நட்டி, அருண்பாண்டியன், அக்சரா ரெட்டி, வினோதினி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரைட்..
படம் என்ன சொல்ல வருகிறது
அருண் பாண்டியன் மகன் காணாமல் போக அவரை கண்டுபிடிக்க சொல்லி காவல் நிலையத்துக்கு வருகிறார். அதே நேரத்தில் சிஎம் பந்தோபஸ்துக்காக இன்ஸ்பெக்டர் நட்டி சென்று விடுகிறார். அந்த சமயத்தில் அவர்களிடம் இருக்கும் லேப்டாப்பில் ஒரு மர்ம குரல் வருகிறது. ரைட்டர் அமர்ந்திருக்கும் சேரை விட்டு எழுந்தாலோ காவல் நிலையத்தை விட்டு யார் வெளியே சென்றாலோ பாம் வெடித்து விடும். அது வெடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கண்டிஷன் போட, காவல் நிலையம் கோர்ட்டாக மாறுகிறது. பிறகு நடப்பது என்ன ? இதுவே ரைட் படத்தின் கதைக்களம்.
அருண் பாண்டியன்.. இவர் ஹார்டுவேர் இன்ஜினியராக வருகிறார் பிறகு தான் தெரிய வருகிறது முன்னாள் ” Bomb Squad ” என்று. இவரின் நடிப்பு” ஊமை விழிகள் ”
படத்திலிருந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அதே நடிப்பு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் தன் பங்களிப்பை அப்படியே செய்திருக்கிறார்.
இவரின் மகனாக வருபவருக்கு ஒரு காதல். அந்த காதலினால் வரும் பிரச்சனை, பிறகு இறுதிக்காட்சியில் உண்மை வெளிப்படுகிறது.
நட்டி.. இவருக்கு காட்சிகள் குறைவு என்றாலும் கதையின் நாயகனாக சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு மகளின் அப்பாவாக இவரின் நடிப்பு சிறப்பு. சட்டத்தை காப்பாற்ற சட்டத்தையே கையில் எடுத்துக் கொண்டு அரங்கேற்றும் நாடகம் சரியா? தவறா ? படம் பார்க்கும் ரசிகர்கள் முடிவு செய்யட்டும்.
உதவி ஆய்வாளராக அக்ஷரா ரெட்டி. இவருக்கு காவல் உடை கொடுக்காமல் விரைவில் திருமணம் என்பதால் சேலையில் படம் முழுக்க காவல் நிலையத்தில் தன் சேவையை செய்கிறார்.
குற்றவாளியாக வரும் தங்கதுரை எதற்காக இந்த படத்தில் நடித்தார், அவர் கதாபாத்திரத்தினால் என்ன பலன் என்பது நமக்குத் தெரியவில்லை. படம் பார்த்து உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
வீரம் படத்தின் குழந்தை நட்சத்திரம் இந்த படத்தில் இளம் நாயகி. பருவம் பந்தாடுகிறது. பருவத்தின் விளைவு படத்தின் மூலக்கதை.
காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்றால் சென்சார் மூலம் வெடிக்கும் பாம், உள்ளே வரும்போது ஏன் வெடிக்க மாட்டேங்குது? என்பது இயக்குனருக்கு தெரிந்த விஷயம்.
இயக்குனர் அரசியலின் அராஜகத்தையும் பாலியல் வன்கொடுமையையும் கதைக்களமாக எடுத்துக்கொண்டு ஒரு காவல் நிலையத்தை நீதிமன்றமாக மாற்றி திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து பார்க்கும் ரசிகர்கள் சோர்வடையாமல் காட்சிக்கு காட்சி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சிறப்பாக இயக்கத்தை செய்திருக்கிறார் வாழ்த்துக்கள்/
ரைட்-சரியா? தவறா?