தொழில் அதிபர் கௌதம் மேனனிடம் டாக்ஸி டிரைவராக வேலை பார்க்கிறார் சமுத்திரக்கனி. அவரது மனைவி லட்சுமி ப்ரியா கடற்கரையோரம் இட்லி கடை நடத்துகிறார். இவர்களுக்கு ஒரே மகன். கார் வாங்க வேண்டும், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் பொருளாதாரம் அவர்களை இழுத்து பிடிக்கிறது. கடன்கள் கழுத்தை நெரிக்கிறது.
இந்த நிலையில் கௌதம் மேனன் ஒரு மாதம் வெளிநாடு போக அவரது காரை கால் டாக்ஸியாக பயன்படுத்தி ஓட்ட துவங்குகிறார் சமுத்திரக்கனி. அவரால் நினைத்தபடி சம்பாதிக்க முடிந்ததா அல்லது புதிதாக சிக்கல்கள் முளைத்து மீண்டும் பிரச்சனைகளில் சிக்கினாரா ? இல்லை இவற்றில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.
இருப்பதை வைத்துக் கொண்டு பகட்டு வாழ்க்கை தேவையில்லை என வாழ்க்கையை ஓட்ட நினைக்கும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத் தலைவனாக கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி ஏகப்பொருத்தம். அதே சமயம் ஒரு கட்டத்தில் மேலும் மேலும் கடன் வாங்கி அவதிப்படுவதையும் ஒரு சராசரி மனிதனாக வெளிப்படுத்தியுள்ளார். நிச்சயமாக இந்த படம் பார்ப்பவர்களுக்கு சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் ஒரு நல்ல பாடத்தை சொல்லும்.
அடித்தட்டு குடும்பத்தரசிகளின் இயல்பான இயக்கத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் லட்சுமி பிரியா சந்திரமௌலி. அவரது எதிர்பார்ப்பில் எந்த தவறும் சொல்ல முடியாவிட்டாலும் அவரது செயல்கள் கொடுக்கும் அழுத்தம் அந்த குடும்பத்தின் போக்கையே திசை திருப்பி விடுவது பல பெண்களுக்கு நிச்சயம் ஒரு பாடத்தை கற்றுத் தரும்.
அவர்களின் மகனாக நடித்திருக்கும் கரண் சக்கரவர்த்தியும் துருதுறுப்பாக நடித்திருக்கிறார். பண்பட்ட மனிதராக கௌதம் மேனன்.. அவரது காரை சமுத்திரக்கனி அவருக்கு தெரியாமலேயே கால் டாக்ஸியில் இணைத்து ஓட்ட துவங்குவதில் இருந்து சமுத்திரக்கனி பயப்படுகிறாரோ இல்லையோ நாம் பயப்பட துவங்கி விடுகிறோம். இறுதியில் அந்த உண்மை கௌதம் மேனனுக்கு தெரிய வரும்போது அவர் என்ன செய்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அவரது மனைவியாக அபிநயா.. கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த புன்னகை முகம், அவருக்கு ஏற்படும் முடிவு என நம்மை ஒரு பக்கம் சந்தோஷப்படுத்தி இன்னொரு பக்கம் துக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது.
சமுத்திரக்கனியின் அந்த கால் டாக்சி பயணத்தில் எதிர்படும் மனிதர்களாக படவா கோபி, கார்த்திக் குமார் மற்றும் வெளிநாட்டு வேலைக்கு சமுத்திரக்கனியை அனுப்பி வைக்கும் நபர் என பல கதாபாத்திரங்களும் கதையை நகர்த்த தேவையான பொருத்தமான கதாபாத்திரங்கள். மிகச் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
படத்தின் பெரும்பகுதி ஏதோ கால் டாக்ஸி பயணத்தை மேற்கொள்வது போலவே இருப்பது ஒரு பலவீனம். தேடி வரும் உதவியை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு பின்னர் தேவையில்லாமல் கடனில் சிக்கிக் கொள்ளும் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தை பார்க்கும்போது சில நேரங்களில் எரிச்சல் ஏற்படவே செய்கிறது. அதே சமயம் அதுவே அவரது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி.
இந்த கார்மேனி செல்வம் படத்தை பார்த்து விட்டு வெளியே செல்பவர்கள் ஒரு குடும்பத்திற்கு எது தேவை, எது அவசியம், எது முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.