
நல்ல படம் – விமர்சனம்
மது ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி ஆட்டிப்படைக்கிறது, மதுவிலக்கு வந்தால் அந்த மனிதனின் நிலை என்னவாகும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் தான் ‘நல்ல படம்
படம் என்ன சொல்ல வருகிறது
எப்போதும் போதையிலேயே மிதக்கும் ஹரிஷ், குடிப்பவர்களுக்காக ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். குடியை தன் வாழ்க்கையாக வாழும் அவருக்கு திடீரென அரசு மதுவிலக்கை அமல்படுத்துகிறது. மதுவை இழந்த பிறகு ஹரிஷின் வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றங்கள், போராட்டங்கள், அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை சுவாரசியமாக சொல்கிறது திரைக்கதை.
ஹரிஷ் குடிகாரனாக, காதலனாக, ஆக்ஷன் ஹீரோவாக என மூன்று பரிமாணங்களிலும் தன்னால் முடிந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக மது கிடைக்காத தவிப்பை காட்டும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்பில் அழுத்தம் கொடுத்திருந்தால் கதாபாத்திரம் இன்னும் மனதில் நிற்கும்.
அவரை காதலிக்கும் நாயகியாக தனலட்சுமி காதல் காட்சிகளில் அழகு சேர்க்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நண்பர்களாக வரும் கல்கி ராஜா மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரும் காமெடி மற்றும் எமோஷனல் காட்சிகளில் படத்திற்கு பெரிய பலம்.
ஜெ.ஹாரிஸின் ஒளிப்பதிவு ராஜபாளையம் பகுதியின் அழகை கண்முன் காட்டுகிறது. சஜிஷ் நாசேவியரின் இசை காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.
இயக்குனர் பிரபுராம், மது என்ற சீரியஸான விஷயத்தை காமெடி, காதல், ஆக்ஷன் என பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல முயன்றிருக்கிறார். முதல் பாதி ஜாலியாக சென்றாலும், இரண்டாம் பாதியில் மதுவிலக்கு போராட்ட காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
நல்ல படம் – மதுவை மையமாக வைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு வித்தியாசமான முயற்சி.
