துஷாரா விஜயன் – ஜான்சி
அதிதி பாலன் – மரமல்லி
அப்பாஸ் – ஜெயச்சந்திரன்
வசுந்தரா சி – சரண்யா
நரேன் மணி – குமரேசன் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கும் வலைத்தொடர் ‘எக்ஸாம்’. தயாரிப்பு புஷ்கர் – காயத்ரி.
அரசு வேலைகளில் பணியாற்ற தேவைப்படும் குரூப் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வர அப்பாஸும் துஷாரா விஜயனும் நடத்தும் அதிரடி வேட்டையின் நிஜங்கள் தான் எக்ஸாம் வலைத்தொடரின் மூலக்கதை.
உதகமண்டலத்தில் இருக்கும் ஒரு ஊருக்கு மல்லி என்ற எஸ்பி பணிமாற்றம் செய்யப்பட, அந்த மல்லியை மடக்கி ஜான்சியாக இருந்து துஷாரா மல்லியாக மாறி பொறுப்பேற்கிறார். அவர் பொறுப்பேற்ற பத்து நாளுக்குள் குரூப் எக்ஸாம் அங்கு நடைபெற இருக்கிறது. ஜான்சிக்கு செல்போனில் ஒரு குறுஞ்செய்தி தேர்வைப் பற்றி வருகிறது.
யார் அந்த முகம் தெரியாத மனிதன், முறைகேடுகள் எப்படி நடக்கின்றன என்பதை அலசி ஆராய்கிறார் துஷாரா. இறுதியில் என்ன நடந்தது என்பதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நமக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர் சற்குணம்.
துஷாரா போலி போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதமான வேடப்பொருத்தம். ஒரு குக்கிராமத்தில் முதல் பட்டதாரி பெண்ணாக வெளிவந்து, குரூப் எக்ஸாம் எழுதி ஒரு போலீஸ் அதிகாரியாக மாற வேண்டிய துஷாரா, முறைகேட்டைக் கண்டுபிடிக்க, அதற்குத் துணை போகும் காவல்துறை, அதனால் குற்றவாளியாக சிறை சென்று தன் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் நேரத்தில் ஜெயிலர் அப்பாஸின் ஆறுதலால், எந்த முறைகேட்டால் தான் ஜெயிலுக்குப் போனாரோ, அந்த முறைகேட்டைக் கண்டுபிடிக்க இவர்கள் இருவரும் எடுக்கும் முயற்சி சிறப்பு. நடிப்பிலும் துஷாரா சிறப்பு மட்டுமல்ல, மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
மரமல்லியாக வரும் அதிதி பாலன் குறைவான கதாபாத்திரத்தில் நிறைவாகச் செய்திருக்கிறார்.
அப்பாஸ் தன் நடிப்பை அளவோடு செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
முதலில் நாம் பாராட்ட வேண்டியது ஒளிப்பதிவாளரையே. உதகமண்டலத்தை இந்த கோடைகாலத்தில் நாம் நேரில் சென்று பார்க்கச் செலவாகும் என்பதை மனதில் கொண்டு, நாம் அங்கே சென்ற உணர்வைத் தன் கேமராவில் படம் பிடித்து நம் கண் முன் காட்டுகிறார். வாழ்த்துக்கள்.
ஒரு சிறிய கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதை வலைத்தொடராக மாற்ற இயக்குனர் சற்குணம் மிகச் சிரமப்பட்டு இருக்கிறார் என்பது தொடரைப் பார்க்கும்போது நமக்குத் தெரிகிறது.
ஒரு திரைப்படமாகத் திரைக்கதை வடிவமைப்புச் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தொடர் என்பதால் தொடர்வதற்காகச் சில காட்சிகள் தேவையில்லாமல் இருப்பது போல் நமக்குத் தோன்றுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒரு போலீஸ் அதிகாரி எப்படி ஆள்மாறாட்டம் செய்ய முடியும் என்பதை அப்பாஸ் மூலம் இயக்குனர் நமக்கு விளக்கி இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.
அதுமட்டுமல்ல, மல்லியைத் தெரிந்தவர்கள் இருவர் அங்கே இருக்க, ஒருவரை விபத்துக்குள்ளாக்கிப் படுக்க வைத்தாலும், நலமடைந்து மல்லியை அவர் தேடும் முயற்சியை நமக்குத் தெரிவிக்காதது மிகப்பெரிய லாஜிக் ஓட்டை.
இன்னொரு லாஜிக் ஓட்டை, இன்னொருவர் மல்லியைப் பார்த்தவர், மல்லியைப் பார்த்ததும் சந்தேகப்படாமல் இருப்பது. மல்லி என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கத்தான் என்பது ஒத்துக்கொள்ள முடியாத லாஜிக்.
பத்திரிகையாளர் பின்தொடர்வது, அவரை அடைத்து வைப்பது இப்படி காவலர் குடியிருப்பில் நடக்கும் விஷயங்கள் எப்படி சாத்தியம் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.
ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்குச் சொல்ல இயக்குனர் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் என்பது தொடரைப் பார்க்கும்போது நமக்குத் தெரிகிறது. இருந்தாலும் அவரின் முயற்சிக்கு நமது வாழ்த்துக்கள்.
எக்ஸாம் – பாஸ் மார்க் (மார்ஜின்)