ஷேன் நிகம், சாந்தனு, செல்வராகவன், ப்ரீத்தி நடிப்பில் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் பல்டி..
படம் என்ன சொல்ல வருகிறது ?
நண்பர்கள் நான்கு பேர் கபடி வீரர்கள்.. இவர்கள் எந்த டீமில் இருக்கிறார்களோ, அந்த டீமே வெற்றிக்கோப்பை வெல்லும். கந்து வட்டி, ஸ்பீடு வட்டி என வட்டி தொழில் செய்து வரும் செல்வராகவன் தன் கபடி டீமில் இவர்கள் நால்வரையும் விளையாட சொல்ல கோப்பையை வென்று தருகிறார்கள். அது மட்டுமில்லாமல் அந்த வெற்றியோடு கந்து வட்டி தொழிலுக்கு செல்வராகவன் துணையாக வைத்துக் கொள்கிறார்.
இந்நிலையில் ஷேன் நிகத்தின் காதலி பிரீத்தியின் அண்ணனை உடலில் ஒட்டு துணி இல்லாமல் அசிங்கப்படுத்தி கடனை கேட்க, போலீசில் புகார் தெரிவிக்கிறார் அவரின் தங்கை ப்ரீத்தி. இதையறிந்த செல்வராகவன் ப்ரீத்தியை மிரட்ட, வெகுண்டு எழும் ஷேன் நிகம் செல்வராகவனை தாக்க பிறகு நடப்பது தான் பல்டி.
நாயகன் ஷேன் நிகம். அட.. அட. அட. அட.. அவர் கபடி விளையாடும் ஸ்டைல் மிக அருமை. அதே ஸ்டைலில் சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்குவதிலும் சிறப்பு. கபடி களத்தில் காதலியை பார்த்ததும் அவர் தடுமாற்றம், காதலி சென்றவுடன் அவரின் அதிரடி ஆட்டம். நானும் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்ல வருகிறார். இறுதிக்காட்சி சண்டைக்காட்சிகளில் இவரின் அடி எதிராளிக்கு மரண அடி. காதலியை மார்க்கெட்டில் பார்ப்பது, கறிக்கடையில் காதலியை பார்த்ததும் சட்டையை போடுவது என ஒரு வாலிப இளைஞனின் இளமை சிதறல் அசத்தல்.
நாயகி ப்ரீத்தி ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு வித தோற்றம், தோற்றத்திற்கு ஏற்றார்போல் நடிப்பில் ஒரு மாற்றம். எதிர்கால தமிழ் சினிமா இவர் கைக்குள் போவது உறுதி.
நம்ம ஊரு நாயகன் சாந்தனு பாக்கியராஜ். ப்ளூ ஸ்டார் படத்திற்குப் பிறகு அவருக்கு இந்த படம் இன்னும் பல படங்களின் வாய்ப்புகளை வாங்கித் தரும் என்பதில் ஐயமில்லை.
செல்வராகவன் வில்லன். ஆனால் தன்னை நல்லவன் போல் காட்டிக் கொள்ளும் வில்லன். அவர் கூறும் வட்டி கணக்கு கடன் வாங்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை.
இயக்குனர் உன்னி சிவலிங்கம் கேரளா, தமிழ்நாடு பார்டரில் வட்டி தொழில் செய்யும் மூன்று கதாபாத்திரங்களை எடுத்துக் கொண்டு, அதற்குள் கபடி விளையாட்டையும் கபடி வீரர்களையும் இணைத்து ஒரு அதிரடி ஆக்சன் படத்தை நமக்கு தந்திருக்கிறார். காட்சிக்கு காட்சி பரபரப்பு. பார்க்கும் மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு. இறுதிக்காட்சியில் யாரும் எதிர்பாராத முடிவு. ஒரு படத்திற்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் சரியான பங்களிப்பில் தந்து, தான் ஒரு வெற்றியை இயக்குனர் என்பதை தெரிவித்திருக்கிறார் வாழ்த்துக்கள்.
பல்டி- வட்டி