
காந்தா – விமர்சனம்
துல்கர் சல்மான், ராணா, சமுத்திரகனி, பாக்கியஸ்ரீ போர்ஸ், காயத்ரி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் காந்தா. படம் என்ன சொல்ல வருகிறது ?
ஒரு மிகப்பெரிய இயக்குனர். ஒரு மிகப்பெரிய நடிகனின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறார். நடிகனின் வளர்ச்சி அபரிதமாக வளர, இருவருக்கும் ஈகோ உருவாகிறது. இதில் இவர்கள் படம் தடைப்பட பலவித சிக்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. இயக்குனராக சமுத்திரகனி, நாயகனாக துல்கர்.. இவர்களில் படத்தை இயக்குவது இயக்குனர் சமுத்திரகனியா? அல்லது நாயகன் துல்கர் சல்மானா? என்ற போட்டியில் படபிடிப்பு ஆரம்பிக்கிறது.
கதாநாயகி இயக்குனரின் சொல்படியே நடக்க, நாயகன் அவர் இஷ்டத்திற்கு நடிக்க, பிறகு நாயகி மீது நாயகன் காதல் வயப்பட அதனால் நாயகி கர்ப்பமடைய கிளைமாக்ஸ் காட்சியில் நாயகி நடிக்க மாட்டேன் என்று சொல்கிறார். அன்று இரவு படப்பிடிப்பு தளத்தில் நாயகி சுடப்பட்டு இறக்கிறார். கொன்றது யார்? இதுவே காந்தா படத்தின் கதை.
துல்கர் சல்மான் கதாபாத்திரத்தின் பெயர் டி.கே மகாதேவன். 1960 காலகட்டத்தில் நடிகர்கள் எப்படி இருந்தார்களோ அதேபோல் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் துல்கர் சல்மான் நடிப்பில் அந்த காலத்து நடிகர்களை ஞாபகப்படுத்தினாலும் அந்த நடிப்பை மிகைப்படுத்தாமல் மிக அழகாக மக்கள் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக செய்து இருக்கிறார். இவரின் புன்சிரிப்பு “புன்னகை மன்னன்” என்று நாம் அழைக்கலாம். இவருக்கு நடிப்புச் சக்கரவர்த்தி என்று பட்டம் படத்தில். ஆனால் நாம் கொடுப்பதோ “நடிப்பு அரக்கன்” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கதாபாத்திரத்தை உள்வாங்கி அதை வெளிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே.
இவருக்கும் இயக்குனருக்கும் இருக்கும் ஒரு “ஈகோ”வை எந்த ஒரு சமரசமும் இன்றி எதையும் மிகைப்படுத்தாமல் மிக சிறப்பாக செய்திருக்கிறார். நாயகியை இவர் கண்களால் வசியம் செய்வது மிக அழகு. அதற்கு இவருக்கு “காதல் மன்னன்” என்று பட்டம் கூட கொடுக்கலாம். உடையிலும் சரி, உடல் மொழியிலும் சரி, நடனத்திலும் சரி.. அந்த காலத்து ஞாபகத்தை படம் பார்க்கும் ரசிகனுக்கு உணர்த்துகிறார்.
நடிகனாக இருந்து கொண்டு கேமரா கோணத்தை மாற்ற சொல்வதும் காட்சியை மாற்ற சொல்வதும் தான் ஒரு உச்ச நடிகன் என்பதை சொல்லாமல் சொல்கிறார். ஒரு நடிகர் படத்தில் நடிகன் கதாபாத்திரத்தை ஏற்று செய்வது மிக கடினம். ஏனென்றால் அதில் ஒரு செயற்கை தனம் தெரியும். ஒரு மிகைப்படுத்தல் தெரியும். அந்த சாயல் எதுவும் இல்லாமல் இந்த கதாபாத்திரத்தை துல்கர் மிக லாவகமாக கையாண்டு இருக்கிறார்..
அடுத்து சமுத்திரகனி. இவர்தான் படத்தின் இரண்டாம் நாயகன். தான் வளர்த்த நடிகன் தன் முன்னால் உயர்வது பொறுக்காமல் அவனை சிறைக்கு அனுப்பி அவன் இமேஜை சேதப்படுத்த எடுக்கும் முயற்சி ஒரு இயக்குனருக்கு உள்ள வரட்டு கவுரவம் பொறாமையும் இப்படி பலவித பரிமாணங்கள் இவருக்குள். இந்த படத்தில் இவர் இதுவரை எந்த படத்திலும் நடித்திராத புதிய பாணியை இந்தப் படத்துக்கு கையாண்டிருக்கிறார். இறுதிக் கட்சியில் படத்தின் நாயகனாக இவர் உயர்ந்து விடுகிறார்.
அடுத்து ராணா,, கொலையை விசாரிக்க வரும் விசாரணை அதிகாரி. இவரின் விசாரணை பாணி மிகச் சிறப்பு. பாகுபலி ராணாவும் காந்தா ரானாவும் ஒரே நடிகர் தான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு புதுவித தொனியில் தன் நடிப்பை வழங்கி இருக்கிறார்.
நாயகி இவரைப் பருவ மங்கை என்று சொல்வதா ? அல்லது பளிங்கு சிலை என்று சொல்வதா ? உலக அழகிகள் அனைவரையும் ஒன்றாக திரட்டி செய்தது போல் இருக்கிறார். இவர் அழகு மட்டும் இல்லை.. நடிப்பும் பல முன்னணி கதாநாயகிகள் ஒன்று சேர்ந்து நடிப்பது போல் இவர் நடிப்பு, இவரின் கண்கள் ஆயிரம் கதைகளை நமக்கு சொல்ல வருகிறது, எதிர்காலம் இவருக்கு பல விருதுகளை வழங்க காத்திருக்கும் என்பது ஐயமில்லை,
படத்தின் இயக்குனர் ஒரு கிரைம் கதை எடுத்துக் கொண்டாலும் அந்தக் கொலையின் காலகட்டம், கொலைக்கான காரணம், அதற்கான முன்னோட்டம் என மிகச் சிறப்பாக காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
இடைவேளை வரை மிக விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி சென்றாலும் இடைவேளைக்குப் பிறகு யார் கொலையாளி என்ற கேள்விகளுக்கு பலர் மீது சந்தேக புள்ளியை வைத்து இறுதியில் இவர் சொல்லும் கொலையாளி யார் என்பதை நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவுக்கு திரைக்கதை ஓட்டத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்து இயக்கி இருக்கிறார்.
அடுத்து நமது பாராட்டுக்குரியவர் ஒளிப்பதிவாளர். இவரின் ஒளிப்பதிவு மிக அழகு. வெளிச்சத்தை வெளிச்சமாக தெரிவித்து அந்த வெளிச்சத்தை வெளிச்சம் இல்லாமல் படம் பிடித்து, பார்க்கும் ரசிகன் கைதட்டும் அளவுக்கு இவரின் ஒளிப்பதிவு. அதற்கு ஏற்றார் போல் பின்னணி இசை மிக அருமை.
படத்தின் அரங்கமைப்பை வடிவமைத்த கலை இயக்குனருக்கு பாராட்டுக்கள்..
காந்தா – இவள் சாதிக்கப் பிறந்தவள்
