வா வாத்தியார் – விமர்சனம் 

கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், ஆனந்தராஜ், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் வா வாத்தியார். படம் என்ன சொல்ல வருகிறது ? வாருங்கள்.. பார்ப்போம்

பலவிதப் போராட்டங்கள் பலவித தடைகள் இவைகளை  தகர்த்தெறிந்து வெளிவந்திருக்கிறது இந்தப்படம். ராஜ்கிரண் மிகப்பெரிய எம்ஜிஆர் பக்தன். எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாத போது அவரை நேரில் பார்க்க முடியாத காரணத்தினால் தியேட்டரில் குடியிருந்த கோயில் படம் பார்க்கும்போது எம்ஜிஆர் மரணம் அடைந்த செய்தி வர அதே சமயம் அவருக்கு பேரன் பிறக்க அது எம்.ஜி.ஆரின் மறு பிறவி என்று எண்ணத்தில் வளர்க்க ஆரம்பிக்கிறார். ஆனால் பேரனோ நம்பியார் போல் தன்னை மாற்றிக் கொள்கிறார்.

வளர்ந்து காவல்துறை ஆய்வாளராக மாறிய கார்த்தி, சட்டத்தை காப்பாற்றாமல் சட்டத்தை மீறி பல செயல்களை செய்கிறார், இத்தருணத்தில் ராஜ்கிரண் மரணமடையும் போது தன் பேரனை எம்ஜிஆர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் மரணம் அடைகிறார்.

- Advertisement -

ஒரு மிகப்பெரிய அரசியல் செய்தியை படம் பிடித்த youtuber சிலரை கொலை செய்ய கார்த்தி நியமிக்கப்பட,  கார்திக்குள் எம்ஜிஆரின் ஆவிபுகுந்து  அவர்களைக் காப்பாற்றுகிறது. அந்த ஆவியை பிடிக்கும் பணியும் கார்த்தி இடம் ஒப்படைக்கப்படுகிறது. தன்னை கைது செய்ய தானே முயற்சிக்கிறார். இந்த கருவை வைத்துக் கொண்டு நலன் குமாரசாமி மீதி படத்தை எடுத்து சென்று இருக்கிறார்.

கார்த்தி இவரின் இயல்பான நடிப்பு கலகலப்பான வசன உச்சரிப்பு ரசிகர்கள் அறிந்த விஷயம். அதே சமயம் இன்னொரு கதாபாத்திரம் வாத்தியார். அதற்காக மிக சிரமப்பட்டு தன் உடல் மொழியை வசன மொழியை வாத்தியார் போல் நடிக்க சிரமப்பட்டு அதில் ஜெயித்திருக்கிறார். வாழ்த்துக்கள்..

கிர்த்தி ஷெட்டி தமிழுக்கு புதுவரவு. பார்ப்பதற்கு தமன்னாவின் தங்கை போல் இருக்கிறார். அழகு, இளமை இவரிடம் விளையாடுகிறது. அந்த விளையாட்டுடன் நம்மையும் பரவசப்படுத்துகிறார்.

சத்யராஜ் படத்தின் எதிர் நாயகன்.. வழக்கமாக அலம்பல் செய்யும் சத்யராஜ் இந்த படத்தில் மிகவும் அடக்கி வாசித்து தன் வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்.. மிக சிறப்பு.

ஆனந்தராஜ் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தை இவருக்கு தந்து அதுவும் எம்ஜிஆர் ரசிகனாக படம் முழுக்க வருகிறார். எம்ஜிஆர் பாணியில் தன் நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ராஜ்கிரண் இவரும் எம்ஜிஆர் ரசிகன். என்னவோ இந்த கதாபாத்திரம் இவருக்கு ஒட்டவில்லை என்பது நமது எண்ணம். மற்ற கதாபாத்திரங்கள் பாத்திரம் அறிந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றனர்.

இயக்குனர் நலன் குமாரசாமி பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தூத்துக்குடி ஆலை விஷயத்தை நாமக்கல் ஆக பெயர் மாற்றி கதைக்களத்தை அங்கு வைத்து அதற்கு தீர்வு, எதிர்கால அரசியல்வாதிகள் செய்ய முடியாத காரணத்தினால் காலம் சென்ற புரட்சித்தலைவரை துணைக்கு வைத்து அதற்குள் ஒரு ஃபேண்டஸி நாடகத்தை திரைக்கதையாக வடிவமைத்து மக்கள் ரசிக்கும் வண்ணம் செய்ய முயற்சி செய்து அதில் வெற்றி பெற மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் என்பது படம் பார்க்கும் நமக்கு தெரிகிறது.

ஆங்காங்கே அன்னியன் படத்தின் வாடை  தெரிகிறது. ஆனால் புரட்சித் தலைவரின் ஆவி கார்த்திக்குள் புகுந்து நல்ல விஷயங்களை செய்கிறது என்பது நம்ப முடியாத விஷயமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டியது இயக்குனரின் கடமை. அதில் இயக்குனர் தோல்வியை தழுவி இருக்கிறார். எம்ஜிஆர் ரசிகனை குறி வைத்து இந்த படத்தை அவர் இயக்கி இருந்தாலும் எம்ஜிஆர் ரசிகர்கள் இதற்கு ஆதரவு தருவார்களா என்பது மிகப்பெரிய கேள்வி குறிதான்.

வா  வாத்தியார் – ஏமாற்றம்