விக்ரம் பிரபு, L. K. அக்சய்குமார், அனிஷ்மா, அனில் குமார் ஆனந்தா, தம்பிராஜா மற்றும் பல நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சிறை. படம் என்ன சொல்ல வருகிறது ? வாருங்கள் பார்ப்போம்.
கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் தலைமை காவலராக நாயகன் விக்ரம் பிரபு. வேலூரில் இருந்து சிவகங்கை கோர்ட்டுக்கு கைதியை அழைத்துச் செல்லும் பொறுப்பு அவருக்கு வழங்கப்படுகிறது. அப்படி அழைத்துச் செல்லும்போது கைதியின் காதல் கதையை கேட்ட விக்ரம் பிரபு அவர்கள் காதலை எப்படி சேர்த்து வைக்கிறார் என்பது மீதி கதை.
கேட்பதற்கு ஒரு சாதாரண கதையைப் போல் தான் நமக்குத் தோன்றும். கதைக்கு சொந்தக்காரர் டானாகாரன் இயக்குனர் தமிழ். இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்குனர், தமிழ் இருவரின் திரைக்கதை கைவண்ணத்தால் ஒரு திரில்லர் படத்திற்கு உண்டான பரபரப்பும் விறுவிறுப்பும் நம்மை சீட்டின் நுனிக்கு அழைத்துச் செல்கின்றன.
படத்தின் துவக்கத்தில் ஒரு ரவுடியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, அவன் தப்பிக்க அவனை சுட்டு வீழ்த்துகிறார் தலைமைக் காவலர் விக்ரம் பிரபு. அதற்காக அவர் எதிர்கொள்ளும் மனித உரிமை கமிஷன் விசாரணை. அதற்கு இவர் சொல்லும் பதில்கள் காவலர்கள் என்றால் சாதாரணமில்லை அதில் எவ்வளவு கஷ்டங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை மிக அருமையாக இயக்குனர் நமக்கு சொல்லி இருக்கிறார்.
அதேபோல் ஒரு இஸ்லாமிய கைதி என்றால் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன என்பதையும் நாசுக்காக சொல்லி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் எந்த அளவுக்கு மந்தமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அழகாக அடிக்கோடு போட்டு காட்டிக் இருக்கிறார்.
இவர் இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் தான். ஆனால் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இந்த படத்தில் தன் இயக்கத்தில் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் இவர் விரல் விட்டு எண்ணக் கூடிய இயக்குனர் வரிசையில் இடம்பெறுவார் என்பது நம் அசைக்க முடியாத நம்பிக்கை.
கதையின் நாயகனாக விக்ரம் பிரபு. காவலர் உடையில் இவரின் கம்பீரம் மிக அழகாக இருக்கிறது. வரும் காலங்களில் காவல் அதிகாரி என்றால் விக்ரம் பிரபுவை கூப்பிடுங்கள் என்று அழைக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தின் பொருத்தம் இவருக்கு மிக அருமையாக பொருந்தி இருக்கிறது. காவலர் என்றால் கடுகடுப்பாக சிடுசிடுப்பாக முரட்டு முகத்துடன் இருப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்றி அதற்குள் ஒரு இதயம் ஒரு மனிதநேயம் ஒளிந்து இருக்கிறது என்பதை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்/
இறுதிக்காட்சியில் யார் யாருக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதோ அந்த அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பதை மிக அழகாக தெளிவுபடுத்தி இருக்கிறார்/ இவர் நடித்த படங்களில் இந்த சிறை இவரின் நடிப்பின் வெளிச்சத்தை பறைசாற்றும் என்பது நிச்சயம்.
கதாநாயகன் அக்ஷய் குமார் அறிமுக நாயகன் தான்/ ஏதோ சுமாராக நடிப்பார் என்ற எண்ணத்தில் நாம் இருந்தால் அதை தகர்த்தெறிந்து நான் அறிமுக நாயகன் இல்லை அனைத்தும் அறிந்த நாயகன் என்பதை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். காதலியை எதிர்பார்த்து இவர் தவிக்கும் தவிப்பு, தன் தாயை தவறாக பேசிய உடன் இவரின் கோபம், இயலாமையில் நீதிபதியிடம் இவர் கெஞ்சும் இடம் என தனக்குத் தரப்பட்ட அத்தனை காட்சிகளிலும் முத்திரை பதித்து தமிழ் திரையுலகத்தில் புது வரவாக வந்தாலும் எதிர்காலம் தமிழ் திரையுலகம் இவர் பின்னாடி செல்லும் என்பது நமது எண்ணம்.
நாயகி அனுஷ்மா சிரிப்பழகி. ஆரம்பக் காட்சி சிரிப்பில் நம்மை அவர் பக்கம் ஈர்த்துவிடுகிறார். காதலுக்காக இவர் போராடும் போராட்டம் உண்மை. காதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.. தாய் மாமனிடம் தன் காதலுக்காக எதிர்த்துப் போராடும் வீரம், கைதியாக காதலனை பார்த்தவுடன் கண்களில் பணிக்கும் ஈரம் என நவரசத்தையும் அறிமுகப்படுத்திய படத்திலேயே அள்ளி வீசி இருக்கிறார். வாழ்த்துக்கள்.
மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை அழகாக வழங்கி இருக்கிறார்கள்.
இசை ஜஸ்டின் பிரபாகரன். ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை இவரின் இசையின் பரபரப்பில் நம்மை கட்டிப்போட்டு வைத்து விடுகிறார். பாடல்களில் நம்மை தாலாட்டுகிறார். இவர் இன்னிசை படத்தின் பக்கபலம்.
அடுத்து ஒளிப்பதிவாளர் இவர் இயக்குனரின் கண்கள் என்று கூறலாம். இயக்குனரின் மனதில் இருக்கும் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து நம்மை பிரமிக்க வைத்திருக்கிறார்.
சிறை ; மனிதநேயத்தின் அன்பு சிறை
ரேட்டிங் ; 4/5