தி டார்க் ஹெவன் – விமர்சனம்

 

மேக்கரை என்ற மலைக்கிராமம். 7 வருடத்திற்கு ஒரு முறை, ஜூன் மாதத்தில் மட்டும் அங்கு ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். ஊர் மக்களோ பல வருடம் முன் இறந்த ஒரு இளம்பெண்ணின் சாபம் தான் இதற்கு காரணம் என்கிறார்கள். வேறு சிலரோ, ஊரை சுற்றி ஒரு சைக்கோ கொலையாளி இருக்கிறான் என்கிறார்கள். உண்மையில் நடப்பது சாபமா? கொலையா? என்பதை கண்டுபிடிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் சித்து

இன்ஸ்பெக்டராக சித்து கம்பீரமாக இருக்கிறார். அதிகம் பேசாமல், இறுக்கமான முகத்துடன் விசாரணை செய்யும் அவரது நடிப்பு கதைக்கு பெரிய பலம்.

- Advertisement -

கணவனை இழந்து தனியாக வாழும் பெண்ணாக வரும் ரித்விகா தான் படத்தின் சர்ப்ரைஸ். கிளைமாக்சில் அவர் கொடுக்கும் திருப்பம் யாரும் எதிர்பார்க்காதது. மேலும் தர்ஷிகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

மணிகண்டன் பி.கே-வின் ஒளிப்பதிவு தான் படத்தின் உயிர். காடு, மலை, இருட்டு, பெய்யும் மழை என ஒவ்வொரு காட்சியிலும் ஒரு திகில் உணர்வை கொண்டு வருகிறார். இரவு காட்சிகள் உண்மையிலேயே பயமுறுத்துகின்றன. சக்தி பாலாஜியின் பின்னணி இசை அந்த பயத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.

இயக்குனர் பாலாஜி, கடைசி வரை கொலையாளி யார் என்பதை காட்டாமல் சஸ்பென்ஸை காப்பாற்றியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். சில காட்சிகள் கொஞ்சம் நீளமாக தெரிந்தாலும், திகில் பட ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் தராது.

மொத்தத்தில்: தி டார்க் ஹெவன் – சாபமா, சைக்கோவா என்ற கேள்வியுடன் கடைசி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் ஒரு நல்ல திகில் த்ரில்லர்.