ஜான்வி சுப்ரமணியம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும் பலர் ஒத்துழைக்க கலா அல்லூரி இயக்கத்தில் வந்திருக்கும் படம் பரிசு. படம் என்ன சொல்ல வருகிறது ?
ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நரேனின் மகள் ஜான்வி ஒரு புரட்சி பெண். தன்னுடைய லட்சியமே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக உழைப்பது. அதற்காக துப்பாக்கி சுடும் போட்டி இன்னும் பல போட்டிகளில் கோப்பைகளை வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்கிறார். அதற்கு நடுவில் அவரை காதலிக்கும் கல்லூரி மாணவன், ஜானவி காதலிக்கும் போட்டோகிராபர், மனித உறுப்புகளை திருடும் மருத்துவமனை, அந்த மருத்துவமனையின் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டவரும் நாயகி.. இறுதியில் ராணுவத்தில் பணி.. இதுவே பரிசு படத்தின் கதைக்களம்.
படத்தின் நாயகி ஜான்வி நடிகை மட்டுமல்ல படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.. அவரின் தாய் தான் படத்தின் இயக்குனர். இதில் துயரமான விஷயம் என்னவென்றால் இப்போது அவர் உயிருடன் இல்லை. இருந்தாலும் படத்தை வெளிக்கொண்டு வருவதில் ஜான்வி முழு முயற்சி எடுத்து வெளிக்கொண்டு வந்து விட்டார்.
அது மட்டுமல்லாமல் படத்தில் அவரின் கதாபாத்திரம் பழைய லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியை பார்ப்பது போல் இருக்கிறது. அநியாயத்தை எதிர்க்க அவர் போராடும் போர்க்களம் ஒரு கிரண்பேடியாக தெரிகிறார். அனாதைகளை ஆதரிக்கும் மதர் தெரசாவாக தெரிகிறார். விருதுகளை வெல்லும்போது தங்க மங்கை பி.டி உஷாவாக தெரிகிறார். இப்படி பலவித வெற்றியாளர்களின் உருவம் இவர் கதாபாத்திரத்தில் வடிக்கப்பட்டு சிறப்பாக செய்திருக்கிறார்.
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா இப்படி பல திட்டங்களை தன் வசனங்கள் மூலம் ஜனங்களுக்கு தெரியப்படுத்துகிறார். நடனத்திலும் சண்டை காட்சிகளிலும் அடித்து தூள் கிளப்புகிறார். இந்தக் காலத்தில் ஆண்களை தொடாமல் நடனமாடி நடித்திருப்பது இவர் மட்டுமே. இவரின் முற்போக்கான சிந்தனை கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்துகிறது.
உடன் நடிக்கும் நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தாலும் படத்தை முழுமையாக ஆக்கிரமிப்பது ஜான்வி மட்டுமே. படத்தில் சிலசில குறைகள் இருந்தாலும், கதையின் கரு ஒரு முற்போக்கு சிந்தனையை நமக்கு சொல்ல வருவதனால் தவறுகளை மன்னித்து படத்தை வாழ்த்துவோம்.
பரிசு – இது மக்களுக்கானது