சக்தி திருமகன் – விமர்சனம்

 

விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில், கிருபாலனி, செல் முருகன் மற்றும் பலர் நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் சக்தி திருமகன்.

படம் என்ன சொல்ல வருகிறது ?

இந்திய அரசியலில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை உளவறிந்து நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் விஜய் ஆண்டனியின் ஹீரோயிஸமே சக்தி திருமகன்.

கிட்டு நமது கதாநாயகனின் பெயர். இவர் நினைத்தால் எதுவும் நடக்கும் அரசியல் தரகர். இடமாற்றம் உயர் பதவி பிரமோஷன் கல்வி மருத்துவம் ரியல் எஸ்டேட் என மற்றவர்களுக்கு எது தேவையோ அதை சரியான முறையில் செய்யும் நாயகன்.

இந்நிலையில் தமிழகத்தில் ஜப்பான் முதலீட்டு நிறுவனம் தொடங்கும் கம்பெனிக்கு அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண்மணி இடம் தருகிறார். அதை அபகரிக்க நினைக்கும் அவரின் சொந்தம் நாயகனை நாட, நாயகனின் கபட நாடகத்தால் இடம் அவர் பேருக்கு மாறுகிறது. பிறகு பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது. சிறைக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி. அங்கு பல உண்மைகள் வெளி வருகின்றன. அது என்ன பாருங்கள் சக்தி திருமகன்..

விஜய் ஆண்டனி கதைகளை தேர்ந்தெடுப்பதில் ஒரு சிறந்த கலைஞர். தனக்கு ஒரு கதாபாத்திரம் வேண்டும் என்று நினைக்காமல் கதைக்குள் இருக்கும் கதாபாத்திரமாக மாறக் கூடியவர்.

இவரின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு இயக்குனர் மிகுந்த சிரத்தை எடுத்து செய்திருக்கிறார் என்பது படம் பார்க்கும் நமக்கு தெரிய வருகிறது. இயக்குனரின் நம்பிக்கை வைக்காமல் அதை காப்பாற்றியும் இருக்கிறார். இசையும் இசைத்திருக்கிறார் இவர்.

எதிர் நாயகன் சிறப்பு.. காதல் ஓவியத்தில் படத்தில் நாயகனாக இருந்த கண்ணன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் கலைப்பயணத்தை தொடர்ந்திருக்கிறார் வில்லனாக அலட்டாமல் அசராமல் தன் ஆர்ப்பரிப்பை தந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வர இந்தப் படம் இவருக்கு உதவும் என்பதில் நமக்கு ஐயமில்லை.

நாயகி படத்திற்கு தேவை. அதனால் இருக்கிறார். நடனம் ஆடாமல் பாடலில் நடித்திருக்கிறார். இறுதியில் வாரிசை பெற்றெடுக்கிறார். இவரின் பின்பலம் சொல்லப்படவில்லை.

செல்முருகன். நகைச்சுவையில் கலக்கி வந்த இவர் ஒரு கனமான கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார். சிறப்பும் செய்திருக்கிறார்.

மக்களுக்கு இந்தியாவின் எதிர்காலத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர்.  அதற்காக இந்தியன், ரமணா, கந்தசாமி என பல படங்களிலிருந்து தேவையானதை தேர்ந்தெடுத்து ஒரு புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். நாயகன் விஜய் ஆண்டனியின் தகிடு தத்த விளையாட்டுகள் புத்திசாலித்தனமாக இருந்தாலும் அதை புரிந்து கொள்வதற்கு சில நிமிடங்கள் ஆகிறது.

படத்தின் வேகம் மட்டுமே படத்தை வெற்றியாக்கி விடாது. அதற்குள் விவேகமும் இருக்க வேண்டும். பி அண்ட் சி ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். எதிர் நாயகனின் ஜனாதிபதி கனவு இந்திய அரசியலை ஒரு கேள்விக்குறியாகி இருக்கிறது. ஒரு ஜனாதிபதிக்குரிய வேட்பாளர் மிகப்பெரிய லஞ்ச லாவனியத்தில் சளைக்காமல் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஆலோசனை வழங்குபவராக ,பிறகு அவரே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது இந்திய அரசியலை அயல்நாட்டிடம் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு பிரச்சார படம் போலிருக்கிறது.

ஒரு பழமொழி சொல்வார்கள். மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பினால் எங்கே விழும். அந்தப் பழமொழிக்கு ஏற்றார் போல் இந்த படம் அமைந்திருக்கிறது. காட்சி அமைப்பில் எந்த ஒரு இடத்திலும் எதார்த்தமில்லை. அனைத்தும் சினிமா
சினிமா. அது மட்டுமே நமக்கு தெரிகிறது. அது மட்டுமல்லாமல் இந்திய பணக்காரர்கள் எப்படி எல்லாம் அரசியலுக்கு செலவு செய்கிறார்கள் என்பதும் அப்பட்டமாக தெரிகிறது.

இயக்குனரின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் அவருக்கு நமது சிறிய ஆலோசனை இந்திய அரசியலில் எடுத்துக் கொண்ட நீங்கள், அதில் உள்ள ஊழல்களை வெளிச்சம் போட்டுக்காட்டிய நீங்கள், அதற்கான தீர்வை ஏன் சொல்லவில்லை ?

கேள்விகள் எழுப்புவது எளிது. பதில் சொல்வது கடினம். இதுவே சக்தி திருமகன்

சக்தி திருமகன் – நாயகனை வெற்றி திருமகன் ஆக்கும் முயற்சி

sakthi thirumagan movie review