
ஹாட்ஸ்பாட் டூ மச் ; விமர்சனம்
விக்னேஷ் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், எம்எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, பிரிகிடா, அஸ்வின், ரக்ஷன், ஆதித்யா பாஸ்கர், பாலாமணி மார்பன், பவானி ஸ்ரீ, சஞ்சனா திவாரி, ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கி இருக்கும் படம். ஹாட்ஸ்பாட் டூ மச். படம் என்ன சொல்ல வருகிறது ?
ஹாட்ஸ்பாட் ஒன்று மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. படத்தின் கதைக்களம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதை மனதில் வைத்து ஹாட்ஸ்பாட் டூ மச் படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக். இதில் என்ன சொல்ல வருகிறார். ?
இந்தப் படத்தில் மொத்தம் மூன்று கதைகள்
முதல் கதை
இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம். அந்த யுத்தத்திற்கு முடிவு சொல்கிறார் எம்.எஸ் பாஸ்கர்.
கதை இரண்டு
டைம் மெஷின் காதல் கதை.. பல அரசியல் சம்பவங்கள்.. காதல்.. தையல் மெஷின் மூலம் காதலி கிடைத்தும் அந்தக் காதலி தனக்கு மகள் என்ற உறவால் தவிக்கும் காதலின் காதல் தந்தை.. இறுதியில் ஒரு டுவிஸ்ட்.
மூன்றாவது கதை
மாடர்ன் உலகத்தில் மங்கைகளின் அரைகுறை ஆடைகளின் மோகம். பெரியவர்கள் முன் அவர்கள் திமிர். அந்த திமிரை அடக்கும் தம்பி ராமையா.
இந்த மூன்று கதைகளும் எதற்கு சொல்லப்படுகிறது என்றால் போன படத்தில் தயாரிப்பாளரின் மகளை, கதை சொல்ல வரும் நாயகன் காதலிப்பதால் அந்த காதல் ஜெயிப்பதற்காக கதையில் சில சுவாரசியங்களை சேர்த்து காதலியை கைப்பிடிப்பார். ஆனால் இதில் அந்தக் காதலியை ஒரு பெண் காதலிப்பதால் அதாவது தன் மனைவி ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்தப் பெண்ணை அவருக்கு திருமணம் செய்ய மாமனார் ஆகிய தயாரிப்பாளரிடம் ப்ரியா பவானி சங்கர் கதை சொல்கிறார். புதுமை என்ற பெயரில் கலாச்சார சீர்கேட்டை தூக்கி பிடிக்கிறது இந்த ஹாட்ஸ்பாட் டூ மச்.
முதல் கதையில் ரசிகர்களின் போராட்டம்.. எந்த ஒரு நட்சத்திரமும் ரசிகனை தூண்டுவதில்லை. அந்த ரசிகன் அந்த நட்சத்திரத்தின் மீது வைத்திருக்கும் அன்பால் செய்யும் செயல்கள் தான்.. ரசிகன் ஒரு நட்சத்திரத்தின் மீது ஈர்ப்பு என்றால் தன் எண்ணங்கள், தான் செய்ய நினைக்கும் ஹீரோயிசம், அதை தன்னால் செய்ய முடியவில்லை என்றால் அதை செய்யும் நட்சத்திரத்திற்கு ரசிகன் ஆகிறான். அது ஒரு பக்கம் வரம்பு மீறியதாக இருந்தாலும் அதற்காக எம்.எஸ் பாஸ்கர் செய்யும் செயல் சினிமாவுக்கான சினிமா.
பல வருடங்களாக ஒரு ஏ ஜோக் அனைவரும் அறிந்தது.
“உங்களுக்கு குழந்தை பிறந்த உடனே நீங்க செத்துடுவீங்கன்னு சொன்னாங்க.. குழந்தை பிறந்தும் உயிரோடு இருக்கிறீர்கள்.. எப்படி ?
அதான் பக்கத்து வீட்டுக்காரன் செத்துப் போயிட்டானே” இந்த ஜோக்கை மையமாக வைத்து டைம் மெஷின் உடன் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
தம்பி ராமையா மகள் மேல்நாட்டில் படித்து அரைகுறை ஆடையுடன் தன் முதலாளி முன் வருவது பிடிக்காத தம்பி ராமையா தன் மகளின் பிறந்த நாளின் போது கிழிந்த பனியன் உடன் பட்டாபட்டி டிராயருடன் வருவது சினிமாவின் சினிமாத்தனம்.
புதுமை என்ற பெயரில் எதை சொன்னாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது இயக்குனர் எண்ணம் என்று தெரிகிறது. ஹாட்ஸ்பாட் ஒன்றில் இயக்குனர் சொல்லும் கதைகளில் ஒரு பக்கம் எதார்த்தமும் இன்னொரு பக்கம் நியாயமும் இருந்ததால் மக்கள் அதை கொண்டாடினார்கள். அந்த கொண்டாட்டத்தை இந்த ஹாட்ஸ்பாட் 2 மச் இழக்கிறது .
ஹாட்ஸ்பாட் டூ மச் – குண்டு சட்டிக்குள் குதிரை
