
பிபி 180 ; விமர்சனம்
தன்யா ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பிபி 180 படம். என்ன சொல்ல வருகிறது ? பார்ப்போம்
ரவுடி சொன்ன விஷயத்தை கேட்காத டாக்டருக்கும் ரவுடிக்கும் நடக்கும் சாதாரண சண்டை ஒரு ஈகோ சண்டையாக மாறி அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் அரசு மருத்துவமனையின் அவலங்களையும் சொல்ல வருகிறது பிபி 180.
ஒரு மனிதனுக்கு பிபி என்பது உடலுக்கேற்றார் போல், செய்கைக்கு ஏற்றார் போல் ஏறி ஏறி இறங்கும். அதை தலைப்பாக வைத்துக்கொண்டு இயக்குனர் மிஷ்கினின் சீடன் ஜேபி ஒரு கதையை உருவாக்கி அதற்கு சிறப்பாக திரைக்கதை வடிவமைத்து இயக்கியிருக்கிறார்.
எம்எல்ஏ பாக்யராஜின் அடியாளாக வரும் படத்தின் நாயகன் டேனியல் பாலாஜி மிக சிறப்பாக தன் நடிப்பை செதுக்கியிருக்கிறார். அவரைப் பற்றி நாம் எவ்வளவு பாராட்டினாலும் அவருக்கு போய் சேரப் போவதில்லை. ஆம், அவர் மறைந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஒரு நல்ல நடிகனை தமிழ் சினிமா இழந்து இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த கதாபாத்திரம். இவரை தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் வைத்து பார்க்க முடியவில்லை.
எம்எல்ஏ பாக்யராஜ் விபத்தில் இறந்து போன மகளை போஸ்ட் மார்ட்டம் செய்யக்கூடாது என்பதற்காக அவர் படும் பாடு, அவருடன் பயணிக்கும் டேனியல் பாலாஜி,
கடமை தவறாத டாக்டராக தான்ய ரவிச்சந்திரன். எதிர்கால லேடி சூப்பர் ஸ்டார் ஆனாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.
நெருப்பு. வீட்டில் சமையல் செய்யவும் உதவும்.. அதே சமயம் ஊரையும் எரித்து சாம்பலாக்கும். அது அவரவர் உபயோகிக்கும் முறையை பொறுத்தது. அதுபோல் கத்தி மருத்துவரிடம் இருக்கும்போது அது உயிரை காப்பாற்றும். ரவுடியிடம் இருக்கும் அது உயிரைக் கொல்லும் என்பது அனைவரும் அறிந்தது. அதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். மிஷ்கின் உதவியாளர் என்பதால் நமக்கு என்னவோ மிஷ்கின் படம் பார்ப்பது போல் தான் தெரிகிறது. மிஷ்கினின் தாக்கம் இயக்குனருக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பது படம் பார்க்கும் அனைவரும் உணரலாம்.
உடன் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள் என்பது இந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஜிப்ரானின் இசை படத்தின் ஓட்டத்தை இன்னும் வேகப்படுத்துகிறது. இயக்குனர் இன்னும் கொஞ்சம் படத்தில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த வருடத்தின் டாப் 10 இடத்தில் இடம் பிடித்திருக்கும் என்பது நமது எண்ணம்.
BP – 180 ; உடலும் உடலை சார்ந்ததும்
