
தண்டகாரண்யம் – விமர்சனம்
கலையரசன், அட்டகத்தி தினேஷ், ரித்விகா, பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் நீலம் புரொடக்ஷன் பா.ரஞ்சித் தயாரிப்பில் வரவிருக்கும் படம் தண்டகாரண்யம். படம் என்ன சொல்ல வருகிறது ?
மலைவாழ் மக்களின் வாழ்வியலில் நடக்கும் சம்பவங்களையும் நக்சலைட் எனப்படும் அதிபயங்கர தீவிரவாத இயக்கத்தின் மறுவாழ்வு மற்றும் அரசியலின் அராஜகம் இவற்றைக் கூற வருகிறது தண்டகாரண்யம்.
மலைவாழ் மக்களின் ஒருவன் வனக்காவலனாக ஆவதற்காக ஏழு வருடமாக வேலை செய்து வருகிறார் கலையரசன். ஆனால் வேலை உறுதியாகவில்லை. இந்நிலையில் வன அதிகாரியின் சட்டத்துக்கு புறம்பான விஷயத்தை கலையரசன் தன் அண்ணன் தினேஷிடம் சொல்ல, சமூகப் போராளியான தினேஷ் அதை படம் பிடித்து பத்திரிக்கையில் வெளியிட்டு ஊர் பெரிய மனிதன், வன அதிகாரி மற்றும் அதற்கு உடந்தையானவர்களை சட்டத்துக்கு அடையாளம் காட்ட அதனால் கலையரசனின் அரசாங்க வேலை கனவு பறிபோகிறது.
இந்நிலையில் நண்பர் மூலம் என்ஜிஓ எனப்படும் படையில் சேர்ந்தால் கலையரசனின் கனவு நனவாகி விடும் என கூற அங்கு தன் கனவை நிஜமாக்க செல்கிறார் பிறகு நடப்பது என்ன ? இதுவே தண்டகாரண்யம்.
கலையரசன் நம் பக்கத்து வீட்டு நண்பனைப் போல் ஒரு முகச்சாயல். இந்த படத்தில் பழங்குடியினராக வருகிறார். வேலையை உறுதிப்படுத்த கழிவறையும் கழுவுகிறார். அதே நேரத்தில் காதலை உறுதிப்படுத்த நாயகியை காதல் மழையில் நனைய செய்கிறார். பயிற்சி கூடத்தில் அவர் படும் கஷ்டங்கள், ஒரு மலைவாழ் மக்களின் ஏக்கம், ஒரு உறுதியற்ற தன்மை, தன் குடும்பத்தின் ஆசையை நிறைவேற்ற அவர் சகித்துக் கொள்ளும் சங்கடங்கள், வேலை கிடைத்தால் மணவாழ்க்கை இப்படி பலவித எண்ண ஓட்டத்தில் அவரின் முகபாவங்கள் சிறப்பு.
அட்டகத்தி தினேஷ் சமூகப் போராளி. குழந்தை முகம். அதனால் தாடி, நீண்ட முடி வைத்துக் கொண்டு வருகிறார். இவரின் சமூகப் போராட்டம் சரிவர சொல்லப்படவில்லை. காரணம் கதை நக்சலைட்டை பற்றி சொல்வதால் இது துணைக்கதை ஆகிவிட்டது
2009 காலகட்டத்தில் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் நக்சலைட்டுகளின் அட்டூழியத்தை அடக்கி அவர்களின் மறுவாழ்வு மையம் என ஒரு சட்டம் இயற்றி அவர்கலிடம் ஆயுதத்தை கைப்பற்றி சரணடைய செய்து பிறகு அவர்களுக்கு பயிற்சிக்குப் பிறகு பாதுகாப்பு படையில் வேலை இப்படி ஒரு சட்டம் இயற்றப்படுகிறது.
ஆனால் உண்மையான நக்சலைட்டுகள் யாரும் சரணடையாமல், அரசாங்க வேலைக்காக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த நபர்களை மூளை சலவை செய்து அவர்களிடம் பணம் பறித்து நக்சலைட் போல் சரணடைய செய்து அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து பிறகு அவர்களை சுட்டுக் கொலை செய்து நக்சலைட்டுகளை நாங்கள் ஒழித்து விட்டோம் என்று அரசியல்வாதிகளின் ஏமாற்று வேலை தான் இந்தக் கதை.
2009 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். ஆனால் திரைக்கதையில் பல லாஜிக் மீறல்கள். வனக்காவலர் பயிற்சி, ஆனால் வேலை உறுதிப்படுத்தப்படவில்லை.. மாத சம்பளம் மட்டும் தரப்படுகிறது. இது ஒப்பந்த அடிப்படையிலா?
அல்லது அரசின் பயிற்சி காலமா? என்பதை சரிவர சொல்லவில்லை. இயக்குனர் அதேபோல் 5 லட்சம் பணம் கொடுத்து நக்சலைட் போல் சரணடைந்து சிறை சென்று உதை வாங்கி பிறகு பயிற்சி எடுத்து அரசியல்வாதிகள் மூலம் அவர்கள் கொலை செய்யப்படுவது அரசியல் ஆதாயம் என்றாலும் அவர்களிடம் பறிக்கும் 5 லட்சம் ஏன் எப்படி என்று சரிவர புரியவில்லை.
2009 காலகட்டத்தில் தங்க நகையின் விலை சவரனுக்கு 10,000 ரூபாய் தான். 5 லட்சத்திற்கு 50 சவரன் வாங்கலாம். இன்றைய காலகட்டத்தில் அதன் மதிப்பு 45 லட்சம் இவ்வளவு பணம் மலைவாழ் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்தால் அவர்கள் வேறு ஏதாவது வேலை வாங்கிக் கொண்டிருக்கலாம்.? மிகப்பெரிய தொழில் செய்து? கொண்டிருக்கலாம் ?
இப்படி பணம் கொடுத்து அரசாங்க வேலை மறைமுகமாக வாங்க வேண்டிய அவசியம் என்ன? அதேபோல் மலைவாழ் மக்கள் தன் நிலத்தை விற்று 5 லட்சம் வாங்குவது என்பது நம்ப முடியாத விஷயம். இந்த பணம் மலைவாழ் மக்களிடம் இருந்தால் அவர்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் என்று அர்த்தம்.
இப்படி ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.. அது மட்டுமல்ல, சந்தன கடத்தல் வீரப்பனை பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதனால் கேப்டன் பிரபாகரன், சந்தனக்காடு இப்படி பல படங்களை நாம் ரசித்துப் பார்த்திருக்கிறோம். அதற்கு காரணம் நம் அன்றாட தினசரி செய்தியில் வீரப்பனை பற்றி நாம் படித்து தெரிந்து கொண்டதால். ஆனால் இந்த போலி நக்சலைட் சரண்டர் ? அவர்கள் மீது என்கவுண்டர் ? இது உண்மை சம்பவம் என்றாலும் பலர் அறியாத விஷயம். அது பற்றி புரியாத விஷயம். அதனால் படத்தோடு நம்மால் ஒன்ற முடியவில்லை.
இயக்குனர் வாழ்வியலையும் அரசியலையும் தீவிரவாதத்தையும் துரோகத்தையும் காதலையும் கலந்து நம் முன் தண்டகாரண்யம் என்ற தலைப்பில் நம் பார்வைக்கு வைத்திருக்கிறார். திரைப்படம் என்பது பொழுதுபோக்கான விஷயம் அந்த பொழுதுபோக்கில் கருத்துக்களையோ அரசிலையோ காதலையோ துரோகத்தையோ இன்னும் பல விஷயங்களை மற்றவர்கள் ரசிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். அதனால் தான் ‘கேளிக்கை வரி வாங்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு இப்படி சமூக சிந்தனையோடு கதைகளை நாம் மக்களுக்கு சொல்வது சிறப்பு என்றாலும் தீர்வு என்ன ? அதை தெளிவாக சொல்வது தான் கதாசிரியனின் திறமை. தீர்வு சொல்லாத எந்த ஒரு கதையும் சிறப்பு என்று கூற முடியாது. அதே போல் வன்முறை தீர்வும் கிடையாது.
தண்டகாரண்யம் – அரசியலின் சதுரங்கம்
