விஜய்சேதுபதியின் வெட்டப்பட்ட தலையுடன் தொடங்கும் ‘காட்டான்’ தொடர், ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை அதிர்ச்சி மற்றும் புதிர் நிறைந்த உலகிற்குள் இழுத்துச் செல்கிறது. “என் தலையை அடக்கம் செய்து இந்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்ற கடிதம் கதையின் மைய மர்மமாக மாறி, “முத்து யார்?” என்ற கேள்வியை வலுவாக உருவாக்குகிறது.
இந்த கேள்விக்கான பதிலைத் தேடும் காவல்துறை விசாரணை, முத்துவின் பல்வேறு முகங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஒரு சாதாரண மனிதராக இல்லாமல், பல ஊர்களில் பல்வேறு வேடங்களில் வாழ்ந்திருக்கும் முத்து—கைக்கடிகார பழுது பார்க்கும் தொழிலாளி, யானை பாகன், ஆதரவற்றோர் இல்ல மேலாளர், லாரி ஓட்டுநர், பெண்கள் பாதுகாவலர்—என ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறுபட்ட பின்னணியுடன் தோன்றுவது, கதைக்கு புதுமையும் ஆழமும் சேர்க்கிறது.
விஜய்சேதுபதி தனது இயல்பான மற்றும் மிகச் சீரான நடிப்பின் மூலம் இந்த பல்வேறு கதாபாத்திரங்களையும் உயிர்ப்பிக்கிறார். அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ஒரு நோக்கத்தோடு நகர்வதைப் போல உணர்த்துகிறது. குறிப்பாக, மனித நேயம் நிறைந்த குணாதிசயங்கள் மூலம் அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களிடம் நெருக்கத்தை உருவாக்குகிறது.
துணை நடிகர்கள் அணியும் கதைக்கு வலுவான ஆதாரமாக உள்ளனர். போலீஸ் விசாரணை கோணத்தில் வரும் கதாபாத்திரங்களும், முத்துவின் வாழ்க்கையில் சந்திக்கும் பலரும் கதையின் சஸ்பென்ஸை நிலைநிறுத்த உதவுகின்றனர்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் வழங்கிய பின்னணி இசை, தொடரின் முக்கிய பலங்களில் ஒன்றாகும். சில குறிப்பிட்ட பீஜிஎம்கள் காட்சிகளின் தாக்கத்தை அதிகரித்து, மர்ம உணர்வை நிலைநிறுத்துகின்றன.. அதேபோல், ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கமும் பல்வேறு இடங்கள் மற்றும் காலகட்டங்களை நம்பகமாக காட்சிப்படுத்துகின்றன.
இயக்குநர் மணிகண்டன், திரைக்கதையை சஸ்பென்ஸுடன் நகர்த்தியுள்ளதுடன், எளிய மக்களின் வாழ்க்கையை உணர்ச்சியோடு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் புதிய முடிச்சை உருவாக்கி, அடுத்த அத்தியாயத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது..
ஆனால், சில இடங்களில் முத்து இல்லாத காட்சிகள் நீளமாக தோன்றுவது மற்றும் தேவையற்ற துணைக் கதைகள் கதை ஓட்டத்தை சற்று மெதுவாக்குவது ஒரு குறையாக உணரப்படுகிறது. இருந்தாலும், “முத்து யார்?” என்ற கேள்வி தொடர்ந்து உருவாக்கும் எதிர்பார்ப்பு இந்த குறைகளை மறக்க வைக்கிறது.
மொத்தத்தில், சஸ்பென்ஸ், மனித உணர்வு மற்றும் வித்தியாசமான கதாபாத்திர அமைப்புடன், விஜய்சேதுபதியின் சிறப்பான நடிப்பால் ‘காட்டான்’ ஒரு ஈர்க்கும் இணையத் தொடராக மாறியுள்ளது.