இட்லி கடை ; விமர்சனம்

 

தனுஷ், சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், சமுத்திரகனி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் இட்லி கடை.

ராஜ்கிரண் தேனி பக்கத்தில் இருக்கும் சங்கராபுரத்தில் தன் குலத்தொழிலான இட்லி கடை நடத்தி வருகிறார். அவரின் மகனான தனுஷ் கல்லூரியில் கேட்டரிங் படிப்பு படித்து பாங்காங் சென்று மிகப்பெரிய ஹோட்டலில் நிர்வாகியாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த ஹோட்டல் முதலாளி சத்யராஜ் மகளான ஷாலினியை காதலித்து திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பாக ராஜ்கிரண் இறந்து விட, இந்தியா வரும் தனுஷ் தந்தையின் காரியத்தை முடித்து விட்ட நேரத்தில் தாயும் மரணம் அடைகிறார்.

தந்தையின் உயிரான இட்லி கடையை தானே நடத்த தனுஷ் முடிவெடுக்க பாங்காங்கில் திருமணத்திற்காக காத்திருக்கும் காதலி இவரை அழைக்க திருமணத்தை தள்ளி போட சொல்லகிறார். தனுஷ், காதலி மறுக்க திருமணத்தையே நிறுத்த சொல்கிறார் தனுஷ்.

தனுஷை அழைத்து செல்ல காதலியின் அண்ணன் அருண் விஜய் இந்தியா வர இருவருக்கும் ஏற்படும் கைகலப்பில் அருண் விஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அடிபட்ட பாம்பாக அருண் விஜய் தனுஷை பழிவாங்க காத்திருக்கிறார். பிறகு நடப்பது என்ன? பாருங்கள் இட்லி கடை.

நாயகன் தனுஷ்.. இவரின் பரிமாணங்கள் பல படங்களில் பல விதங்கள்.. இந்த இட்லி கடையில் இன்னும் சிறப்பு. கிராமத்தை விட்டு வராத தந்தை, வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் மகன் பாங்காங் சென்று தன் கனவை நிறைவேற்ற காதலின் அண்ணனிடம் அவமானப்படும் ஒரு சாதாரண மனிதன்.. காரணம் தன் முன்னேற்றம்.

அதே நேரம் தந்தையின் மரணத்திற்கு பிறகு அவரின் ஆசையான இட்லி கடையை நடத்த பல நூறு கோடிக்கு சொந்தக்காரியான காதலியை தூக்கி எரியும் மண்ணின் மைந்தன். தன்னை அடிக்கும் அருண் விஜய்யை பந்தாடும் அதே நேரத்தில், தந்தையின் சொல் வாக்கான அகிம்சை கொள்கையை  கடைபிடித்து எதிரியை அகிம்சையால் வெல்கிறார்,

ஒரு சாதாரண மனிதனாக பணம் சம்பாதிக்கும் ஏக்கம், அதேசமயம் தந்தையின் உயிர் மூச்சான இட்லி கடையை பிரிய மனமில்லாமல் பல நூறு கோடிகளை ஒதுக்கி தள்ளும் மகனாக தன் சிறப்பை நடிப்பால் வழங்கியிருக்கிறார்,

ஆக்ரோஷத்திலும் சரி, அடிதடியிம் சரி, அன்பிலும் சரி.. அனைத்திலும் தனுஷ் மிகச்சிறப்பாக தன் பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நித்யா மேனன், ஷாலினி பாண்டே இரு நாயகிகள்.. நித்யா மேனனின் நடிப்பை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எந்த கதாபாத்திரமும் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல் தான். அதே போல் தான் இந்த கதாபாத்திரமும்.. அசால்ட் செய்திருக்கிறார்.

ஷாலினி பாண்டே கோடீஸ்வரன் மகள்.. தனக்குத் தந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

எதிர் நாயகன் அருண் விஜய். தங்கையின் கணவனாக போகும் தனுஷ் என்றாலும் பாக்ஸிங்ல் அவரை வர செய்து தன் கோபத்தை “பன்ச் “பஞ்ச் “ஆக தெரிக்க விடுகிறார். அதேசமயம் கிராமத்தில் தனுஷிடம் அடி வாங்கும்போது கூட தன் “பாடிகாட்” தனக்கு உதவ கூடாது என்ற நோக்கத்துடன் அடியை வாங்கிக் கொள்வது ஈகோவின் இன்னொரு விதம்.

சத்யராஜ் விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வர வரிசையில் இவரும் ஒருவர். தன் மகனைக் கைநீட்டி அடிக்காமல் வளர்த்து பாசம் வைத்து மகன் செய்யும் செயலுக்கு கண்டிக்க முடியாமல் பாசத்தந்தையாக பரிமளிக்கிறார்,

கிராமத்து வில்லனாக சமுத்திரகனி நாயகியை சுற்றி வருகிறார். நாயகன் இட்லி கடையை விலைக்கு வாங்கவும் முயற்சி செய்கிறார். கிராமத்துக்குள் இருக்கும் ஒரு யதார்த்த வில்லன்.

காவல் ஆய்வாளராக பார்த்திபன். இந்த கதாபாத்திரத்திற்கு இவரை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது இறுதிக்காட்சியில் நமக்குத் தெரிய வரும்.

தனுஷின் அப்பாவாக ராஜ்கிரண்.. கிராமத்து வெள்ளந்தியாக இவரின் பரிமாணம் அழகு.. தன் கதாபாத்திரத்திற்குள் வாழ்ந்திருக்கிறார்..

மற்ற கதாபாத்திரங்களும் அவரவர் பங்களிப்பை சிறப்பு செய்திருக்கின்றனர்.

தனுஷ் நடிகராக இந்த படத்தில் சிறப்பு செய்தாலும் அதைவிட சிறப்பு அவரின் எழுத்தும் இயக்கமும். ஒரு கிராமத்தில் இவர் பார்த்த இட்லி கடையை கருவாக வைத்துக் கொண்டு அதில் சில பல கற்பனைகளை  மண்வாசனையுடன் சேர்த்து திரைக்கதையை செதுக்கி அதற்குள் வெளிநாட்டில் பரிதவிக்கும் மனங்களின் உணர்வுகளையும் அவர்களைப் பிரிந்து தவிக்கும் குடும்பங்களின் உறவுகளையும் மிக அழகாக மிகைப்படுத்தாமல் ஒரு மெல்லிய தென்றலாக நம் முன் கொண்டு வருகிறார்.

வெளிநாட்டில் இருந்து வரும் மகன் தன் தாயைப் பார்த்து அம்மா என்று கூற, யாருப்பா நீ என்று அவள் கேட்க, நான் ராமராஜன் என்று சொல்ல, எனக்கும் ராமராஜன் ஒரு மகன் இருந்தான் அவன் இப்போ ஃபாரின்ல இருக்கான் என்று சொல்லும் ஏக்கம் கல்நெஞ்சுக்காரனுக்கும் கண் கலங்கும். இயக்குனர் தனுஷுக்கும் நடிகர் தனுஷுக்கும் நம் சார்பாக வாழ்த்துக்கள்.

 

இட்லி கடை – மண்ணின் மைந்தன்

ரேட்டிங் ; 4 / 5

idly kadai movie reviewஇட்லி கடை ; விமர்சனம்