சல்லியர்கள் ; விமர்சனம்

 

சத்தியதேவ், கருணாஸ், திருமுருகன், ஜானகி பிரியா மற்றும் பல நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளிவந்திருக்கும் படம் சல்லியர்கள்.

படம் என்ன சொல்ல வருகிறது ? நாம் இலங்கையில் பார்த்த வன்முறை காட்சிகள், தாய் மண்ணிற்காக போராடும் போராளிகள், அந்தப் போராளிகளை போர்க்களத்தில் அடிபடும் நேரத்தில் அவர்களை காப்பாற்றும் மருத்துவரை சல்லியர்கள் என்று அழைப்பார்கள். அவர்களின் வரலாற்று சுவடுகளை சொல்ல வருகிறது இந்த திரைப்படம்.

- Advertisement -

இலங்கை நாட்டில் தாய் மண்ணிற்காக போராடும் போராளிகளை நேரடியாக அவர்கள் இயக்கத்தின் பெயரை சொல்லாமல் வேறு ஒரு பெயரில் அவர்களை அழைத்து அவர்கள் தாய் மண்ணிற்கு போராடும் போர்க்களத்தில் நடக்கும் விஷயங்களை நமக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கிட்டு.

குண்டடி படும் போராளிகளை காப்பாற்றும் சல்லியர்கள் அவர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல.. அவர்களும் போராளிகள்.. மண்ணுக்கடியில் குடில் அமைத்து மெடிக்கல் பங்கர் என்று பெயர் வைத்து போராளிகளை அவசர சிகிச்சைக்காக அவர்களை காப்பாற்றும் சல்லியர்களின் வாழ்வியல் இந்தப் போராட்ட களத்தில் மிக முக்கியம்.

அவர்கள் நினைத்தால் மருத்துவம் முடித்தவுடன் வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் தங்கள் பணியை தொடரலாம். ஆனால் தாய் மண்ணுக்கு போராடும் போராளிகளை காப்பாற்றும் எண்ணத்தில் இவர்கள் போராட்டம்.

கருணாஸ்.. இவர் போராளிகளின் கூட்டாளி.. போராளிகளின் மருத்துவ உதவிக்கு தேவைப்படும் ரத்தத்தை கிராம மக்களிடம் பெற்று போராளிகளுக்கு உதவி செய்யும் மனிதர். இப்படி செய்யும் நேரத்தில் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இவரும் இவரின் குடும்பத்தினரும் அதில் தப்பித்த நாயகி மருத்துவராகி போராளிகளை காப்பாற்றும் களத்தில் இருக்கிறார்.

மருத்துவராக வரும் இவர் தன் நடிப்பாற்றலால் படம் பார்க்கும் ரசிகனை   கட்டிப்போட்டு வைத்து விடுகிறார். பூமிக்கு அடியில் இருந்தாலும் மேலே வரும் சத்தம் செருப்பு சத்தமா, ராணுவத்தின் பூட்ஸ் சத்தமா என்று துல்லியமாக கணக்கிடக் கூடியவர்/ முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் விடுதலை வேட்கையின் வீரமங்கையாக தாய் மண்ணின் விடுதலைக்காக போராடும் முக பாவமே அவர் முகத்தில்.. நடிப்பில் சிறப்பு செய்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரம் அறிந்து சிறப்பு செய்திருக்கிறார்கள்.

ஒரு குறைந்த முதலீட்டில் ஒரு சிறந்த படத்தை அதுவும் நடந்த விஷயத்தை வேறொரு பாணியில் நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் கிட்டு. அவருக்கு நமது வாழ்த்துக்கள்.