படம் என்ன சொல்ல வருகிறது ?
தென் தமிழகத்து ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் ஒரு தாய். தன் இரண்டாம் மகனை மருத்துவத்துக்கு படிக்க வைக்கிறார். மகன் டாக்டர் ஆகிறார். கூடவே காதலன் ஆகிறார். காதலி விட்டார் மிகப்பெரிய குடும்பம். இவர்கள் குடும்பம் சாதாரண கிராமத்துக் குடும்பம்.
ஆனால் மகன் ஆசைப்படுவதெல்லாம் ஜாக்கெட் போடாமல் இருக்கும் தன் தாய் பெண் பார்க்கும் நேரத்தில் ஜாக்கெட் அணிய வேண்டும். இதுவே இவர் ஆசை. இந்த ஆசைக்கு அடிபணிய மறுக்கிறார் தாய். முடிவு என்ன ? பாருங்கள் அங்கம்மாள்.
அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கீதா கைலாசம். பச்சை குத்திய கை, பற்ற வைத்த சுருட்டு, வாயில் விடும் புகை.. அப்படியே நடிப்பையும் ஊதி தள்ளி விடுகிறார் கீதா கைலாசம். பாலச்சந்திரின் மருமகள் அல்லவா ? நடிப்பதற்கு சொல்லியா தர வேண்டும். மாமனார் உயிரோடு இருந்தால் உச்சி முகர்ந்து இருப்பார். தென் தமிழகத்து வட்டார வழக்கு சொல்லை மிக எதார்த்தமாக ஆங்காங்கே தெறிக்க விட்டிருக்கிறார்.
நாம் ஆபாச வார்த்தைகள் என்று நினைக்கும் வார்த்தைகள் அங்கு எதார்த்த மொழிகளாக இருக்கின்றன. அதுவே படத்திலும் பிரதிபலிக்கின்றன. எந்த ஒரு சொல்லும் அழுத்தம் பதியும்போதே அது ஆபாச சொல்லாக மாறுகிறது என்பது படம் பார்ப்பவர்களுக்கு புரியும். இந்த வருடத்து தேசிய விருதுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்படும் என்பது நமது நம்பிக்கை.
நாயகன் சரண் தியேட்டரில் காதல் பற்றி தாயிடம் பேச பயம். அண்ணியை துணைக்கு அழைத்து அண்ணி மூலம் தன் எண்ணங்களை பிரதிபலிக்கிறார். அண்ணியாக வரும் தென்றல் ரகுநாதன் கிராமத்து மருமகளின் முன் உதாரணம். எதிர்த்துப் பேச திராணி இல்லாத ஒரு ஜீவன். அதே சமயம் எதிர்க்கத் துணிந்தால் ஒரு சிங்கம் என அழகாக தன் நடிப்பை வழங்கி இருக்கிறார்.
இவரின் கணவராக வரும் பரணி இரவில் நாதஸ்வரத்தை வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டு இருக்கிறார். எதற்கு என்று இயக்குனர் தான் சொல்ல வேண்டும். ஆனால் இறுதிக் காட்சியில் தன் தாயிடம் தம்பியை டாக்டருக்கு படிக்க வச்சியே, என்னை பள்ளிக்கூடத்துக்காவது அனுப்பினியா ? எதுக்கு இந்த உனக்கு ஓரவஞ்சன ? ஆனால் அத பத்தி நான் என்னைக்கும் நினைச்சு பார்த்ததில்லை. இப்ப நீ பேசுற பேச்ச பார்த்தா நினைக்க தோணுது என்று பேசும் இடத்தில் தன் கதாபாத்திரத்தின் வலிமை உணர்த்திருக்கிறார்.
அங்கம்மாள் ;- ஈகோவின் உச்சம்