
மை லார்ட் ; விமர்சனம்
சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மை லார்ட். படம் என்ன சொல்ல வருகிறது ?
சில வருடங்களுக்கு முன்பு கிட்னி திருட்டு பற்றி நம் பத்திரிகைகளில் படித்திருப்போம். அதை மையமாக வைத்து வெளி வந்திருக்கிறது இந்த படம்.
தமிழகத்து தென்கோடியில் வசித்து வரும் சசிகுமார் பட்டாசு தொழிற்சாலையில் இறந்ததாக சர்டிபிகேட் எடுத்து அந்த ஊரின் கவுன்சிலர் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்கிறார். தனக்கும் தன் மனைவிக்கும் ஒரு ஸ்மார்ட் கார்டு எடுக்க முடியாமல் அவதிப்படும் சசிகுமாருக்கு உதவுகிறார் பத்திரிகையாளர் குரு சோமசுந்தரம்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஆஷா சரத் கிட்னி ஃபெயிலியர் ஆகி மாற்று அறுவை சிகிச்சைக்கு கிட்னியை தேடிக் கொண்டிருக்க, சசிகுமாரின் கிட்னி அவருக்கு பொருந்த, தான் சொல்வதை செய்தால் கிட்னி தருவதாக சசிகுமார் உறுதி அளிக்கிறார். பிறகு நடப்பது என்ன ? பாருங்கள் வெண்திரையில்..
ராஜூ முருகன் படம் என்றால் ஏதாவது அரசியல், சமூக சிந்தனை கண்டிப்பாக இருக்கும். அந்த வரிசையில் தான் இந்த படமும் வந்திருக்கிறது.
தன் இறப்புச் சான்றிதழை வைத்துக்கொண்டு தான் இறக்கப் போவதாக பிரச்சனை செய்து கொண்டிருக்கும் சசிகுமார் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். கிட்னி கேட்கும் மத்திய அமைச்சரின் உதவியாளரிடம் தான் நினைத்த காரியத்தை சாதித்துக் கொண்டு தன் மனைவிக்கு ஒரு கிட்னி இல்லையே அதை கண்டுபிடித்து தரும்படி அலம்பல் செய்யும் சசிகுமார் மிக அருமை.
நாயகி சைத்ரா கன்னட வரவு என்றாலும் நம் தமிழகத்தின் கிராமத்து முகத்தை நமக்கு காண்பிக்கிறார். ஜாடிக்கேத்த மூடி போல் சசிக்குமாருக்கு இணையாக இவரின் நடிப்பு சிறப்பு.
குரு சோமசுந்தரம்.. இவரைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. எந்த கதாபாத்திரமோ அந்த கதாபாத்திரம் மட்டுமே அவர் முகத்தில் தெரியும். அதை இந்தப் படத்திலும் செய்து இருக்கிறார்.
சமூகப் பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் ராஜூ முருகன் படத்தில் அரசியல் அவலங்கள், நிகழ்கால நிஜங்கள், கிட்னி திருட்டு என பல விஷயங்களை சிறப்பாக எடுத்துக் காட்டி இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு படத்தின் ஓட்டம் சிறிது தடை படுகிறது என்பது உண்மை. அதற்கு காரணம் திரைக்கதையில் இருக்கும் சில லாஜிக் ஓட்டைகளை அடைக்காமல் போனதுதான். இருந்தாலும் நமது வாழ்த்துக்கள்..
