டி.என்.ஏ (DNA) – விமர்சனம்

அதர்வாவின் மனைவி நிமிஷா சஜயன் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கடத்தப்பட்டு வேறு ஒரு குழந்தை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. இதை அறிந்து கொள்ளும் நிமிஷா, இது தனது குழந்தை இல்லை என்று கூறுகிறார்.

ஆனால், மருத்துவமனை ஆவணங்கள் அனைத்தும் அது நிமிஷா குழந்தை தான் என்பதை உறுதிப்படுத்த, நிமிஷா மட்டும் தனது குழந்தை இல்லை, என்பதில் உறுதியாக இருக்கிறார்.  மனைவி சொல்வதன் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் அதர்வா, தனது குழந்தையை மீட்டாரா? குழந்தை கடத்தலின் பின்னணி என்ன? என்பது தான் மீதிக்கதை.

ஆனந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதர்வா ஒவ்வொரு கடினமான சூழல்களிலும் அதை நேர்த்தியான உணர்வு வெளிப்பாட்டின் மூலம் எதிர்கொண்டு ரசிகர்களை வியக்க வைக்கிறார். அவரது கதாபாத்திர தெரிவு அற்புதம் என சொல்ல வைக்கிறது.

- Advertisement -

திவ்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை நிமிஷா சஜயனும் தன் பங்கிற்கு நன்றாக நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
இவர்கள் இருவரையும் கடந்து பணியிலிருந்து விரைவில் ஓய்வு பெறும் காவலராக அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் நடிகர் பாலாஜி சக்திவேல்.

விறுவிறுப்பான கதைக்கு ஒளிப்பதிவும் , பின்னணியிசையும்  மிகப் பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

பச்சிளங்குழந்தைகள் கடத்தல் எனும் நுட்பமான குற்ற சம்பவத்தை மையப்படுத்தியும்,  தாய்க்கும், சேய்க்கும் இடையேயான தொப்புள் கொடி உறவின் ஒரு நிமிட ஸ்பரிசம் – பந்தம் குறித்தும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

DNA என்றால் வைத்திய ரீதியாக மரபணு பரிசோதனை என்பதால்.. அதனையும் இயக்குநர் கதையில் பொருத்தமாக இணைத்திருப்பதையும் ரசிக்கலாம்.

லாஜிக் மீறல்கள் இருந்தாலும் வெகு ஜன ரசிகர்களுக்கு சோர்வு தராமல் அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் உச்சகட்ட காட்சியில் தாயையும், பிள்ளையையும் ஒன்று சேர்க்க இயற்கையுடன் கூடிய ஆன்மீக உணர்வை கையாண்டிருப்பது ரசிக்க வைக்கிறது.