பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட கலையரசன், தீபா பாலு தம்பதிகள் வெளியூரில் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். பின்னர் ஊருக்கு திரும்பும் போது, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலுவை குடும்பத்தினர் குலதெய்வமான நிறைசூலி தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட காட்டுப்பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்கிறார்கள். ஆனால் அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத கொடூரமான சம்பவங்களே படத்தின் மையக்கதையாக அமைகிறது.
கதாநாயகனாக நடித்துள்ள கலையரசன், இயல்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்.. அறிமுக நடிகையான தீபா பாலு குடும்ப பாங்கான தோற்றத்தோடு உணர்ச்சி மிகுந்த நடிப்பை வெளிப்படுத்தி பல காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது..
பாலசரவணன் இங்கு நகைச்சுவை நடிகராக அல்லாமல் குணச்சித்திர வேடத்தில் கவனம் ஈர்க்கிறார்.. கஜராஜ் வசனம் இல்லாத கதாபாத்திரமாக இருந்தாலும், தனது முகபாவனைகளின் மூலம் அந்த வேடத்தின் கொடூரத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறார்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா கிராமத்து சூழலையும் மனிதர்களின் இருண்ட மனநிலையையும் எதார்த்தமாக பதிவு செய்துள்ளார். சாந்தன் இசையமைப்பில் பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வை அதிகரிக்கின்றன. அஜய் மனோஜின் படத்தொகுப்பு கதையை சீரான வேகத்தில் நகர்த்த உதவுகிறது.
சமூகத்தில் காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு கொடூரமான உண்மையை மையமாக வைத்து இயக்குநர் வி.ஆர்.துதிவாணன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். தீர்வுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, அந்த சம்பவங்களின் வலி மற்றும் வேதனையை நேரடியாக பார்வையாளர்களின் மனதில் பதியச் செய்கிறார்.. சில காட்சிகளில் வன்முறை அதிகமாக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமான காட்சிகள் படத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன..
மொத்தத்தில், சமூகத்தின் கொடூரமான உண்மையை வலியுடன் சொல்லும் உணர்ச்சிபூர்வமான திரைப்படமாக ‘கொலைச்சேவல்’ அமைந்துள்ளது.