டீசல் – விமர்சனம்

 

ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சாய்குமார், வினய், சச்சின் கெடேகர், ஜாகீர் உசேன் மற்றும் பலர் நடிப்பில் சண்முக முத்துசாமி இயக்கத்தில் தேர்ட் ஐ தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் டீசல். படம் என்ன சொல்ல வருகிறது ?

1970 காலகட்டத்தில் வடசென்னை எண்ணூர் அருகே மத்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொலைக்கும் விதத்தில் கச்சா எண்ணெய் பைப் லைனை போட, அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவன் சாய்குமார் அந்த பைப் லைனில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து அதை மும்பைக்கு அனுப்பி அங்கிருக்கும் பெரிய நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, அதைப் பெட்ரோல் ஆக்கி, மீண்டும் சென்னையில் விற்பனை செய்ய, அதற்கு போட்டியாக விவேக் பிரசன்னா வர அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை சொல்லும் படமே டீசல்.

ஹரிஷ் கல்யாண் காதல் நாயகனாக இருந்து கொண்டு இந்த படத்தில் அடிதடி நாயகனாக தன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். சாய்குமாரின் நண்பனின் மகனான ஹரிஷ் கல்யாண் தந்தையின் இறப்புக்குப் பிறகு சாய்குமார் மகனாகவே வாழ்கிறார். தந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால்  எதிரி யாராக இருந்தாலும் பந்தாடி விடுவார். ஒரு பிரச்சனையில் இன்ஸ்பெக்டர் வினய்யை கொலைத்தாக்குதல் தாக்க, தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட ஹரிஷ் கல்யாணை போலீஸ் வலை வீசி தேடும் நேரத்தில் நடுக்கடலில் போட்டில் அவருக்கு ஒரு காதல் என பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார் ஹரிஷ் கல்யாண். சண்டை காட்சிகள் முதல் காதல் காட்சிகள் வரை மிகவும் சிறப்பாக தனது பங்களிப்பை தந்திருக்கிறார்.

அதுல்யா ரவி சட்டக் கல்லூரி மாணவி. இவர் கனவில் வரும் கடல் கன்னியை பார்க்க கடலுக்கு செல்லும்போது நாயகனின் வலையில் சிக்கி, தான் கனவில் கண்டது நாயகனின் தாய் தான் என்பது தெரிய வருகிறது. பிறகு என்ன காதல் தான். இவரின் அறிமுகக் காட்சி தளபதி படத்தில் நடிகை ஷோபனாவை ரஜினி பார்க்கும்போது அகல் விளக்கை ஆற்றில் விடுவார்கள். அதேபோல் அதுல்யா ரவியும் அகல் விளக்கை ஆற்றில் விட்டு காதலன் மனதில் குடிபுகுந்து விடுகிறார்.

எதிர் நாயகனாக விவேக் பிரசன்னா அலட்டல் இல்லாத அமைதியான வில்லன். மென்மையாக பேசி காரியத்தை சாதிக்கும் வல்லவன்.

சாய்குமார் மக்களுக்காக போராடும் போராளி. இவரின் நடிப்பு மற்ற படங்களில் எப்படியோ அப்படியே இந்த படத்திலும்.

மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

இயக்குனர் சண்முகம் முத்துசாமி இவர் மணிவண்ணனின் உதவியாளர்.. அதனால் அரசியலையும் படத்தில் அங்கும் வகிக்க செய்து இருக்கிறார். எடுத்துக்கொண்ட கதைக்களம் சிறந்தது என்றாலும் திரைக்கதைக்குள் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதாக படம் பார்க்கும் நமக்கு தெரிய வருகிறது.

திரைக்கதைக்குள் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் இந்த டீசல் படம் இந்திய லெவலில் ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்து இருக்கும் என்பதில் ஐயமில்லை.

டீசல் – கல(ப்) படம்

ரேட்டிங் – 2 /5

diesel movie reviewடீசல் - விமர்சனம்