாபாத்திரத்தின் எதார்த்தம் மிகச் சிறப்பு.
படத்திற்குள் சிறிய காதல்.. அந்தக் காதலுக்குள் இன்றைய காதலியின் எதிர்பார்ப்பு.. அதற்காக காதலன் செய்யும் தகிடுத்தம்..
தென் தமிழகத்து கிராமத்தின் மண்வாசனையோடு படத்தை இயக்கியிருக்கிறார் சுகவனம். ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள் தான். அந்த புதுமுகங்களின் வட்டார மொழியில் வசனங்கள் நம்மை வசப்பட வைக்கின்றன. எதார்த்தமான கதை தான். அந்த கதைக்குள் மூடநம்பிக்கையை உடைத்து எறியும் கிளைமாக்ஸ் காட்சி மிக அருமை.
தாத்தாவிடம் பேரன் எதற்கு ஆட்டை பலி கொடுக்க வேண்டும் என்று கேட்க. அதற்கு தாத்தா உன் மாமா உயிர் பிழைக்க நான் ஒன்றிமுனியிடம் வேண்டிக் கொண்டேன் என்று சொல்ல அதற்கு சிறுவன் அப்போ இந்த ஆட்டின் அம்மா ஒண்டி முனியிடம் வேண்டினாள் இந்த ஆடு உயிர் தப்பி விடுமா? என்று கேட்க சிறுபிள்ளைத்தனமான கேள்விதான்.. ஆனால் மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு சம்மட்டி அடி.
அதேபோல் இறுதிக்காட்சியில் கோயில் திருவிழா சண்டையில் பெரிய மனிதர்கள் சண்டையிட்டு மரணம் அடைய ஆடு தப்பித்துக் கொள்கிறது. அப்போது சிறுவன் மனதின் குரல் ஒருவேளை ஆட்டோட அம்மா தான் குட்டியை காப்பாற்ற சொல்லி ஒண்டி முனி கிட்ட வேண்டி இருக்குமா அதனால் தான் ஆட்டுக்குட்டி பிழைச்சிருச்சா ? என்ற வசனம் இந்த வருடத்தின் சிறந்த வசனம் என்று எமது கருத்து
படம் பார்த்தால் அது உங்கள் கருத்தாக கூட மாறலாம். ஒரு திரைப்படத்தை கதை, திரைக்கதை அமைத்து இயக்கி வெளியிட்டு அது வெற்றி பெற்று லாபத்தை ஈட்டினாலும் ஆனால் அந்தப் படத்தில் நாம் மக்களுக்காக என்ன சொல்லி இருக்கிறோம் என்பது முக்கியம்.
அந்த வரிசையில் இந்த படத்தின் இயக்குனர் சுகவனம் மக்களுக்காக கூறிய விஷயம் ஆதி காலம் முதல் இந்த காலம் வரை உள்ள மூடநம்பிக்கைக்கு ஒரு சிறப்பான தீர்வை தந்திருக்கிறார், அவருக்கு எமது “போக்கஸ் ஒன்” சினிமா சார்பாக வாழ்த்துக்கள்,
ரேட்டிங் – 3.5 / 5