
மக்கள் தலைவா ; விமர்சனம்
வேலை வெட்டி இல்லாமல், போலிப் போராட்டங்கள் நடத்தி பிழைப்பு ஓட்டும் ரவி மரியாவுக்கு, பெரும் கோடீஸ்வரரான ராதாரவி மூலம் ஒரு ஜாக்பாட் அடிக்கிறது. தன் பண பலத்தை வைத்து தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘கேம்’ ஆட நினைக்கும் ராதாரவி, அதற்கு பகடைக்காயாக ரவி மரியாவைத் தேர்ந்தெடுக்கிறார்.
திட்டமிட்டபடி ரவி மரியாவை சினிமா ஹீரோவாக்கி, பின் ஒரு அரசியல் கட்சிக்கும் தலைவராக்குகிறார். நிஜமாக மக்களுக்குச் சேவை செய்யாவிட்டாலும், ராதாரவியின் போலி விளம்பர உத்திகளால் குறுகிய காலத்திலேயே ‘மக்கள் தலைவராக’ உருவெடுக்கிறார் ரவி மரியா.
தேர்தல் நெருங்கும் நேரத்தில், ராதாரவி அதிகாரப்பூர்வமாகக் கட்சியில் இணைய, அதே சமயம் ரவி மரியா விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறார். “அடுத்து யார் முதல்வர் வேட்பாளர்?” என்ற மில்லியன் டாலர் கேள்வி எழும்போது, ராதாரவி எடுக்கும் அந்த அதிரடி முடிவு தமிழக அரசியலையே புரட்டிப்போடுகிறது. அந்த முடிவின் பின்னணி என்ன, இந்த அரசியல் விளையாட்டின் நிஜமான காரணம் என்ன என்பதை தற்போதைய சமகால அரசியலை நையாண்டி செய்து பேசுகிறது இந்த ‘மக்கள் தலைவா’.
வில்லனாகவும் காமெடி நடிகராகவும் நாம் பார்த்த ரவி மரியா, இதில் கதையின் நாயகனாகத் தன் பங்களிப்பைக் கச்சிதமாகச் செய்துள்ளார். காதல் பாடல், அரசியல் மேடைப் பேச்சு என இதுவரை பார்த்திராத புதிய ரவி மரியாவை இதில் பார்க்கலாம். நடிப்பில் பெரிய வித்தியாசம் காட்டாவிட்டாலும், கதாபாத்திரத்திற்குத் தேவையான பலத்தைச் சேர்த்துள்ளார்.
உலக அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் உயரிய பதவியில் இருக்கும் தமிழராக மிரட்டியிருக்கிறார் ராதாரவி. “பணமும், அதை எங்கே எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற புத்தியும் இருந்தால் அரசியலில் ஈஸியாக ஜெயிக்கலாம்” என்ற யதார்த்தத்தை நெத்தியடியாகத் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்றைய டிஜிட்டல் காலத்திலும் பழமையான பாணியில் பயணிக்கும் அரசியல்வாதிகளின் அவலநிலையையும், அவா்களால் கட்சிகள் படும் பாட்டையும் தோலுரிக்கும் கேரக்டரில், தன் அசாத்திய வசன உச்சரிப்பால் சிரிக்க வைக்கிறார் பழ கருப்பையா.
பெட்டி வாங்கும் நடுநிலை அரசியல்வாதியாக நாஞ்சில் சம்பத், அதிர்ஷ்டத்தில் அமைச்சராகும் நண்பனாக கஞ்சா கருப்பு, மற்றொரு நண்பராக அக்னி எஸ். வருண், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகக் கேட்பதைத் தட்டிக்கேட்கும் ஆட்டோ டிரைவராக இயக்குநர் பேரரசு, யூடியூபராக பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் ரங்கநாதன் மற்றும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வந்து செல்லும் அக்ஷரா விஜய் என அனைவரும் தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளனர்.
லிமிட்டடான லொகேஷன்களாக இருந்தாலும், அதைத் தன் கேமரா கோணங்கள் மூலம் வித்தியாசப்படுத்தி, எளிய இடங்களையும் ரசிக்கும்படித் தரமாகப் படமாக்கியுள்ளார் கார்த்திக் எஸ்.நாயர்.
துளசிராமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்களுடன் கேட்கும் ரகம். பின்னணி இசையும் காட்சிகளின் வேகத்திற்குப் பக்கபலமாகப் பயணித்துள்ளது.
படத்தில் வசனக் காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அவற்றின் நீளத்தைக் குறைத்து, ஒட்டுமொத்தப் படத்தையும் இரண்டு மணி நேரத்திற்குள் நேர்த்தியாகக் கத்தரித்த எடிட்டர் துர்கேஷுக்குப் பாராட்டுகள்.
இன்றைய தமிழக அரசியல் சூழல், புதியவர்களின் வரவு, மற்றும் வெற்றி பெற்றவர்களின் பின்னணியில் நடக்கும் அரசியல் வியாபாரத்தைத் தைரியமாகத் தொட்டிருக்கிறார் இயக்குநர் ராம்தேவ்.
கதையும் காட்சிகளும் கற்பனை என்றாலும், தற்போதைய அரசியல் சம்பவங்களின் நிழல் படத்தில் அப்படியே தெரிவதால் திரைக்கதை சுவாரஸ்யமாகவே நகர்கிறது. ஆனால், படத்தின் திருப்பங்களில் தான் என்ன சொல்ல வந்தோம் என்பதை மறந்து, படத்தில் தான் நடித்த கேரக்டர் போலவே இயக்குநரும் கொஞ்சம் குழப்பமடைந்திருப்பது பலவீனம்.
தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்கனவே பல அரசியல் சாட்டையடி படங்களைப் பார்த்திருந்தாலும், தற்போதைய அரசியல் மாற்றங்களை நகைச்சுவையோடு சொல்லிச் சிந்திக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ராம்தேவ். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், இது ‘அம்மாவாசை’ அரசியல் பாணியில் ஒரு பெரும் அதிரடியைக் கிளப்பியிருக்கும்.
மொத்தத்தில், இந்த ‘மக்கள் தலைவா’ ரசிக்க வைத்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் அளவுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
