காட்டாளன் – விமர்சனம்

காட்டுப்பகுதியில் யானைகளின் அட்டகாசம் தாங்காமல் மக்கள் சுனிலிடம் தங்களைக் காப்பாற்றும்படி கூற, காட்டுக்குள் வரும் சுனில், காட்டு யானைகளின் தந்தங்களைக் கடத்தி மிகப்பெரிய கடத்தல் காரனாக மாறுகிறான். கிராம மக்களைத் தன் அடிமைகளாக்கி, அவர்களைத் தன் கட்டுக்குள் வைத்து காட்டு ராஜாவாக வாழ்கிறான்.

அதே சமயம், மந்திரியின் அடியாளான கபீர் துகான் சிங், யானைத் தந்தங்களைக் கடத்தும் முயற்சியில் ஈடுபடுகிறான். அதற்குச் சுனில் இடையூறாக இருப்பதால், அவனைச் சட்டத்தின் மூலமாக மாட்டிவிட்டுத் தானே காட்டு ராஜாவாக மாற முடிவெடுக்கிறான். அந்த நேரத்தில், சுனில் அனைத்தையும் முறியடிக்கிறான். ஒரு கட்டத்தில், சுனில் செய்யும் அநியாயங்களை ஆண்டனி வர்கீஸ் தட்டி கேட்கிறார்.

மேலும், சுனிலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகவும் அவர் செயல்படுகிறார். இதனால் ஆத்திரமடையும் சுனில், ஆண்டனி வர்கீஸைத் தீர்த்துக்கட்ட கபீர் துகானுடன் கைகோர்க்கிறான். இதனால் ஆண்டனி வர்கீஸே சுனிலுக்குப் பெரும் எதிரியாக மாறுகிறான். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் ‘காட்டாளன்’ படத்தின் மீதிக்கதை.

படத்திற்கு இரு கதாநாயகர்கள் என்றாலும், ஆண்டனி வர்கீஸை விடச் சுனிலின் கதாபாத்திரமே எதிர் நாயகனாகப் படத்தின் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்துள்ளது. இதுவரை ஒரு நகைச்சுவை நடிகராகப் பார்த்த சுனிலின் வில்லத்தனமும் நடனமும் முன்னணி கதாநாயகர்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளன.

ஆண்டனி வர்கீஸ் அலட்டல் இல்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த அமைதிக்குள் ஒரு பூகம்பத்தை மறைத்து வைத்து, காட்சிக்குக் காட்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முகபாவங்கள் எனத் தனது பன்முகத்தன்மையை நம்முன் கொண்டு வந்துள்ளார்.

துஷாரா விஜயன் இறுதிக்காட்சியில் ஒரு இருபது நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் எனப் படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பைத் தந்துள்ளனர்.

படம் முழுக்க கத்தி, துப்பாக்கி, ரத்தம், சத்தம் என ஒரே இரைச்சலாக இருந்தாலும், ஆக்ஷன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த ‘காட்டாளன்’ திரைப்படம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

காட்டாளன் – நவீன வீரப்பன்

kattalan movie reviewகாட்டாளன் - விமர்சனம்
Comments (0)
Add Comment