
மெசஞ்சர் – விமர்சனம்
கதாநாயகனின் காதலி தன்னை பிரேக்கப் செய்ய, என்ன செய்வது என்று தெரியாமல் நாயகன் தற்கொலைக்கு முயற்சி செய்ய, அந்த சமயத்தில் தற்கொலை செய்ய வேண்டாம் என்று மெசஞ்சரில் ஒரு குறுஞ்செய்தி வருகிறது. யார் என்று நாயகன் பதில் கேட்க, நான் செத்துப் போன ஆவி என்று கூற, அதை நம்பாத நாயகன் அவளைப் பற்றி விசாரிக்கிறார்.
மெசஞ்சரில் வந்தது ஆவி தான் என்று உறுதி செய்து கொள்ள அந்த ஆவியுடன் நாயகனுக்கு காதல் ஏற்பட்டு அந்த காதல் திருமணத்தில் முடிந்து இறுதியில் ஒரு ஆவியின் குழந்தைக்கு நாயகன் தகப்பனாகிறான். அது எப்படி தெரிந்து கொள்ள வாருங்கள் மெசஞ்சர்.
ஸ்ரீராம் கார்த்திக் தனது நடிப்பால் படத்தை முழுமையாக தாங்குகிறார்.. மனிஷா ஸ்ரீ முன்னாள் காதலியாக உணர்ச்சி கலந்த நம்பகமான நடிப்பை வெளிப்படுத்தி, கதைக்கு அழகு சேர்த்திருக்கிறார். பாத்திமா இயல்பான கிராமத்து பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
இயக்குனர் எடுத்துக்கொண்ட இந்த கதைக்களம் புதியது என்றாலும் அதை திரைக்கதையில் வடித்த விதம் சிறிது தொய்வு ஏற்படுத்துகிறது. ஆவியை காதலிக்கும் நாயகன் எப்படி இது சாத்தியமாகும் என்ற எண்ணம் ஏற்பட்டாலும் அதை சாத்தியக்கூறாக இயக்குனர் கூறி இருந்தாலும் கதையில் இருந்த பரபரப்பு திரைக்கதையில் இல்லை.
மெசஞ்சரில் செய்தி அனுப்பும் ஆவி ஏன் மற்ற மீடியத்தை தொடாமல் இருக்கிறார் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அதேபோல் விபத்தில் இறந்து ஆவியாகப் போன பெண்ணின் கருமுட்டையை ஏன் மருத்துவமனை நிர்வாகம் சேமித்து வைக்க வேண்டும். இது சினிமாவை மீறிய லாஜிக்காக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு புதிய கதையை சொல்ல வந்து அதைப் புதிய விதத்தில் சொல்லாமல் வழக்கமான சினிமா ஆக்கிவிட்டார் இயக்குனர்.
மெசஞ்சர் – செய்திகள் வாசிப்பது ஆவி
