
பருத்தி – விமர்சனம்
சோனியா அகர்வால், குட்டிப்புலி சரவணன், குழந்தை நட்சத்திரம் திலிப்ஸ், வர்ஷிதா, சுகன்யா. மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பருத்தி. படம் என்ன சொல்ல வருகிறது ?
காலம் காலமாக ஆண்டாண்டு காலமாக நம்மில் ஊறிப்போன ஜாதி வெறியை வெளிச்சம் போட்டு வெளி வந்திருக்கும் படம் பருத்தி.
குழந்தை நட்சத்திரம் திலீப்ஸ் ஒரு தாழ்ந்த ஜாதி பட்டியல் இனத்தை சேர்ந்தவர். அவரின் தோழி சுகன்யா உயர்ந்த வகுப்பை சார்ந்தவர் இருவரும் ஒன்றாக பள்ளிப்படிப்பை படிக்கும் போது இவர்கள் நட்பு மற்றவர்கள் பார்வையில் ஜாதியை மையப்படுத்தி வெளிப்படுகிறது.
அதேபோல் உயர்ந்த ஜாதியை சேர்ந்த ஒரு இளைஞன் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை காதலிக்க இளைஞனின் தந்தை அந்தப் பெண்ணை தன் வேலையாட்களுக்கு விருந்தாக்கி தன் மகனை இனிப்பில் விஷம் வைத்து சாகடிக்கிறார். காதலன் இறந்த சோகத்தில் காதலியும் மடிகிறார். இது ஒரு கிளைக்கதை.
துவக்கப்பள்ளியில் படிக்கும் திலிப்ஸ் சுகன்யா நட்பு. நட்பு போல் இயக்குனர் சொல்லி இருந்தாலும் அந்த நட்பை மீறிய ஒரு விஷயம் நமக்கு அதில் தெரிகிறது. அவர்களின் வசனங்கள் நட்பை பாராட்டுவது போல் இல்லாமல் வேறு எதையோ வெளிப்படுத்துவது போல் நமக்கு தெரிகிறது.
படம் ஆரம்பித்து முடியும் வரை ஜாதி ஜாதி ஜாதி என்ற ஒரே கொடியைப் பிடித்துக் கொண்டு இயக்குனர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சிறுவன் திலிப்ஸ் தன் நடிப்பாற்றலை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பாட்டியின் மரணம், தோழியின் மரணம் இந்த காட்சிகளில் ஒரு பண்பட்ட நடிகனைப் போல் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவரின் தோழியாக வரும் சுகன்யா நடிப்பில் ஒரு செயற்கை தனம். வயதுக்கு மீறிய முக பாவங்கள். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ஒரு மேடை நாடகத்தை பார்ப்பது போல் இருக்கிறது.
அதுபோல் தோழனிடம் இவர் பேசும் வசனங்கள் நட்பின் அடிப்படையில் இயக்குனர் எழுதி இருக்கிறார் என்றால் இவரின் முகம் பாவத்தின் மூலம் அது வேறு எதையோ நமக்கு ஞாபகப்படுத்துகிறது..
இறுதிக்காட்சியில் இவர் கிணற்றில் விழுந்து இறப்பது, அந்த கிணற்றுக்குள் இருந்து நண்பன் திலீப்ஸ் அழைப்பது ஏன் என்று நமக்கு புரியவில்லை. அது மட்டும் இல்லாமல் இறுதிக்காட்சியில் இவர் மரணம், அதனால் மனம் உடைந்த திலிப்சின் மரணம், அனைத்தும் சினிமாவையே மிஞ்சிய ஒரு கற்பனையாக நமக்கு தோன்றுகிறது.
சோனியா அகர்வால் ஆரம்பத்தில் வயல் பரப்பில் நடந்து வருகிறார். பிறகு தான் தெரிகிறது இவர் திலீப்ஸின் தாய் என்று. கணவர் இறந்தவுடன் இவரை பல கயவர்கள் படுக்கைக்கு அழைத்ததால் வேறு ஒருவர் பாதுகாப்பில் தஞ்சம் அடைகிறார். அது தவறான உறவாக மக்கள் பார்வையில் தெரிகிறது. ஆனால் தாய் தன் மகன்களை விட்டு மாமியாரை விட்டு வேறு ஒருவருடன் தஞ்சம் அடைவது ஏற்புடையதாக இல்லை.
இயக்குனர் குரு இந்தத் திரைப்படத்தின் மூலம் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பது அவர் சொல்லி தான் நமக்கு தெரிய வேண்டும்.
கதை என்பது படத்திற்கு முக்கியம். அதேபோல் அந்தக் கதையை விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றி இயக்குவது ஒரு கலை. அந்த கலையில் ஜெயித்தவனே ஒரு பெரிய இயக்குனராகிறான்.
பருத்தி – தலைப்புக்கு காரணம் தெரியவில்லை
தொழில் நுட்ப குழு :
இயக்கம் – A குரு
ஒளிப்பதிவு – ராஜேஷ்
இசையமைப்பாளர் – ரஞ்சித் வாசுதேவன்
கேமராமேன் ராஜேஷ்
இசை அமைப்பாளர் ரஞ்சித் வாசுதேவன்
எடிட்டர் – RK செல்வம்
பாடல்கள்- நலங்கிள்ளி
மக்கள் தொடர்பு – நிதீஷ் – புவன்
