
கிங் மேக்கர் அருளாளர் R M. வீரப்பன் அவர்களின் ஆவணப்படத்தின் ஒரு அலசல்
தமிழக அரசியலில் பெரியாரின், திராவிட கழகத்தின் கொள்கையின் ஈர்ப்பின் காரணமாக அதில் தன்னை இணைத்துக் கொண்ட ஐயா R.M வீரப்பன் அவர்களின் செயல்பாட்டில் மகிழ்ந்து போன தந்தை பெரியார் தன் பத்திரிக்கையில் அவரை இணைத்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார், பின்பு அண்ணாவின் அரவணைப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஐயா அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் கருத்து வேறுபாட்டினால் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியே வந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களை தமிழக முதல்வராக்க ஐயா கிங்மேக்கர் அவர்களின் உழைப்பை மற்றும் அவரின் அரசியல் வாழ்க்கையை தமிழகத்துக்கு அவர் ஆற்றிய நற்பயன்களை சொல்ல வருகிறது இந்த ஆவணப்படம்.
கிங்மேக்கர் ஐயா அவர்கள் தன் அரசியல் வாழ்க்கையில் எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மீது கொண்ட பற்றின் காரணமாக தலைவர் கலைஞருக்கும் எம்ஜிஆர்ருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினை சுமுகமாக தீர்த்து வைத்த நிகழ்வு இவரையே சாரும்.
அது மட்டுமல்லாமல் தனிக்கட்சி தொடங்கிய எம்ஜிஆர் அவர்களை முன்னிலைப்படுத்தி தமிழக முதல்வராக மக்கள் தேர்ந்தெடுக்க அரசியல் சதுரங்க வேட்டையில் பல காய்களை லாவகமாக நகர்த்தி எம்ஜிஆரை முதல்வராக்கிய பெருமை ஐயா அவர்களையே சேரும் என்பது அசைக்க முடியாத உண்மை. அதுமட்டுமல்லாமல் புரட்சித் தலைவர் அவர்கள் உடல்நிலை சரியில்லாத போது தமிழகத்தில் நடந்த தேர்தலில் அவர் உடல் நிலையின் உருவத்தை போஸ்டர் வடிவத்தில் தமிழகமெங்கும் வரைந்து பிரச்சாரம் செய்யாமலேயே எம்ஜிஆர் மீண்டும் முதல்வராகிய பெருமை ஐயா அவர்களையே சேரும்.
அது மட்டுமல்லாமல் எம்ஜிஆர் அவர்களின் அமைச்சரவையில் இவர் அமைச்சராக பல பொறுப்புகளை வகித்தாலும் இந்து அறநிலையத்துறை பொறுப்பை ஏற்றவுடன் தமிழகக் கோயில்களை, கேட்பாரற்று சிதைந்த கோபுரங்களை சீரமைத்து, மக்கள் வழிபாட்டுக்கு வழி வகுத்த பெருமை இவரையே சேரும்.
கல்லூரிகள் தமிழகத்தில் குறைவாக இருந்த நேரத்தில் தனியார் கல்லூரிகளை துவக்க வழி வகுத்த பெருமை இவரை சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இவரின் இந்த முயற்சியால் தான் இன்றைய தமிழக கல்லூரிகள் இந்தியாவில் பேரும் புகழுடன் இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இவரை முதல்வராக்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முடிவு செய்த நேரத்தில் எம்ஜிஆரின் துணைவியார், தான் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று ஆசையை இவரிடம் தெரிவிக்க அந்த ஆசையை நிறைவேற்றியவரும் இவரே.
இது மட்டுமல்லாமல் இவரின் பல அதிசயத்தக்க முயற்சிகள் அவற்றின் வெளிப்பாடுகள் அனைத்தையும் இவருடன் பணிபுரிந்தவர்களும் இவரை அறிந்தவர்களும் இந்த ஆவணப்படத்தில் இவரைப் பற்றி பெருமிதமாக தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் உட்பட பல அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்கள் மற்றும் கலை உலக பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள் பலர் இவரைப் பற்றி நாம் அறியாத விஷயங்களை தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த ஆவணப்படம் வருங்கால அரசியல் தலைவர்களுக்கும் கலை உலக கலைஞர்களுக்கும் எதிர்கால சந்ததியருக்கும் மிக முக்கியமான படமாகும். இவரைப் பற்றி இந்த படத்தின் மூலம் நாம் அறிந்த விஷயங்களை இதைப் பற்றி அறியாதவர்களுக்கு தெரியப்படுத்தினால் தமிழகத்தில் இவர் ஆற்றிய சீரிய பணிகளுக்கு நாம் செய்யும் நன்றி கடன் ஆகும்.
