தனி ஒருவனின் சாதனை முயற்சி
தமிழ் சினிமாவில் ! அவ்வப்போது சில சாதனைகள் நடந்து வருகிறது
கிராமத்திற்க்குள் கேமராவை கொண்டு ரசிகனை கிரமாத்து மண்வாசனை காட்டிய பாரதிராஜா
உறவுகளையும் விரிசல்களையும் காதலையும் காமத்தையும் நகைச்சுவையும் புதுமையும் கொண்டு வந்த K பாலச்சந்தர்
பிரம்மாண்டத்தை பிரம்மாண்டமாக காட்டிய ஷங்கர்
பாகுபலி எனும் படத்தால் உலகை திரும்பிப் பார்க்க வைத்த ராஜமவுலி
பல்துறை வித்தகர் டி ராஜேந்தர் தன் படத்தில் பல துறைகளை அவரே கையாண்டிருப்பார்
அவரே அசந்து போகும் அளவில் ஒரு படத்தில் நடித்து அனைத்து கதாபாத்திரங்களும் நடித்து அனைத்து துறை வேலைகளையும் தனி ஒருவனாக சாதித்துக் காட்டியிருக்கும் சங்ககிரி ராஜ்குமாரின் படைப்பே “ஒன்” படம் என்ன சொல்ல வருகிறது
சங்ககிரி ராஜ்குமார் ஒரு அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார். அங்கு ஒரு மர்மமான லேப் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அங்கிருக்கும் ஒரு மருந்தை உடலில் செலுத்திக் கொண்டால், யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து வாழலாம், இந்த உலகத்துக்கே நாம்தான் ராஜா என்பதை தெரிந்து கொள்கிறார். அவருடன் இருக்கும் நான்கு நண்பர்களும் அந்த மருந்தை போட்டுக் கொண்டு, மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் இந்த உலகத்திலேயே வாழ்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் இரண்டு நண்பர்களுக்கு மனம் மாறுகிறது. “இது தப்பு, உலகில் வாழ மனிதர்கள் வேண்டும்” என்று அவர்களுக்கு புரிகிறது. ஆனால் ஹீரோவான ராஜ்குமாருக்கு இது பிடிக்கவில்லை. தன்னுடன் இருக்கும் நண்பர்களையே கொல்ல திட்டம் போடுகிறார். அந்த கொலை முயற்சி வெற்றி பெற்றதா? அவர்கள் மீண்டும் பழைய உலகத்துக்கு திரும்பினார்களா? என்பதுதான் மீதி கதை.
முதலில் சபாஷ் ராஜ்குமார்! தானே இயக்கி, தானே அத்தனை வேடங்களில் நடித்ததற்காகவே அவரை பாராட்ட வேண்டும். இப்படி ஒரு முயற்சியை யோசித்து அதை செயல்படுத்தியதே பெரிய விஷயம்.
ஹீரோ, அவரது நண்பர்கள், அம்மா வேடத்தில் வரும் பெண், போலீஸ், டிரைவர் என அத்தனை கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே வருவது ஆச்சரியம். குரலை மாற்றியும், கெட்டப்களை மாற்றியும் கதாபாத்திரங்களை வித்தியாசப்படுத்த முயன்ற விதம் பாராட்டத்தக்கது.
படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது. சாதாரணமாக செல்லும் எடிட்டிங், கடைசி அரை மணி நேரத்தில் இன்னும் வேகம் எடுக்கிறது. தனி ஒருவர் எப்படி கேமரா, கிரேன் போன்ற கருவிகளை பயன்படுத்தினார் என்ற கேள்வி நமக்கு வரும். அதற்கு பதிலாக, படம் எடுத்தபோது இன்னொரு கேமராவில் தான் படம் எடுத்த விதத்தை அவரே பதிவு செய்து படத்தில் காட்டியிருக்கிறார்.
கிரேன் ஷாட்டுக்கு தானாக இயங்கும் கருவிகளை பயன்படுத்தியது, கேமராவுக்கு டைமர் வைத்தது, கிரீன் மேட் பயன்படுத்திய விதம் என அனைத்தையும் விளக்கியிருக்கிறார்.
சினிமா கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நடிப்பில் ஹீரோவாக வரும் ராஜ்குமாரின் நடிப்பு மட்டுமே பாராட்டும்படி உள்ளது. ரயிலை எடுத்து ஓட்டும் காட்சி, அது விபத்துக்குள்ளாகும் காட்சி எல்லாம் சிறப்பாக வந்துள்ளது.
படத்தில் சில குறைகள் இருந்தாலும் நிறைகளை எடுத்துக் கொண்டு தனி மனிதனின் முயற்சியை பாராட்டி அவனை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதே நமது கடமை
மொத்தத்தில் சினிமா என்பது காட்சி ஊடகம். அதை பல தொழில்நுட்பங்கள் மூலம் இன்றைய இயக்குனர்கள் சொல்லி வருகிறார்கள். அதை ஒரு தனி ஆளாக நமக்கு ஆழமாக உணர்த்தியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்
தமிழில் இப்படி ஒரு படம் வந்ததற்கு நாம் பெருமைப்பட வேண்டும். வணிக சினிமா மட்டுமே பார்க்கும் ரசிகர்கள் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை பாராட்ட வேண்டும்.
இது வெறும் படம் அல்ல, சினிமா கல்வி. மாற்று சினிமா ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த ‘ONE’ கண்டிப்பாக பிடிக்கும்.
ஒன்- தமிழனின் பெருமை இந்தியனின் திறமை