ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர், டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், ஆதித்யா கதிர், லொள்ளு சபா மாறன் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் அருண்குமார் தனசேகரன் – ஏ.கே பிலிம் பேக்டரி தயாரிப்பில் வந்திருக்கும் படம IMMORTAL
Immortal என்றால் அழியாதது. படம் என்ன செல்ல வருகிறது
ஆயிரம் வருடங்களுக்கு முன், வட இந்தியாவில் ஒரு பழங்குடி கூட்டத்தில் மலைவாழ் பெண் ஒருவருக்கு அமானுஷ்ய சக்தியுடன் ஒரு ராட்சத மிருக குழந்தை பிறக்கிறது.
கட் பண்ணினால், இன்றைய சென்னை. பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்க்கும் ஜி.வி.பிரகாஷ் தங்கியிருக்கும் ரூமை காலி செய்ய வேண்டிய நிலை. அப்போது ரூம் ஷேரிங் குறித்து ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வருகிறது.
போய் பார்த்தால், பெரிய அபார்ட்மெண்டில் பிரம்மாண்டமான பிளாட். அங்கே தனியாக இருக்கிறாள் கயாடு லோஹர் . கொள்ளை அழகு. வாடகை பிரச்சனை இல்லை, நீ என்ன கேட்டாலும் வாங்கித் தருகிறேன் என்கிறாள். கேட்ட அடுத்த நாளே பல லட்சம் மதிப்புள்ள ஹார்லி பைக்கை கொண்டு வந்து நிறுத்துகிறாள்.
அந்த வீட்டில் இன்னொரு அறையில் தோல் சுருங்கி, வயதானவர் டி.எம்.கார்த்திக் இருக்கிறார். “அவர் என் தாத்தா” என்கிறாள் நாயகி. ஆனால் அவரோ GV யிடம் தனியாக, “நான் அவள் தாத்தா இல்லை, உன்னை விட ரெண்டு வயசு தான் பெரியவன்” என்கிறார்.
இங்கே தான் ட்விஸ்ட். நாயகன் என்ன கேட்டாலும் அடுத்த நொடி அது கிடைக்கிறது. சப்பாத்தி என்று சொல்லி வந்த பார்சலில், “எனக்கு இட்லி வேணும்” என்று மனதில் நினைத்தால், பிரித்தால் உள்ளே இட்லி இருக்கிறது. சிகரெட், பீடி என அவன் நினைப்பது எல்லாம் நொடியில் நடக்கிறது.
அப்போது அந்த தாத்தா உண்மையை உடைக்கிறார் – அது என்ன?
நாயகன் அங்கிருந்து தப்பிக்க நினைத்தால் முடியவில்லை. எந்த பாதையில் போனாலும் அது மீண்டும் அதே அபார்ட்மெண்ட் வாசலில் தான் கொண்டு வந்து நிறுத்துகிறது. அந்த அழியாத சக்தியிடம் இருந்து மகி தப்பித்தானா? இல்லையா? என்பதே மீதி படம்.
முதலில் பாராட்ட வேண்டியது மாரியப்பன் சின்னாவின் மேக்கிங். திகில் படத்திற்கான நேர்த்தியுடன் எடுத்திருக்கிறார்.
சாம் சி.எஸ் இசை தான் படத்தின் முதுகெலும்பு. பரபரப்பான BGM, சுறுசுறுப்பான பாடல்கள் என மிரட்டியிருக்கிறார். குறிப்பாக நாயகி யார் என்று தெரியும் இடத்தில் வரும் ஆங்கில பாடல், படத்தை வேற லெவலுக்கு தூக்குகிறது. ஒரு இசையமைப்பாளர் படத்தை எப்படி தூக்கி நிறுத்தலாம் என்பதற்கு இது உதாரணம்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவும், சிவசங்கர் கலை இயக்கமும் பக்கா.
நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் தன் வழக்கமான இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் படத்தை தூக்கி சாப்பிடுவது கயாடு லோஹர் தான். தந்த சிலை போல அழகு, மயக்கும் சிரிப்பு, ஒரு நொடி கூட கோரத்தை காட்டாமல் விஷம் தோய்ந்த கவர்ச்சியுடன் ஒரு இனிப்பான வில்லியாக பின்னி எடுத்திருக்கிறார்.
கிளைமாக்ஸில், அவ்வளவு பிரம்மாண்டமாக காட்டப்பட்ட அழியாத சக்தியுடன் ஜி.வி ஒண்டிக்கு ஒண்டி மோதுவது சினிமா…சினிமா….. சினிமா
திகில் பிரியர்களுக்கு ஒரு நல்லவிருந்து