பைசன் – விமர்சனம்

துருவ் விக்ரம், பசுபதி, அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், அழகன் பெருமாள், லால் மற்றும் பலர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அப்ளாஸ் என்டர்டைமென்ட் மற்றும்  நீலம் பிக்சர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் பைசன். படம் என்ன சொல்ல வருகிறது ?

1993 காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதியக் கலவரங்களை மையப்படுத்தி அதற்குள் கபடி விளையாட்டை இணைத்து ஒரு தாழ்த்தப்பட்டவன் ஒரு விளையாட்டு வீரனாக உயர்ந்து வர ஏற்படும் பிரச்சனைகளை திரைக்கதையாக வடிவமைத்து வந்திருக்கிறது பைசன்.

துருவ் விக்ரம் இந்தப் படத்திற்காக அவர் உடல் மொழி, வசன மொழி தலை முடி வரை தென் மாவட்டத்துக்கு இளைஞனாக மாறி இருக்கிறார். தந்தை விக்ரம் எட்டடி பாய்ந்தால் மகன் துருவ் விக்ரம் 32 அடி பாய்கிறார். ஆங்காங்கே தந்தையின் கண்கள் இவர் கண்களில் பிரதிபலிக்கிறது.

- Advertisement -

தந்தை சொல் தட்டாத மகனாக பசுபதியிடம் இவர் கைகட்டி நிற்கும் இடம் ஒரு யதார்த்த கிராமத்து மனிதனாக நம் கண் முன் தெரிகிறார். கபடி விளையாட்டில் இவர் ஆடும் ஆட்டம் உண்மையான கபடி வீரர்கள் கூட ஒரு  இவரிடம் பயிற்சி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் கூட வரும். அந்த அளவுக்கு கபடி விளையாட்டில் கை தேர்ந்தெடுக்கிறார்.

ஒவ்வொரு படியாக இவர் ஏறி வரும் முயற்சி, அதற்குள் இருக்கும் அரசியல், அதை மீறி முன்னேறும் மனிதனாக மிகச்சிறப்பாக அந்த கதாபாத்திரமாக மாறவில்லை வாழ்ந்து இருக்கிறார், எதிர்காலம் சினிமாவில் இவருக்கு தந்தையை விட சிறப்பாக இருக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை

அனுபமா பரமேஸ்வரன் நாயகனை உறுதியாய் காதலிக்கும் வயது மூத்த கதாபாத்திரம். அவரின் காதலில் உள்ள ஏக்கமும் நாயகனைப் பார்த்ததும் வரும் குறுகுறுப்பும் அதேசமயம் தன் அண்ணனை எதிர்த்துப் போராடும் தங்கையாக மிக நேர்த்தியாக எந்த ஒரு இடத்திலும் மிகைப்படாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தந்தையாக வரும் பசுபதி அந்த கதாபாத்திரத்திற்கு என்றே பிறந்தார்போல் மிக அழகாக நடிப்பை வழங்கி இருக்கிறார். கபடியில் தன் மகன் சிறப்பாக ஆடுகிறான் என்று தெரிந்தும் ஊர்வம்பில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக அவன் ஆட்டத்திற்க்கு தடைபோடும் தந்தையாகவும் அதேசமயம் அவன் ஆட்டத்தை பார்க்கும் தந்தையாக அந்த பிரமிப்பும் பெருமிதமும் ஒரு கர்வம் கலந்த முகப்பிரதிபலிப்பு பசுபதிக்கு மட்டுமே வரும் என்பது நமது எண்ணம். தமிழ் சினிமா ஏன் இன்னும் இவருக்கான உயரத்தை தரவில்லை என்பது நமக்கு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பாண்டியராஜனாக அமீர், கந்தசாமியாக லால்.. உயர்ந்த வர்க்கத்தில் லால் பட்டியலினத்தில் அமீர்.. இருவரும் சமமே என்று கூறும் அமீர்.. இல்லை என்று உறுதியாக நிற்கும் லால்.. இருவரின் மோதல்கள் ஜாதி சண்டைகளாக மாறுகின்றன.

எப்படி கடவுள் படம் அவரவர் வீட்டில் ஏற்றார் போல் இருக்குமோ, அதேபோல் அமீர் படமும் லால் படமும் அந்தந்த சாதி வீட்டில் கண்டிப்பாக இருக்கும். இந்த இருவரின் மோதல்களை நாம் 1993 காலகட்டத்தில் தொலைக்காட்சி வாயிலாகவும் பத்திரிக்கை வாயிலாகவும் பார்த்தும் படித்தும் இருப்போம் அதை நேரில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

லால், அமீர் அவர்கள் பார்வையில் அவர்கள் செய்வது நியாயமாகவே படுகின்றன என்பதை எந்த ஒரு நியாயப்படுத்தலுமில்லாமல் திரைக்கதையை தெளிவாக வடிவமைத்து அதற்குள் “ஜாதிப்பொடியை “தூவி வன்முறையை அரிவாளாக்கி “:கபடி வீரன்” என்னும் மிகப்பெரிய “அறுசுவை உணவை” நமக்கு படைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இயக்குனரின் உழைப்பை மெருகேற்றும் வகையில் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.. அனைத்து பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கும் வண்ணம் இசையை இன்னிசையாகவும் அதே சமயம் நாட்டுப்பற்றாகவும் மிக சிறப்பாக தந்திருக்கிறார். பின்னணி இசை மிக அருமை. ஒளிப்பதிவு எழிலரசு உண்மையிலேயே இவர் ஒளிப்பதிவு அரசன்தான். தென்னாட்டு மண்வாசத்தை தன் கேமராவுக்குள் கொண்டு வந்திருக்கிறார் வாழ்த்துக்கள்.

இந்த வருடத்தில் தேசிய விருதின் பட்டியலில் மாரி செல்வராஜ் பெயரும் “பைசன். படத்தின் பெயரும் இருக்கும் என்பதில் நமக்கு எந்தவித ஐயமும் இல்லை.

பைசன் – விக்ரம் சன் என்பதை நிரூபித்திருக்கிறார்

ரேட்டிங் – 4/5