
பாம் – விமர்சனம்
அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், சிவாத்மிகா, நாசர், அபிராமி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பாம்.
படம் என்ன சொல்ல வருகிறது ?
காள கம்பம்பட்டி என்ற கிராமத்தில் பிரிவினையால் காளப்பட்டி, கம்மம்பட்டி என இரண்டாக பிரிகிறது. காரணம் எங்கிருந்தோ வந்த கற்கள் இரண்டாய் உடைந்து இரண்டு இடத்தில் விழுகிறது. ஒன்று சிறிய கல். ஒன்று பெரிய கல். இரண்டு கல்லையும் தனித்தனியாக இரு பிரிவினர் சாமியாக வழிபடுகின்றனர்.
இதில் எந்த சாமி பெரியசாமி, அதாவது “உயர்ந்த சாமி “என்ற பிரச்சனை பெரிதாகி ஊர் இரண்டு பட்டு சண்டை சச்சரவு நடக்க, அதை ஒன்றாக சேர்க்க பாடுபடும் காளி வெங்கட்டின் முயற்சி தோல்வி அடைய, மரணம் அடைகிறார் அவர் மரணம் அவரை கடவுளாக காட்டுகிறது.
அவர் யார் கடவுள் என்ற பிரச்சனை ஏற்பட, முடிவு சொல்கிறார் நாயகன் அர்ஜுன் தாஸ். இதுவே பாம் படத்தின் கதைக்களம்.
அடிதடி மன்னன் கரகர குரலோன் அர்ஜுன் தாஸை மிக பணிவாக அமைதியாக ஒரு அம்மாஞ்சி போல் கதாபாத்திரத்தை வடிவமைத்து, அவரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர், அர்ஜுன் தாஸும் தன் முந்தைய படங்கள் சாயல் இல்லாமல் ஒரு புதிய பாணியில் தன் நடிப்பை வழங்கியிருக்கிறார்,
அடுத்து காளி வெங்கட். இவரை படத்தின் இரண்டாம் கதாநாயகன் என்று சொல்லலாம். கம்யூனிஸ சிந்தனை, பெரியார் வழியில் கொள்கை என இவர் கதாபாத்திரம் அழகாக இருக்கிறது.
பாதி படம் முழுக்க இவருக்கு டெட் பாடி கெட்டப் தான். ஆனால் இவர் விடும் பின்வினைப் ‘ பயன்தான் படத்தின் டைட்டில். நகைச்சுவையின் ஓட்டம் அங்கு இதுதான் ஆரம்பிக்கிறது.
இவரை வைத்துக்கொண்டு இரண்டு ஊர் மக்களும் தங்கள் கடவுள் இவர் தான் என்று கூறும்போது, ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும் மக்களின் இயலாமையும் மூடநம்பிக்கையும் எப்படி எல்லாம் அரசியல்வாதிகள் பயன்படுத்தி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறார் என்பதை நாசர் கதாபாத்திரம் நமக்கு எடுத்து சொல்கிறது.
நாயகி காட்சிகள் குறைவு என்றாலும் அதிலும் தன் பங்களிப்பை சிறப்பு செய்திருக்கிறார். சிங்கம்புலி உட்பட மற்ற கதாபாத்திரங்களும் அருமை இயக்குனர் விஷால் வெங்கட் நகைச்சுவையை ஒரு புதிய பாணியில் சொல்ல புதிய கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அதில் கூட எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக இந்து, முஸ்லிம் என்று சொன்னால் மதப் பிரச்சனை வந்துவிடும். அதனால் இந்து மதத்திலேயே இரண்டு பிரிவினையை ஏற்படுத்தி அதுவும் உருவம் இல்லாத வெறும் கல்லை வைத்துக் கொண்டு மூடநம்பிக்கையை வைத்து மக்களுக்கும் படம் பார்க்கும் நமக்கும் ஏதோ சொல்ல வருகிறார் இயக்குனர் விஷால் வெங்கட், மெல்லிய நகைச்சுவையை படம் முழுக்க தெளித்தாற்போல் திரைக்கதை வடிவமைத்து மக்களை ரசிக்கும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார். வாழ்த்துக்கள் விஷால் வெங்கட்
பாம் – மூடநம்பிக்கையை வெடித்து சிதற வைக்கும்
