அந்தரன் – திரை விமர்சனம்

 

இன்றைய தமிழ் சினிமாவில் க்ரைம் த்ரில்லர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் ‘அந்தரன்’ அந்த கூட்டத்தில் கொஞ்சம் தனித்து நிற்க முயற்சிக்கிறது. அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில், பிரஜின், இவானா வருண் நடிப்பில் வந்திருக்கும் படம்

கதை ரொம்ப சிம்பிள். ஆனா சுவாரஸ்யமானது. இவானா என்கிற பெண்ணை காதலிப்பவர்கள், கல்யாணம் பண்ண நினைப்பவர்கள் ஒவ்வொருத்தரா மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். ஒருத்தர் கொலை, இன்னொருத்தர் விபத்து, மூன்றாமவர் தற்கொலை. இது தற்செயலா? இல்ல சதியா? இவானாவோட அப்பா ஜாதி வெறியில் இதை செய்கிறாரா? என்கிற சந்தேகம் வருகிறது.

- Advertisement -

இந்த கேஸ் போலீஸ் அதிகாரி பிரஜின் கைக்கு வருது. விசாரிக்க போகிற இடத்தில், அவரே இவானா மேல காதல் வயப்படுகிறார். இவானாவை கல்யாணம் பண்ண நினைக்கிற பிரஜினுக்கும் அதே ஆபத்து வருமா? இந்த தொடர் மரணங்களுக்கு பின்னால் இருப்பது யார்? இதுதான் ‘அந்தரன்’.

சஸ்பென்ஸ் கையாண்ட விதம்

இயக்குநர் சந்தோஷ் ராவணனுக்கு தெரிந்திருக்கிறது த்ரில்லர் எப்படி எடுக்கணும்னு. முதல் காட்சியிலிருந்தே ஒரு பதற்றத்தை உருவாக்கி விடுகிறார். “இவானாவை கல்யாணம் பண்ண போறவங்க செத்துர்றாங்க. பிரஜின் கல்யாணம் பண்ணா அவருக்கும் அதே கதியா?” என்கிற கேள்வி படம் முழுக்க ஓடுகிறது. க்ளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸை உடையாமல் கொண்டு போனது பெரிய பிளஸ்.

பிரஜினுக்கு போலீஸ் வேடம் அட்டகாசமாக பொருந்துகிறது. டிப்-டாப் இன்ஸ்பெக்டராக, அதே சமயம் காதலில் விழும் சாதாரண மனிதனாக இரண்டு ஷேடையும் நன்றாக செய்திருக்கிறார். இவானா வருண் அழகிலும் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். பயம், குழப்பம், காதல் என எல்லா உணர்வுகளையும் கண்களில் காட்டுகிறார். அனுபமா குமார், ஆதிரன், பத்மன் போன்ற துணை நடிகர்களும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கிஷோரின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். இரவு காட்சிகள், மழை, மர்மமான லொகேஷன்கள் எல்லாம் ‘கலர்ஃபுல்’லாகவும் அதே சமயம் த்ரில்லர் மூடோடும் இருக்கிறது. ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.

 

படம் முழுக்க விறுவிறுப்பாக போனாலும், சில இடங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சில திருப்பங்கள் ‘எதிர்பார்த்ததுதான்’ என்கிற உணர்வை தருகின்றன. கதையில் இன்னும் கொஞ்சம் அடர்த்தி இருந்திருக்கலாம். சில கதாபாத்திரங்களுக்கு போதுமான அழுத்தம் இல்லை

 

. பெரிய ஹீரோக்கள் இல்லை, பிரம்மாண்டம் இல்லை. ஆனால் ஒரு நல்ல கதை இருக்கிறது. பிரஜினின் கச்சிதமான நடிப்பு, இவானாவின் இயல்பான உணர்வுகள், இறுக்கமான திரைக்கதை என படம் பார்க்க வைக்கிறது.