
மருதம் – விமர்சனம்
விதார்த், ரக்ஷனா, சரவண சுப்பையா, மாறன், அருள்தாஸ் தினந்தோறும் நாகராஜன் நடிப்பில் வி.கஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மருதம்.
வேலூர் அருகே இருக்கும் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் விதாரத்திற்கு சொந்தமான இடத்ததை யாரோ அபகரிக்க, அந்த இடம் பேங்கின் ஏலத்தில் எடுக்கப்பட்டது என்று ஆக்கிரமிப்புக்காரன் சொல்கிறான். வங்கிக்கு செல்லும் விதாத்திற்கு அந்த இடத்தை உங்கள் தந்தை உயிரோடு இருக்கும்போது ஆறு வருடத்திற்கு முன்பு அடகு வைத்து நெல் அறுக்கும் மிஷின் வாங்கி இருக்கிறார், ஆறு மாதம் தவணை மட்டும் கட்டிவிட்டு மீதி கட்டாமல் போனதால் இடம் ஏலத்தில் விடப்பட்டது என்று சொல்ல நீதிமன்றம் சொல்லுகிறார் விதார்த். இவருக்கு இடம் கிடைத்ததா ? நீதி வென்றதா என்பதை மீதி கதை.
மருதம்.. வயலும் வயலும் சார்ந்த இடமும் மருதம் என்று அழைக்கப்படும் என்பதை நாம் வரலாற்றில் படித்திருப்போம். அந்த தலைப்பை வைத்துக்கொண்டு அந்த வயலும் அதன் இடத்தையும் காப்பாற்ற விதார்த் போராடும் போராட்டம் ஒரு அக்னி பரீட்சை தான் என்று கூற வேண்டும்.
ஒரு விவசாயியாக இவரின் தோற்றம் கணக்கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. உடல் மொழி மட்டுமல்ல வசன மொழியும் வேலூர் வட்டார மொழியும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் விதார்த். தன் நிலத்தை மீட்க இவர் அலையும் அலைச்சல் படம் பார்க்ககும் ஒவ்வொரு விவசாயிக்கும் நிச்சயமாக கண்ணீரை வர வைக்கும். இறுதிக்காட்சியில் நீதிமன்றத்தில் இவர் வாதாடும் காட்சி ஒரு எதார்த்தமான விவசாயியை நம்முன் கொண்டு வருகிறார். மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான விதார்த் ஏன் இன்னும் தமிழ் திரை உலகில் ஒரு உயரத்தை எட்டவில்லை என்பது ஒரு கேள்விக்குறி தான்.
“தினந்தோறும்” நாகராஜன் வக்கீலாக அவர் சேகரிக்கும் தடயங்கள் இறுதிக் காட்சியில் விதார்தின் வாதத்திற்கு சாட்சி ஆகிறது. நடிப்பும் சிறப்பு.. அருள்மொழி.. இவரை பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நாம் பார்த்திருப்போம். இதில் காட்சிகள் குறைவு என்றாலும் அதை நடிப்பில் நிறைவு செய்து இருக்கிறார்.
வில்லனாக சரவண சுப்பையா தன் பங்களிப்பை சிறப்பு செய்திருக்கிறார். நாயகி ரக்ஷனா ஆரம்பக்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை ஒரே முகம். ஒரே ரியாக்ஷன்.. ஒரே மாடுலேஷன்.. இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் இவர்.
படத்தில் பாராட்டுக்குரியவர் இயக்குனர் வி.கஜேந்திரன். பேங்க் மோசடி பல விதங்கள் இருந்தும் இவர் எடுத்திருக்கும் இந்த கதைக்களம் புதியது. உரியவருக்கே தெரியாமல் இடத்தை அடமானம் வைத்து தவணை கட்ட முடியாமல் அந்த இடத்தையே வங்கி ஏலத்தில் விடும் இந்த விஷயம் நாம் அறிந்திராத விஷயம்.
ஆனாலும் எங்கேயோ நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதை இந்த படத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர் வி கஜேந்திரன்.
படத்தில் திரைக்கதையில் எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தை இயக்கி இருக்கிறார்.. வாழ்த்துக்கள்..
மருதம் – படம் அல்ல பாடம்
