அதர்ஸ் – விமர்சனம்

 

அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் அதர்ஸ். படம் என்ன சொல்ல வருகிறது ?

ரோட்டில் கல்லை வைத்து வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி அவர்களிடம் இருக்கும் நகைகளை கொள்ளை அடிக்கும் ஒருவன், அப்படி செய்யும் போது அந்த விபத்து ஏற்படும் வாகனம் வெடித்து சிதறுகிறது. அதில் மூன்று பெண்கள் மரணம் அடைகின்றனர். அது மரணமா, கொலையா என்று விசாரிக்கும் நாயகன் காவல் உதவி ஆணையராக தன் பணியை செய்ய, அவருக்கு ஏகப்பட்ட இடர்பாடுகளும் நினைத்துப் பார்க்காத சம்பவங்களும் நடக்கின்றன. இறுதிக் காட்சியில் நாம் அறியும் உண்மை வில்லனாக இருந்தாலும் அவன் மேல் ஒரு பரிதாபத்தை உருவாக்குகிறது, அது என்ன ? பாருங்கள் அதர்ஸ்

அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன் பார்ப்பதற்கு மலையாள நடிகர் நிவின்பாலி போல் உன் கண்களுக்கு தெரிகிறார். அதே சமயம் அறிமுக நாயகன் என்று தெரியாமல் தன் நடிப்பை அந்த கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார். அவர் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு மிகைப்படுத்தல் நடிப்பு இல்லாமல் ஒரு எதார்த்த மனிதனாக நம் கண்களுக்கு தெரிகிறது. சண்டை காட்சிகளும் சரி காதல் காட்சிகளும் சரி அனைத்திலும் ஒரு அளவுகோல் வைத்து படத்திற்கு சிறப்பு செய்திருக்கிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் சிறந்த எதிர்காலம் இருக்கும் என்பது படம் பார்க்கும் அனைவருக்கும் தெரியவரும்.

நாயகி கௌரி கிஷன் மருத்துவராக இந்த படத்தில் வருகிறார். ஏதோ கதாநாயகன் காதலிப்பதற்காக ஒரு நாயகி இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் இயக்குனர் அந்த கதாநாயகியையும் கதைக்குள் வரவைத்து சிறப்பு செய்திருக்கிறார். இவர் கண்டுபிடிக்கின்ற, நாம் யாரும் நினைத்து பாராத ஒரு விஷயம். இது நடந்தால் மனிதகுலத்தின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக விடும். அப்படிப்பட்ட அந்த விஷயம் என்ன ? பாருங்கள் அதர்ஸ்..

இயக்குனர் எடுத்துக்கொண்ட கதைக்களம் கொஞ்சம் சிரமமானது என்றாலும் திரைக்கதையில் இடைவேளை வரை ஒரு பரப்பரப்புடன் ஒரு விறுவிறுப்புடன் மிக அழகாக படத்தை  நகர்த்தி செல்கிறார். இடைவேளைக்குப் பிறகு இதுதான் கதை என்பது நமக்கு தெரிந்து விட்டதால் படத்தின் ஓட்டம் நமக்கு மிக மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையில் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் கிரைம் பட வரிசையில் இந்த அதர்ஸ் படம் ஒரு இடத்தைப் பிடித்து இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இயக்குனரின் புதிய முயற்சிக்கு நமது வாழ்த்துக்கள்.

ரேட்டிங் ; 3.5 / 5