தடயம் (வெப் சீரிஸ்) –  விமர்சனம் :

 

ஆந்திர–தமிழக எல்லைப் பகுதியில் தொடர் தம்பதி கொலைகள் நடப்பதால் காவல்துறை அதிர்ச்சியில் ஆழ்கிறது.. முதலில் இரண்டு பேர் கொலை செய்யப்படுகிறார்கள். அதே முறைப்படி மீண்டும் ஒரு தம்பதி கொல்லப்படுவதால், இது சாதாரண வழக்கு அல்ல என்பது உறுதியாகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி சில முக்கிய தடயங்களை கண்டுபிடிக்கிறார். பின்னர் இன்ஸ்பெக்டர் ஷிவதா தலைமையில் தனிப்படை அமைக்கப்படுகிறது..

விசாரணை முன்னேறும்போது, இந்த கொலைகள் நான்கு பேரை மட்டும் அல்ல, 60-க்கும் மேற்பட்டவர்களை கொன்ற தொடர் கொலையாளிகள் சம்பந்தப்பட்டவை என்பது தெரிய வருகிறது. பணம், நகை எதுவும் திருடப்படாமல், ஆண்களின் அருணாக்கயிறு மற்றும் பெண்களின் தாலி சங்கிலி மட்டும் எடுத்துச் செல்லப்படுவது வழக்கின் முக்கிய குறியாக மாறுகிறது. இதன் பின்னணி என்ன? கொலையாளிகள் யார்? அவர்களை எப்படி பிடிக்கிறார்கள்? என்பதைக் கட்டுக்கோப்பாகவும் பரபரப்பாகவும் சொல்லுகிறது ‘தடயம்’.

- Advertisement -

இயக்குநர் நவீன்குமார் பழனிவேல், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, திரைக்கதையை சீராக கட்டியெழுப்பியுள்ளார். முதல் பகுதியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி, பின்னர் மர்மத்தை மெதுவாக அவிழ்க்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் புதிய தகவலை வெளியிட்டு சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கிறது.

நடிப்பில் சமுத்திரக்கனி மிகவும் இயல்பாகத் தெரிகிறார். மன அழுத்தமும், விரக்தியும் கலந்த போலீஸ் அதிகாரியாக அவர் நம்ப வைக்கிறார். ஷிவதா அளவான நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கிறார். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கண்கள் மற்றும் உடல் மொழி மூலம் பதற்றத்தை உருவாக்குகிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் ஆகியவை 1999 கால பின்னணியை நம்பகமாக காட்டுகின்றன. தொழில்நுட்ப அம்சங்கள் கதையின் சூழ்நிலைக்கு ஏற்றபடி அமைந்துள்ளன.

மொத்தத்தில், ‘தடயம்’ – சஸ்பென்ஸும் உண்மை சம்பவ அதிர்ச்சியும் இணைந்த, தெளிவான திரைக்கதையுடன் பயணிக்கும் விறுவிறுப்பான குற்றத் தொடர்.