தமிழ் சினிமாவை எடுத்துக்கிட்டா, ஆரம்ப காலத்துல இருந்தே தாய் கதாபாத்திரம் எப்போதும் ஒரே மாதிரிதான் இருந்து வருது. பிள்ளைக்காக தன்னையே அழிச்சிக்கிற தியாக தீபம். சாப்பிடாம, தூங்காம, தனக்குனு எந்த ஆசையும் இல்லாம… அவ்வளவுதான் தாய். ஆனா அந்த தாயும் ஒரு பொண்ணு, அவளுக்கும் வயசு, உணர்வு, தனிப்பட்ட வாழ்கைனு எல்லாம் இருக்கும்ல? இந்த கோணத்தை தொட்ட படங்கள் ரொம்ப ரொம்ப கம்மி. ‘சொல்லாமலே’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ மாதிரி வித்தியாசமான கதை சொல்லி பேர் வாங்கின இயக்குநர் சசி, இப்போ ‘நூறு சாமி’ மூலமா இன்னொரு துணிச்சலான கதையை சொல்லியிருக்கார்.
கதை என்ன சொல்ல வருது?
கணவரை இழந்துடுறா செல்வி. வயசு 43. அவளுக்கு ரெண்டு பசங்க – பாஸ்கர், விவேக். அவங்கள ஆளாக்குறதுக்காக ஊரு உலகத்தை தாங்கிக்கிட்டு தனியாளா போராடுறா. விதவைனு தெரிஞ்சதும் ஊர்ல இருக்கிற சில ஆம்பளைங்க அவளை தப்பா பாக்குறாங்க. பள்ளி ஆசிரியர் ஒருத்தர் பாஸ்கர்கிட்ட “உங்க அம்மாவுக்கு மறுமணம் பண்ணி வை”னு சொல்லும்போது, சின்ன பையனா இருக்குற பாஸ்கருக்கு அது கசப்பா இருக்கு. செல்விக்குள்ள அந்த ஆசை இருந்தாலும், பிள்ளைங்களுக்காக அதை மூடி வச்சுடுறா.
வருஷம் போகுது. பாஸ்கர் வளர்ந்து பக்குவப்பட்டவனா மாறுறான். அப்போ அவனுக்குள்ள ஒரு எண்ணம் வருது – “அம்மா ஏன் தனியா இருக்கணும்? அவளுக்கும் ஒரு வாழ்கை கொடுக்கணும்”. அந்த எண்ணத்தோட அம்மாகிட்ட போய் மறுமணம் பத்தி பேசுறான். அதை கேட்டு செல்வி முதல்ல அதிர்சி ஆகுறா. “ஊரு என்ன சொல்லும், பிள்ளைங்க என்ன நினைப்பாங்க”னு பயப்படுறா. ஆனா பாஸ்கர் விடாம முயற்சி பண்றான். கடைசியா அந்த திருமணம் நடந்ததா இல்லையா, ஊரு என்ன சொன்னாங்க, பிள்ளைங்க எப்படி சமாளிச்சாங்கனு தான் மீதி கதை.
படத்தோட சிறப்பு என்ன?
1. இயல்பான திரைக்கதை: பெரிய மெலோடிராமா இல்ல. அழுது ஆர்பாட்டம் பண்ணாம, நம்ம வீட்ல நடக்குற மாதிரியே கதை நகருது. உதாரணத்துக்கு, செல்வியோட கணவர் எப்படி இறந்தாருனு நேரா சொல்லல. ஆனா வீட்ல இருக்குற சீலிங் ஃபேனை ஒரு குறியீடா காட்டி, “அவர் தூக்கு போட்டுக்கிட்டாரு”னு நமக்கு புரிய வச்சுடுறாங்க. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் படத்தை ரியலா ஆக்குது.
2. கதாபாத்திர வளர்சி: முதல் பாதி முழுக்க பிள்ளைங்க எப்படி அம்மாவோட முடிவை ஏத்துக்கிறாங்கனு பாக்குறோம். ரெண்டாம் பாதியில் ஊரு, உறவுக்காரங்க எல்லாரும் எதிர்கும்போது, அந்த பிள்ளைங்க எப்படி அம்மாவுக்காக நிக்கிறாங்கனு பாக்குறோம். “வீட்ல இருந்து தான் மாற்றம் ஆரம்பிக்கணும்”னு படம் முடியும்போது அழுத்தமா சொல்லிடுறாங்க.
3. நடிப்பு: இது முழுக்க முழுக்க சுவாசிகாவோட படம். போஸ்டர்ல விஜய் ஆண்டனி பெருசா இருந்தாலும், அவர் கொஞ்ச நேரம்தான் வர்றார். சுவாசிகா தன் வாழ்நாள் நடிப்பை கொடுத்திருக்காங்க. குறிப்பா க்ளைமாக்ஸுக்கு முன்னாடி மகன்களோட சாப்பிடும்போது, அத்தனை நாள் அடக்கி வச்ச உணர்வும் அழுகையா வெடிக்கிற சீன்… பாக்குற நம்ம கண்ணும் கலங்கிடுது. மகன்களா வர்ற அஜய் திஷன், சக்தி ரெண்டு பேரும் புதுமுகம் மாதிரி தெரியல, ரொம்ப இயல்பா நடிச்சிருக்காங்க. விஜய் ஆண்டனி 40 வயசு கடந்த, மனைவியை இழந்த ஒரு மனுஷனா வந்து படத்துக்கு வலு சேர்கிறார்.
குறைகள் இல்லாமலா?
இருக்கு. சில இடத்துல படம் என்ன ஜானர்னே தெரியல. இப்போ சீரியஸா போகுது, அடுத்த நிமிஷம் கருணாஸ் வந்து காமெடி பண்றார், திடீர்னு ஃபீல் குட் ஆகுது. இந்த தடுமாற்றம் கொஞ்சம் கவனத்தை சிதறடிக்குது. அதுக்கு முக்கிய காரணம் பின்னணி இசை. காட்சி சோகமா இருக்கும்போது இசை ஓவரா போய், நம்மால கதாபாத்திரத்தோட மனசுல ஒன்ற முடியல. இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அதே மாதிரி வாய்ஸ் ஓவர் அதிகமா இருக்கு. படம் யாரோட பார்வையில் போகுதுனு குழப்பம் வருது. க்ளைமாக்ஸ்ல ட்ரோன் வச்சு கிராம மக்களை விரட்டுற சீன் தேவையில்லாம மசாலா தூவுன மாதிரி இருக்கு. யூடியூபர், கன்னியாஸ்திரி மாதிரி சில கதாபாத்திரங்கள் வலிஞ்சு திணிச்ச மாதிரி இருக்கு.
கடைசியா…
குறைகள் இருந்தாலும், ‘அம்மா சென்டிமென்ட்’னு பெயரை வச்சு வருஷம் வருஷம் ஒரே மாதிரி படம் எடுத்துக்கிட்டு இருந்த தமிழ் சினிமாவுல, ‘நூறு சாமி’ மாதிரி படங்கள் வர்றது ரொம்ப முக்கியம். தாய்மை புனிதம்தான், ஆனா அந்த தாய் என்கிறவள் ஒரு சாதாரண பொண்ணுதான். அவளுக்கும் ஆசை இருக்கும், கனவு இருக்கும், தப்பு பண்ண உரிமை இருக்குனு தைரியமா சொல்லியிருக்கார் சசி.
உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சு எடுத்ததால இன்னும் அழுத்தமா மனசுல ஒட்டுது. “நூறு சாமி கும்பிடுறதை விட, வீட்ல இருக்குற ஒரு செல்வியை புரிஞ்சுக்கோ”னு சொல்லாம சொல்லுது படம்