சிறு வயதிலிருந்தே தன்னைப் பற்றி மற்றவர்கள் தொடர்ந்து பேச வேண்டும் என்ற ஆசையுடன் வாழும் அபர்ணதி, பள்ளிப் பருவத்திலேயே மாநில அளவில் முதல் மாணவியாக சாதனை படைக்கிறார். ஆனால் அந்த புகழ் விரைவில் மறைந்து போக, எப்போதும் தன்னைப் பற்றி கவனம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பல அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுக்கிறார்.
பின்னர் மாவட்ட ஆட்சியராக உயர்ந்த அபர்ணதி, தனது அதிகாரமும் புத்திசாலித்தனமும் கொண்டு அரசியல் அரங்கில் முன்னேறி, முதலமைச்சருக்கே சவால் விடும் நிலைக்கு செல்வதே ‘வெஞ்சென்ஸ்’ படத்தின் மையக் கதை.
நாயகியாக நடித்துள்ள அபர்ணதி தைரியமும் கணக்கிட்ட முடிவுகளும் கொண்ட கதாபாத்திரத்தை நம்பகமாக வெளிப்படுத்துகிறார். பல காட்சிகளில் அவரது நடிப்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. முதலமைச்சராக நடித்துள்ள இளவரசு, மத்திய அமைச்சராக ஜான் விஜய், தந்தையாக காளி வெங்கட், எதிர்க்கட்சித் தலைவராக லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்.
எம்.எஸ். பிரபுவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு தரத்தை கூட்டுகிறது. கார்த்திக் ராஜாவின் இசையும், இம்ரானின் படத்தொகுப்பும் திரைக்கதையின் வேகத்தை பெரும்பாலும் தக்கவைத்திருக்கின்றன.
ஒரு பெண்ணின் புகழ் ஆசையும் பழிவாங்கும் மனநிலையும் பின்னணியாக கொண்டு, தமிழக அரசியல் சூழலை இணைத்து இயக்குநர் ராகுல் அசோக் விறுவிறுப்பான கதையை சொல்ல முயன்றுள்ளார். முதல் பாதி வேகமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் மெதுவாக தோன்றுகிறது. இருந்தாலும் அரசியல் திரில்லர் அம்சங்களால் ‘வெஞ்சென்ஸ்’ ஒரு கவனிக்கத்தக்க முயற்சியாக அமைகிறது