தோல்வி எனக்கு தோழன் ஒளிப்பதிவாளர் “பி சி ஸ்ரீராம்”

 

TMJA  சங்கத்தின் பொங்கல் திருவிழா பொங்கல் தொகுப்பு பரிசு விழா சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள மண்டபத்தில் நடந்தது. அதற்கு ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தலைமை தாங்கி பத்திரிகையாளர் அனைவருக்கும் பரிசு பொருள்களை வழங்கினார். அப்போது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சுவாரஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது சங்கத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பத்திரிகையாளர் கவிதா உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்ற கேட்ட கேள்விக்கு  ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் அவர்கள், “தோல்விதான் எனது வெற்றி என்ற ரகசியம். தோல்வி எனக்கு தோழன்போல் தொடர்ந்து சிறுவயத முதல் என்னுடன் பயணிப்பது எனக்கு பிடித்தமான விஷயம். ஆரம்பகால கட்டங்களில் தோல்விகள் என்னை புரட்டி எடுத்தன. ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் பயிற்சியில் தேர்வு எழுதிய போது எனது தாயார் இதில் மட்டுமாவது பாஸ் ஆகிவிடு என்றார்.

- Advertisement -

நான் தாய் சொல் தட்டாதவன் தான். ஆனால் என் நண்பன் தோல்வி அப்படி இல்லையே. அதனால் அதிலும் எனக்கு தோல்வி தான் கிடைத்தது. இப்படி பல தோல்விகளை நான் சந்தித்ததினால் வெற்றியை சுவைக்கும் போது தோல்வி பயம் சுத்தமாக போய்விட்டது. என்று வெற்றி என்னை அணைத்ததோ அன்று முதல் என் நண்பன் தோல்வி என்னுடன் பயணிக்க முடியவில்லை. வெற்றி.. வெற்றி.. இதுவே இன்றுவரை என்னை அழைத்து சொல்கிறது” என்றார்..

இன்னொரு பத்திரிகையாளர் தங்களுக்கு ரகசிய காதல் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு ஸ்ரீராம் அவர்கள், “ரகசியமாக இருந்தால் தான் அது காதல். பலருக்கு அது தெரிந்தால் அந்த காதல் ரகசியமாகவும் இருக்காது. சுவாரசியமாகவும் இருக்காது. காதலை மனதுக்குள் வைத்து போற்றி பாதுகாக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது காதல் இல்லை. அதனால் என் காதலைப் பற்றி நான் தெரியப்படுத்துவதில் அர்த்தம் இல்லை” என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.

இன்னும் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் பதில் அளித்து பொங்கல் தின விழாவை ஒரு சிறப்பான விழாவாக சங்கத்திற்கு நிகழ்த்திக் கொடுத்தார். நிகழ்ச்சியில் தலைவி கவிதா தலைமை வகிக்க கோடாங்கி ஆப்ரஹாம் முன்னிலை வகித்து மற்றும் ஒளிப்பதிவாளர்  Wide Angle  ரவி சிறப்பு விருந்தினராகவும் சிறை படத்தின் கதாநாயகன் எல்.கே அக்ஷய்குமார் கலந்துகொண்டும் விழாவை சிறப்பித்தனர். செல்வி சுஷ்மா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் அங்கம் வகித்த உறுப்பினர் அனைவருக்கும் பொங்கல் பரிசு அளிக்கப்பட்டது.