‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வலைத்தொடர் – விமர்சனம்

 

கிரிக்கெட்டை மையமாக வைத்து தமிழில் ‘சென்னை 600028’, ‘ ‘கனா’, ‘லப்பர் பந்து’ என ஏற்கனவே பல படங்கள் வந்துவிட்டன. ஆனால் ‘மம்முட்டியான் ஸ்டார்ஸ்’ அந்த விளையாட்டை மைதானத்தில் இருந்து அல்ல, கேலரிக்கு வெளியே நிற்கும் சாமானிய ரசிகர்களின் கண்ணோட்டத்தில் பேசுகிறது. இது வெற்றி தோல்வி கதை இல்லை; ஒரு மேட்ச் டிக்கெட்டுக்காக ஏங்கும் மூன்று இளைஞர்களின் கனவு,

கிராமத்தில் கிரிக்கெட் என்றால் உயிரை விடும் மூன்று நண்பர்கள். அவர்களின் ஒரே லட்சியம் – சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களுக்கு பிடித்த நட்சத்திர வீரரின் ஆட்டத்தை நேரில் பார்ப்பது. ஆனால் டிக்கெட் விலை, பயண செலவு எதுவும் அவர்களிடம் இல்லை.

கனவு வெறியில், ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணத்தை திருடிக்கொண்டு சென்னைக்கு கிளம்புகிறார்கள். பிளாக்கில் டிக்கெட் வாங்கி, உற்சாகமாக மைதான வாசலுக்கு போனால் அது போலி டிக்கெட் என தெரிய வருகிறது. ஸ்டேடியம் உள்ளே போக முடியாமல், கனவு கலைந்து நிற்கிறார்கள்.

இங்கு பிரச்சனை முடியவில்லை. அவர்கள் பணம் திருடிய விஷயம் ஊருக்கு தெரிந்து பஞ்சாயத்து கூடுகிறது. குடும்ப மானம், போலீஸ் பயம், நண்பர்களுக்குள் விரிசல் என கதை அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. கடைசியில் அவர்கள் திருந்தினார்களா, ஊர் மன்னித்ததா, கிரிக்கெட் மீதான காதல் என்ன ஆனது என்பதுதான் மீதி தொடர்.

இயக்குநர் கிரிக்கெட்டை ஒரு ‘பேஷன்’ ஆக மட்டும் காட்டாமல், அது சாமானியனின் வாழ்க்கையில் எப்படி கனவாக, வெறியாக, சில நேரம் தவறான முடிவுக்கும் காரணமாகிறது என்பதை அழுத்தமாக சொல்கிறார். முதல் 3 எபிசோடுகள் கிராமம், நட்பு, கிரிக்கெட் கொண்டாட்டம் என ஜாலியாக போகிறது. 4-வது எபிசோடிலிருந்து திருட்டு, போலி டிக்கெட், சூதாட்டாம் குற்ற உணர்வு என கதை சீரியஸ் ஆகிறது.

மூன்று நண்பர்களாக வரும் புதுமுகங்கள் அபாரம். கிராமத்து வெள்ளந்தி, சென்னைக்கு வந்ததும் ஏற்படும் திகைப்பு, போலீஸ் பயம், நண்பன் மீதான கோபம் என எல்லா உணர்வையும் இயல்பாக கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக முக்கிய கேரக்டரான ‘மம்முட்டி’ என்கிற பாத்திரம் – கிரிக்கெட் மீதான வெறி ஒரு பக்கம், செய்த தவறுக்கு குற்ற உணர்வு இன்னொரு பக்கம் என இரண்டுக்கும் நடுவில் தவிப்பதை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.

. காதலியாக வரும் நடிகை, படித்த பெண். “கிரிக்கெட் பாக்கணும்னா உழைச்சு சம்பாதிச்சு போ, திருட்டு தப்பு” என நேரடியாக கேள்வி கேட்கிறார். இவர்தான் கதையின் ‘மனசாட்சி’. காதலனை திருத்த முயலும், ஆனால் அவன் கேட்காமல் போகும்போது உடைந்து போகும் இடங்களில் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸில் இவரது முடிவுதான் ஹீரோவின் மனமாற்றத்துக்கு முக்கிய காரணம்

‘மம்முட்டியான் ஸ்டார்ஸ்’ ஸ்கோர் போர்டு பற்றிய கதை இல்லை; ஸ்கோர் போர்டு பார்க்க முடியாத ரசிகனின் கதை. கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு இல்லை, அது ஒரு உணர்வு. அந்த உணர்வு தவறான பாதைக்கு போனால் என்ன ஆகும் என்பதை நேர்மையாக சொல்லியிருக்கிறது.

வெப் சீரிஸ் உலகில் கிரிக்கெட் கதைகளுக்கு இது ஒரு புதிய அத்தியாயம். கிரிக்கெட் பிரியர்கள் மட்டுமல்ல, நல்ல கதை விரும்பிகளும் தாராளமாக பார்க்கலாம்.

'Mammattiyan Stars' Web Series – Review
Comments (0)
Add Comment