மகாசேனா – விமர்சனம்

 

விமல், யோகி பாபு,  ஜான் விஜய், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர்களின்  நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் மகாசேனா. இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன். படம் என்ன சொல்ல வருகிறது வாருங்கள் பார்ப்போம்.

குரங்கணி கிராமம், அடிவாரம் கிராமம்.. இரு கிராமங்களும் மலைவாழ் மக்கள் தான்.. குரங்கணி கிராமத்தில் இருக்கும் கடவுள் சிலை மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த சிலையை கைப்பற்ற அடிவாரம் கிராமத்தினர் முயற்சிக்க இந்த கிராமத்தின் தலைவர் கொல்லப்படுகிறார். அதனால் இரு கிராமங்களும் எதிர் துருவத்தில் இருக்கின்றன.

இந்நிலையில் சில காலங்களுக்குப் பிறகு குரங்கணி கிராமத்திற்கு விமல் தலைவராகிறார். அவர் சேனா என்ற யானையை வளர்த்துக் கொண்டிருக்கிறார் அதே சமயம் ஊர் திருவிழா நடத்த ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. அங்கு காட்டு இலாக்கா அதிகாரியாக இருக்கும் ஜான் விஜய் அடிவாரம் கிராம மக்களை சேர்த்து அந்த கடவுள் சிலையை கைப்பற்ற முயற்சித்து மிகப்பெரிய ஒரு நபருக்கு விற்க ஏற்பாடு செய்கிறார். என்ன நடக்கிறது என்பதை மீதி கதை.

விமல் கிராமத்து இளைஞன், கிராமத்து தலைவன், ஸ்ருஷ்டி டாங்கேயின் கணவன், ஒரு மகளுக்கு தகப்பன் என கதாபாத்திரத்தை அறிந்து மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.

ஸ்ருஷ்டி டாங்கே கன்னத்துக்குழி அழகி. இவர் சிரித்தால் இவர் கன்னத்தில் விழும் குழிக்கு அனைவரும் ரசிகர்கள் தான். புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் வாரிசு. இவர் வீரமங்கையாக இந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.

ஜான் விஜய் வன இலாகா அதிகாரி. எதிர் நாயகனும் இவரே. வசனத்தை வாந்தியாக துப்பிக்கொண்டு கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு இவர் செய்யும் அலம்பல் படம் பார்க்கும் நமக்கு எரிச்சல். எதிர்காலத்தில் இவர் சிறப்பாக நடிக்க நமது வாழ்த்துக்கள்.

முக்கியமாக யோகி பாபு காலேஜ் மாணவர்கள் ட்ரெக்கிங்காக மலை ஏறும்போது அவர்களுக்கு உறுதுணையாக வருகிறார். அவ்வப்போது நமக்கு சிரிப்பு மூட்டுகிறார். மிகச்சிறந்த காமெடியான இவர் சமீப படங்களில் இவரின் கதாபாத்திரம் எதுவும் இவருக்கு ஏற்றார் போல் இல்லை. ஏனென்று யோகி பாபுக்கே வெளிச்சம்.

இந்த படத்தில் டிரெக்கிங் வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் எதற்கு என்று புரியவில்லை. அதனால் கதையில் எந்த ஒரு திருப்பமும் இல்லை.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை அழகாக படம் பிடித்து நம் முன் கொண்டு வைத்திருக்கிறார் இயக்குனர். சிலை திருட்டு, சிலை கடத்தல் என்று நாம் அன்றாடம் கேள்விப்படும் விஷயத்தைக் கதைக்கருவாக கொண்டு திரைக்கதை அமைத்திருந்தார். ஆனால் அந்த திரைக்கதையில் சில சுவாரசியங்களை சேர்த்து கொஞ்சம் விறுவிறுப்பையும் கூட்டி இருந்தால் மகா சேனா படம் மகா வெற்றி படமாக அமையும் என்பது நமது எண்ணம்.

மகாசேனா – ஊர் திருவிழா

mahasena movie reviewமகாசேனா விமர்சனம்